நமசிவாய என்னும் திருமந்திரத்தைப் பற்றிக்கொண்ட நாயனார்…

இளையான்குடி என்னும் நகரில் வேளாளர் மரபில் தோன்றினார் மாறனார். இவரது ஊர் பெயரை இணைத்தே இளையான்குடி மாறனார் என்று பின்னாளில் அழைக்கப்பட்டார். நிலபுலன்கள் அதிகம் பெற்று பெரிய நிலச்சுவான்தாரராக விளங்கினார். எந்நேரமும் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே  இருப்பார். மாறனாரின் மனைவியும் கணவருக்கேற்று சிவத்தொண்டு புரிவதில் ஈடுபாடு மிக்கவர்களாக இருந்தார். விருந்தோம்பல் குணம் கொண்ட இருவரும் சிவபக்தியிலும் சிறந்து விளங்கினார்கள்.

வீட்டுக்கு வரும் சிவனடியார்களை அன்போடு வீட்டுக்கு அழைத்து அன்பு பொங்க அமுது படைப்பார்கள். பலகையில் கோலமிட்டு அடியாரை அதில் அமரசெய்து பாதபூஜை செய்து வணங்கி அறுசுவை உணவோடு அமுது படைத்து மகிழ்வார்கள். இவரது இல்லத்தில் லஷ்மி தேவி நிரந்தரமாக  குடி கொண்டிருந்தாள் செல்வத்துக்கு குறையில்லாமல் போயிற்று. வறுமை நிலையில்லை. வரும் சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்த இவர்களது சிவத்தொண்டை உலகறியச் செய்ய விரும்பினார் சிவபெருமான்.

மாறனாரின் வீட்டில் சிறிது சிறிதாக செல்வ வளம் குறைய ஆரம்பித்தது. செல்வநிலை குறைந்த போதும் மனம் தளராத மாறனார் சிவனடியார்களை உபசரிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. கையிலிருந்த இருப்பெல்லாம் கரைந்தது. வீட்டில் இருந்த பொருள்களை விற்று சிவனடியார்களை உபசரித்தார். வீட்டிலிருந்த பொருள்களும் கரைய ஆரம்பித்தது. ஆனாலும் மாறனாரின் மனம் சிறிதும்  வருந்தவில்லை.

அடியார்களுக்கு அமுதூட்ட வழியில்லாமல் நிலத்தை குத்தகை எடுத்து விதை நெல் விதைத்திருந்தார். அன்றைய தினம் மழை கொட்டி தீர்த்தது பேய்மழையோ அடைமழையோ என்று சொல்லுமளவுக்கு கனமழை. ஊரையே அடித்துசெல்லும் அளவுக்கு மழைநீர் வெள்ளமென புரண்டது. நிலத்திலிருந்த பொருளெல்லாம் அடித்துசென்றது.

வயிறுபசி இருந்தாலும் எதுவும் இல்லையென்ற குறையை வெளிக்காட்டாமல் அன்று இரவு மாறனாரும் அவர்தம் மனைவியும் பட்டினி கிடந்தார்கள். அவர்களை சோதிக்க காலம் தாழ்த்தாமல் அன்று இரவே சிவபெருமான் சிவனடியார் வேடம் பூண்டு மழையில் தொப்பலாக நனைந்தபடி அவர்களது கதவை தட்டினார். வந்திருப்பது சிவனடியார் என்றதும் அகமகிழ்ந்த இருவரும் அவரை உபசரித்து கோலமிட்ட மனைப்பலகையில் அமரவைத்து பாதபூஜை செய்து உபசரித்தனர். ஆனால் அறுசுவையோடு அமுது படைக்க எதுவுமில்லையே என்று வருந்தினார்கள். கதறிய மாறனாரை அவரது மனைவி ஆசுவாசப்படுத்தினாள்.

தோட்டத்தில் நான் கீரை படைத்து வருகிறேன். நீங்கள் வயலுக்கு சென்று விதைத்த நெல்மணிகளை எடுத்து வாருங்கள். பக்குவமாக வறுத்து சோறாக்கி கீரை சேர்த்து படைக்கலாம் என்று யோசனை தெரிவித்தாள். புதையல் கண்டெடுத்தது போல் மகிழ்ச்சியில் திளைத்த மாறனார் கூடையை எடுத்து கொண்டு அடாத மழையில் ஓடினார்.

மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியதைப் பொருட்படுத்தாமல் நமசிவாய என்னும் மந்திரத்தை பற்றிக்கொண்டு விதை நெல்லை வாரி வந்தார். அடுப்பு எரிக்க விறகில்லாமல் இருக்கவே வீட்டின் தளத்தில் இருந்த கம்பை உருவினார்.  அவரது மனைவி ஈர நெல்லை வறுத்து பதமாக வறுத்து சோறாக்கி கீரை சமைத்தாள். இருவரும் மகிழ்ச்சி வெள்ளம் பெருக அடியாரை அமுதுண்ண அழைக்க சென்றார்கள்.

அவரது காலில் வீழ்ந்து நேரமானதற்கு மன்னிப்பு தெரிவித்து அமுதுண்ண அழைத்து அவரது பாதம் பணிந்தார்கள். கண் மூடி திறப்பதற்குள் அடியார் இருவரது கண்களில் இருந்து மறைந்துபோனார். மணி ஓசை நாதமென வீட்டுக்குள் பரவியது. சிவபெருமான் ரிஷபவாகனத்தில் தேவியுடன் காட்சி அளித்தார். அவரது அருளால் மனம் மகிழ்ந்து மெய்மறந்து நின்றனர்.

”தங்களை சோதிக்கவேயாம்  தங்களை வறுமையில் ஆழ்த்தி சோதனை செய்தோம். இனி வாழும் காலங்களில் அனைத்து செல்வங்களையும் பெற்று இன்புற்று சிவனடியார்களுக்கு தொண்டு செய்து  இறுதியில் கயிலாயம் வந்து சேருங்கள்” என்றார் சிவபெருமான். அவ்வாறே வாழ்ந்து சிவனடி சேர்ந்தார் இளையான்குடி மாறனார் நாயனார். சிவாலயங்களில் ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தன்று இவருக்கு குருபூஜை நடந்து வருகிறது.

Sharing is caring!