நற்காரியங்கள் தடையின்றி நடக்க பெரியோரின் ஆசியிருந்தால் போதுமே

நல்ல காரியங்களே செய்வதாக இருந்தாலும் தொடங்கும்போது தெய்வத்தில் ஆசிர்வாதமும் பெரியவர்களின் ஆசிர்வாதமும் கண்டிப்பாக தேவை. மனமார்ந்த பெரியவர்களின் ஆசிர்வாதத்தால் காரியத்தில் தடைகள் வந்தாலும் பனி போல் விலகிவிடும் என்பதே உண்மை. புராண காலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை உதாரணமாக சொல்லலாம்.

மகாபாரத போரை தர்மர் விரும்பாவிட்டாலும் போருக்கான ஏற்பாடுகள் நடை பெற்றது. கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்தார். தர்மர்  நான் பீஷ்மரை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சென்றார். அங்கிருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை. துரியோதனனுடன் இருக்கும் பீஷ்மரை எதற்கு பார்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். தர்மரின்  அனுமதியில்லாமால் கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு தர்மரின் பின்னால் சென்றார்கள்.

தர்மர் ”பீஷ்மர் முன்னாடி போய் நின்று போர் தொடங்கவிருக்கிறது. என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள்” என்றான். பீஷ்மருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ”நீ என்னுடைய  ஆசியைப் பெறாமல் யுத்தம் செய்திருந்தால் ஒருவேளை நீ தோற்றுப்போக எண்ணியிருப்பேன். ஆனால் ஆசி பெறவந்ததால் உன்னை ஆசிர்வதிக்க வேண்டிய நிலையில் நிற்கிறேன்.  போரில் நீ வெற்றிப்பெற வாழ்த்துகிறேன்” என்றவர் தன்னை போரில் எப்படி கொல்வது என்ற வழிமுறையையும் கற்றுக் கொடுத்தார். அவரை வணங்கி விடைபெற்ற தருமர் மீண்டும் வேறு இடத்துக்கு சென்றார். நடந்ததைக் கவனித்துக்கொண்டிருந்த தர்மரின் சகோதரர்களும் கிருஷ்ணரும் தர்மரை தொடர்ந்து சென்றார்கள்.

அடுத்து தர்மர் துரோணாச்சாரியாரிடம் சென்றார். போருக்கான வேலைகள் தொடங்கிவிட்டன ”குருவே. என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள்” என்றார். தர்மம் இருக்கும் இடமெல்லாம் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பார். ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கும் இடம் தான் வெற்றி பெறும். கிருஷ்ணனோடு உங்கள் படை நிச்சயம் வெற்றி அடையும்” என்றவர் போரில் தன்னை அழிப்பது பற்றி தர்மருக்கு எடுத்து கூறீனார். அவரிடமும் ஆசி பெற்ற தர்மர் அடுத்ததாக கிருபாச்சாரியாரிடம் சென்றார். அவரிடம் ஆசியும் வாங்கிய பிறகு கிருபாச்சாரியார் ”போரில் என்னை அழிக்க முடியாது என்றாலும் வெற்றி உங்களுக்குத்தான் ” என்ற தகவலையும் கூறினார். அவரை வணங்கி விடைபெற்ற தர்மர் தனது இருப்பிடம் திரும்பினார்.

சகோதரர்கள் கிருஷ்ணனை பிடித்துக்கொண்டார்கள். துரியோதனனிடம் இருப்பவர்களிடமே மூத்தவர் ஆசிர்வாதம் பெற விரும்புகிறார்களே. இது எப்படி நியாயம். அவர்கள் எப்படி நமக்கு உதவுவார்கள் இது கூட எங்கள் சகோதரர்களுக்கு தெரியவில்லையே என்று வருத்தப்பட்டார் கள்.  மூவுலகையும் கட்டி ஆளும் கிருஷ்ணனுக்கு தெரியாதா என்ன. புன்னகைத்தபடி அவர்களுடன் பொறுமையாக நடந்து வந்தார். திரும்ப திரும்ப மாறி மாறி அவரை கேள்விகளால் துளைத்தெடுக்கவே கிருஷ்ணர் பதிலுரைத்தார்.

”தர்மர் செய்தது சரிதான். துரியோதனன் செய்தது தவறு என்பதை பீஷ்மர், துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் மட்டுமல்ல அனைவரும் அறிவார்கள். ஆனால் செஞ்சோற்றுக்கடன் தீர அவர்கள் துரியோதனன் பக்கம் நிற்க வேண்டியதுதான் தர்மம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் போரின் போது துரியோதனனுக்காக போர் செய்வதையும் ஆசிகளை மனமுவந்து தர்மருக்கும் அளித்திருக்கிறார்கள். ஆக தர்மர் செய்தது சரிதான்” என்றார்.

Sharing is caring!