நந்தியே இல்லாமல் தனித்திருக்கும் சிவப்பெருமான்..

சிவாகமத்தை சிவப்பெருமானிடமிருந்து நேரடியாகப் பெற்று உலகத்துக்கு அருளியவர் நந்திதேவர். நந்தி சிவப்பெருமானிடம் பெற்ற உபதேசத்தை சனற் குமார் பெற்று இவரிடமிருந்து சத்திய ஞான தரிசினிகளும், இவர்களிடமிருந்து  பரஞ்சோதியாரும், இவரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றதாக கூறுகிறார்கள்.

சிவாலயங்களிலெல்லாமே நந்திபகவான் ஒரு காலை தூக்கியபடி லிங்கத்துக்கு முன்பு தரிசனம் தருவார். நந்தியைப் போலவே நாமும் ஒருமித்த கவனத்தை சிவனிடம் வைத்திருக்க வேண்டும். பிரதோஷக்காலங்களில் லிங்கத்துக்கும் நந்திக்கும் செய்யப்படும் அபிஷேகம் முக்கியத்துவம் பெற்றது. எல்லா சிவாலயங்களிலும் இருக்கும் நந்தி பகவான் ஒரே ஒரு சிவாலயத்தில் மட்டும் இல்லை. இங்கு லிங்கம் மட்டுமே காணப்படும் இந்தக் கோவில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகில் அமைந்துள்ளது. இத்தலத்தின் பெயர் பஞ்சவதி கபாலீஸ்வரர் மகாதேவ்.

நந்தி இல்லாததற்கு புராண கதை ஒன்று கூறுகிறார்கள். பிரம்மனுக்கும், சிவனுக்கும் ஒருமுறை வாக்குவாதம் நீண்டது. பிரம்மனின் நான்கு தலைகள் வேதங்களை ஓதியபடி இருக்க ஒரு தலை மட்டும் சிவபெருமானிடம் தர்க்கம் புரிந்து கொண்டிருந்தது. பிரம்மனின் வாக்குவாதத்தால் பெரும் கோபத்துக்கு ஆளான சிவப்பெருமான் தன்னிடம் தர்க்கம் புரிந்த பிரம்மாவின் ஒரு தலையை கொய்து எடுத்துவிட்டார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.

பிரம்மஹத்தி தோஷ பாவத்தைப் பெற்ற சிவப்பெருமான் அதற்கு பரிகாரம் தேடி பூலோகம் வந்தார். மூவுலகும் சுற்றினாலும் அவரது பாவத்துக்கு விமோசனம் கிடைக்கவில்லை. உலகம் சுற்றிய களைப்பில் சோமேஸ்வர் என்னும் இடத்தின் அருகே வந்து அமர்ந்திருந்தார். அப்போது பசு ஒன்று தன்னுடைய கன்றுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேரிட்டது.

கன்றுக்குட்டி ஒருவனை கொம்பால் குத்தி பிரம்மஹத்யா தோஷத்தைக் கொண்டிருந்தது. அதை நிவர்த்தி செய்ய பரிகாரம் சொல்லிக்கொண்டிருந்தது. அதைக் கவனித்த சிவபெருமான் கன்றும் பசுவும் செல்லும் திசையைப் பின்தொடர்ந்தார்.
பஞ்சவதி அருகில் வந்ததும் கோதாவரி ஆற்றில் பசுங்கன்று நீராடி தனது பிரம்மஹத்யா பாவத்தைப் போக்கிகொண்டது.

கன்றுக்குட்டியைத் தொடர்ந்து சிவப்பெருமானும் ஆற்றில் இறங்கி தன்னுடைய பிரம்மஹத்தி பாவத்தைப் போக்கி கொண்டார். பிறகு அருகே இருந்த மலையில் குடிகொண்டார். சிவனை கண்ட பசு அவர் பின்னாடியே சென்று அவர்முன்பு மண்டியிட்டு அமர்ந்தது. ஆனால் சிவப்பெருமான் பசுவை அமரவைக்க மறுத்துவிட்டார். தன்னை பிரம்ம ஹத்தி பாவத்திலிருந்து நீக்கியதால் பசு குருவுக்கு சமமானவர் என்று  கூறி விட்டார். இதனால் தான் நந்தி இல்லாத சிவத்தலமாக இருக்கிறது பஞ்சவதி கபாலீஸ்வரர் மகாதேவ் ஆலயம்.

Sharing is caring!