தேவ ரகசியங்கள் அடங்கியதா கோவில் கருவறை…

மனிதனுக்கு தலைதான் பிரதானம் என்பதுபோல் ஆலயங்கள் அனைத்துக்கும் பிரதானமாக இருப்பது கருவறை. சிறிய கோவில் அல்லது பெரிய கோவில்கள் எதுவாக இருந்தாலும் கருவறை மட்டும் இருளாக இருக்கும். இதற்கு பின்னால் உள்ள விஞ்ஞான உண்மையை நமது முன்னோர்கள் முன்பே கணித்திருந்தார்கள்.

ஆலயம் அமைக்கும் போதெல்லாம் முன்னோர்கள் கருவறையை  மிக கவனமாக கணித்தார்கள். முதலில் ஆலயங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்ததுமே அந்த இடத்தில் தானியங்களை விதைப்பார்கள். அவ்வாறு விதைக்கப்பட்ட தானியங்கள்  மூன்று நாட்களில் முளைத்தால் அந்த இடம் உத்தமம். அந்த இடத்தில் கருவறையை அமைத்தால் நல்ல சக்தியும் ஆற்றலும் கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சியுடன் அந்த இடத்தில் கருவறை அமைத்தார்கள். அதுவே தானியங்கள் விதைத்த 5 நாட்களில் முளைத்தால் அது மத்திமம். 5 நாட்களுக்கு பிறகு முளைத்தால் அதமம். இங்கு எங்குமே கருவறை அமைக்க மாட்டார்கள். காரணம் உத்தமமான இடத்தில் கருவறை அமைத்தால் பிரபஞ்ச சக்திகள் ஒன்று கூடி அருள்புரியும் தலமாக விளங்கும் என்பது அவர்களது கணிப்பாக இருந்தது.

அதையே விஞ்ஞானமும் இன்று உறுதி செய்திருக்கிறது. ஆலயங்களில் நுழைவதற்கு நான்கு புறமும் வாசல்கள் வைத்திருந்தாலும் கருவறைக்கு மட்டும் வாசல் வழி மட்டுமே இருக்கும். இந்த கருவறையின் அமைப்பை ஆறு பாகங்களாக பிரித்திருந்தார்கள். அதிஷ்டானம், பாதம், மஞ்சம், கண்டம், பண்டிகை, ஸ்தூபி  போன்றவையே ஆகும். மூலவர் சிலை வைக்கும் இடமே அதிஷ்டானம் என்றழைக்கப்படுகிறது. இதையே பீடம் என்றும் அழைப்பார்கள்.

கருவறை பகுதியானது சதுரம், வட்டம், முக்கோணம் என்னும் 3 விதமான அமைப்புகளை மட்டுமே கொண்டிருக்கும். ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு உலகத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகின்றன. நம் நாட்டில் எல்லா ஆலயங்களுமே சதுர அமைப்பை கொண்டிருக்கின்றன. காரணம் சதுர அமைப்பு என்பது  தேவலோகத்துடன் தொடர்பு கொண்டது.

கருவறையின் விமானத்தில் உள்ள கலசம் வழியாக சூரியக்கதிர்களின் அலையானது கருவறையில் உள்ள மூலவர் சிலைக்கு கடத்தப்படுகிறது. அதேபோன்று மூலவர் சிலைக்கு அடியில் வைக்கப்பட்ட யந்திரம் பூமிக்கு அடியில் இருக்கும் ஆற்றல்களை ஈர்த்து மூலவருக்கு அனுப்புகிறது. அதனால்தான் மூலவரிடம் ஆற்றல்கள் நிறைந்து காணப்படுகிறது.

ஆலயங்களில் கருவறையில் இருளைப் போக்க ஒரே ஒரு விளக்கை மட்டும் தொங்கவிட்டிருப்பார்கள். அல்லது கருவறைக்கு பின்பு செயற்கையாக ஒரு ஒளி வட்டத்தை ஏற்படுத்துவார்கள். இவைதான் மூலவரிடம் இருந்து இறை ஆற்றலை ஆலயம் முழுவதும் பரப்புகிறது. இந்த ஆற்றல் அதிகம் பெறவேண்டுமானால் அதிகாலை பிரம்ம முகூர்த்த வழிபாடு நல்லது.

அதனால் தான் நமது முன்னோர்கள் அதிகாலை வழிபாடு ஆற்றல் தரும் என்று சொன்னார்கள். ஆற்றல் அதிகரிக்க ஆலய வழிபாடு அவசியம் என்பதை உணர்ந்து இனிமேலாவது அவ்வப்போது ஆலய தரிசனம் செய்யுங்கள்.

Sharing is caring!