நரகத்திலுள்ள முன்னோர்களை மீட்டெடுத்த பகீரத பிரயத்தனம்…?

உயர்ந்த இலட்சியத்தை அடைய, மனிதன்  பல சவால்களையும், தடைகளையும்  தாண்டி செல்ல வேண்டியிருக்கிறது. தோல்விகள் மனதை உலுக்கினாலும், விடாமுயற்சியைப் பின்பற்றி, இலக்கை அடைபவர்கள் மிகச் சிலர்தாம். ‛மிகவும் பகீரதப் பிரயத்தனமாய் தான் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்’ என்று சொல்லும்போதே, அந்தக் காரியம் எத்தனை பெரியதாக இருக்க வேண்டும். அந்த பகீரத பிரயத்தனத்தை செய்தவன் பகீரதன்.

பகீரதன், சூரியக் குலத்தைச் சேர்ந்தவன். தசரதனுக்கு முப்பாட்டன், கோசல நாட் டின் அரசன். பகீரதனுக்கு முந்தையை தலைமுறையின் மூத்தோரான, சகரன் கோசல நாட்டை ஆண்டு வந்தார். சகரனுக்கு  கேசனி, சுமதி என்று இரு மனைவியர்.

குழந்தை வரம் வேண்டி தவம் புரிந்த போது, பிருகு முனிவரின் ஆசியால் கேசனி, அஸமஞ்சன் என்ற மகனையும், சுமதி, ஒரு சுரைப் பிண்டத்தையும் பெற்றாள். சுரை வெடித்து, 60 ஆயிரம் பிள்ளைகள்  உருவானார்கள். அஸமஞ்சன் கொடுமையானவனாக இருந்ததால், சகரன் அவனை காட்டுக்குள் துரத்திவிட்டார்.

ஒருமுறை  சகரன்,  100 அசுவமேத யாகம் செய்ய விரும்பினார்.  அப்படி அசுவ மேதயாகம் செய்தால், இந்திரலோகத்தை ஆளும் தேவேந்திரன்  தன்னுடைய பதவியை யாகம் செய்தவருக்கு விட்டுத் தரவேண்டும் என்பது நியதி.

அசுவமேத யாகத்தில் விசேஷமான குதிரை பயன்படுத்தப்படும். அந்த குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ, அப்பகுதி முழுவதும், அதை அனுப்பிய அரசனின் ஆளுகைக்கு கீழ் வரும். அந்த அரசனை எதிர்க்க நினைப்போர், குதிரையை பிடித்து கட்டலாம். பின், அந்த அரசனுடன் போரிட்டு, அதில் வெற்றி பெற்றால், தன் நிலத்தை மீட்டெடுக்கலாம்.

இந்நிலையில், தேவேந்திரன், தன்னுடைய பதவியை விட்டுத்தர கூடாது என்னும் எண்ணத்தில், யாகத்துக்கு தேவையான  குதிரையை, சினம்   கொண்ட கபிலரின் ஆசிரமத்தில் கட்டி விட்டார்.

 சகரகுமாரர்கள் குதிரையைத் தேடி வந்த போது, கபிலரின் ஆசிரமத்தில் கட்டப்பட்ட குதிரையைக் கண்டதும், முனிவர் கவர்ந்து வந்திருக்கிறார் என்று நினைத்து, அவரை தாக்க முயற்சித்தார்கள்.

சினம் கொண்ட கபிலர்,  சகரனின் குமாரர்கள் அனைவரையும் எரித்து சாம்பலாக்கினார். செய்தி அறிந்த சகரன் தனது பேரனான அம்சு மானை அழைத்து, கபில முனிவரிடம் மன்னிப்பு வேண்டி யாகக் குதிரையை அழைத்துவா என்றார்.

அம்சுமான், கபிலமுனிவரிடம் வேண்டி அவர் அனுமதி யுடன் குதிரையை அழைத்து வந்தான். யாகம் வெற்றிகரமாக முடிந்தது. சகர னுக்கு மிகுந்த கவலை உண்டாயிற்று.

தமது குமாரர்கள், 60 ஆயிரம் பேரும் நரகத்தில் துன்புறுவதாக  கேள்விப்பட்டதிலிருந்து அவர்களை அத்தகைய பாவத்திலிருந்து எப்படியாவது மீட்டுவிட  வேண்டும் என்று எண்ணி, தனது பேரன் அம்சுமானிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தான்.

என்னுடைய காலத்துக்குள் இதை நான் செய்து முடிக்கிறேன்  என்ற அம்சுமானால், அவன் காலத்துக்குள் செய்ய முடியவில்லை. அவன் இறுதி காலத்தில், அவனது மகன் திலீபனிடம் பொறுப்பை ஒப்படைத்தான். அவனும் பெருமுயற்சி செய்தான்.

ஆனால் அவனாலும்  இயலாமல் போகவே அவனது மகனாக பகீரதனிடம் ஒப்படைத்தான். தலை முறை தலைமுறையாக நமது முன்னோர்களை நரகத்தில் இருந்து மீட்க நமது தந்தை வரை முயற்சித்துவிட்டார்கள்.
ஆனாலும் நரகத்திலிருக்கும் முன்னோர்களை மீட்க முடியவில்லை.

 ஆனால் நாம் நிச்சயம் அவர்களை மீட்டே ஆக வேண்டும் என்று நினைத்த பகீரதன், தன்னுடைய குலகுரு வசிஷ்டரிடம் சென்று ஆலோசனை கேட்டார். பிறகுதான் தொடங்கியது பகீரதப் பிரயத்தனம் என்று நாம் சொல்லும் கடினமான தவம்….  பகீரதன் தவம் புரிந்ததையும் தனது முன்னோர்களை நரகத்திலிருந்து மீட்டதையும், அவர்கள் விமோசனம் பெற்றதும் குறித்தும்  பாகம் இரண்டில் பார்க்கலாம்…

Sharing is caring!