நடப்பது கலிகாலம் ஆயிற்றே…

அரசன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? பழி பாவத்துக்கு அஞ்சி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குரிய தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். அரசனின் கண்களுக்கு  நீதி மட்டும்தான் தெரிய வேண்டும். அந்த நீதியானது யாரை பாதித்தாலும் கவலையுறக்கூடாது. மகாபாரத நிகழ்வு ஒன்றை இங்கு பார்ப்போம்.

நீதியை மட்டுமே காணும் குணத்தைக் கொண்டிருந்தவன் பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன். கிருஷ்ணர் துரியோதனிடம் தூது செல்வதற்கு முன்பு பாண்டவர்களின் கருத்தை கேட்டறிந்தார். தர்மருக்கு யுத்தம் செய்வதில் விருப்பமில்லை. அதைக் கிருஷ்ணரிடம் தெரிவித்துவிட்டார். பீமன், அர்ஜூனன், நகுலன் மூவருமே யுத்தம் செய்வதில் உறுதியாக இருந்தார்கள். அதைக் கிருஷ்ணரிடம் தெரிவித்தும் விட்டார்கள். சகாதேவன் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான்.

கிருஷ்ணர் சகாதேவனைப் பார்த்தார். ”நீ ஒன்றுமே சொல்லவில்லையே சகாதேவா” என்று கேட்டார்.  சகாதேவன் அனைத்தும் அறிந்தவனாயிற்றே… கிருஷ்ணரின் விருப்பப்படிதான் எல்லாம் நிகழ்கிறது என்பதை அறிந்தவனாயிற்றே. ”இது என்ன கேள்வி கிருஷ்ணா.. உன்னுடைய கருத்து எதுவோ, உன் விருப்பம் எதுவோ அப்படியே செய். அதுதான் என்னுடைய கருத்தும்” என்றான்.   சகாதேவன் பதிலிலிருந்தே கிருஷ்ணர் புரிந்துகொண்டார். தாம் போருக்கு முயற்சி செய்வதை சகாதேவன் உணர்ந்துகொண்டான் என்பதை.

திரெளபதி  போருக்கு பிறகு  தங்களது வெற்றிக்குப் பிறகு தான் அவிழ்ந்த கூந்தலை முடிப்பேன் என்று சபதம் பூண்டிருந்தாள். அதற்கு உதவுவதாக கிருஷ்ணர் வாக்களித்தபிறகு போரை ஏற்பாடு செய்யாமல் எப்படி இருக்க முடியும்? இதையெல்லாம் நினைத்தாலும் கிருஷ்ணன் சகாதேவனிடம் ”பாரதப்போர் நடக்காமல் இருக்க ஏதேனும் வழி இருக்கா?”  என்று கேட்டார்.

”வழிகள் உண்டு கண்ணா. ஆனால் அவையெல்லாம் நடைபெறுமா என்ன? கர்ணருக்கு முடிசூட்ட வேண்டும். கர்ணனுக்கு முடிசூட்டுவதற்கு முன்னால் அர்ஜூனனைக் கொல்ல வேண்டும். திரெளபதியின் கூந்தலை களைய வேண்டும்” என்றான்.

கர்ணன் பாண்டவர்களுக்கு தீங்கு செய்தாலும் தர்மர் போரை விரும்பாததால் கர்ணன் முடிசூடுவதை ஒப்புக்கொள்வார். துரியோதனனும் தன்னுடைய நண்பன் முடிசூட மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்வான். ஆனால் அர்ஜூனனின் பரமவிரோதி கர்ணன் என்பதால் அர்ஜூனன் இதற்கு எப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டான். அதனால் அர்ஜூனனை கொல்ல வேண்டும். போர் நடந்தால் தான் திரெளபதி கூந்தலை முடிப்பாள் எனில் அந்தக் கூந்தலையே களைய செய்தால் போர் அவசியமில்லை. இவையெல்லாம் நடக்குமா?” என்றான். அனைத்தும் அறிந்த கிருஷ்ணர் புன்னகைத்தார். கிருஷ்ணனின் மனதில் சகாதேவன் உயர்ந்துவிட்டான்.

நீதி, நேர்மை, தர்மம் என்று வரும்போது அதைத் தவறாமல் நடக்க நாமும் கற்றுக்கொள்ள வேண்டும். நடப்பது கலிகாலம் என்பதால் இறைவனின் அருளோடு தான் இத்தகைய மனப்பக்குவத்தைப் பெறமுடியும்.

Sharing is caring!