நல்லதை யார் சொன்னால் என்ன?

நல்லதை யார் சொன்னால் என்ன?  வயதில் சிறியவர்களாக இருந்தாலும், ஒன்றுக்குமே உதவாதவர்கள் என்ற பெயரை பெற்றிருந்தாலும் ஏன் மகா அயோக்கிய குணத்தைப் பெற்றிருந்தாலும் அவர்கள் சொல்வது நல்லதாக இருந்தால் ஏற்றுக்கொள்ள கூடியதுதான். சில நேரங்களில் அவர்களது வார்த்தைகளால் நம் வாழ்க்கைக்கே கூட ஒருவித அர்த்தம் தோன்றிவிடும். வழிப்பறிக் கொள்ளையனின் வார்த்தையால் ஒருவர் அடைந்த பதவியை பார்க்கலாம்.

இல்லறத்தை வெறுத்து துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் என்னும் ஆசையில் ஒருவன் காடு மேடு என்று சுற்றி அலைந்தான். எளிய வாழ்க்கை வாழும் பொருட்டு கிடைத்த காய் கனிகளை உண்டு அமைதியான இடங்களை தேர்வு செய்து தவம் புரிந்து வந்தான். நாட்கள் உருண்டோடியது. வருடங்கள் கடந்தது. காலங்கள் சென்றது. பத்து வருடங்களாக இப்படி வாழ்ந்தும் அவனால் மனதில் அமைதியைப் பெற முடியவில்லை.

குடும்பம் பற்றிய நினைப்பு இல்லை. குழந்தைகள் மீது பற்றும் இல்லை. வசதி வாய்ப்புகள் செல்வம் போன்றவற்றிலும் ஈடுபாடு இல்லை. வாழும் எண்ணமும் இல்லை. எல்லாமே தேவையில்லை என்றாலும் மனம் ஏனோ வெறுமையில் இருக்கிறதே என்று நினைத்தான். இறைவா என்ன சோதனை இது முக்தி கிடைப்பது இருக்கட்டும். முதலில் மனதை ஒருமுகப்படுத்து என்றபடி கால்போன போக்கில் நடந்தான்.

ஆறு, காடு, கிராமம் என்று நடந்துகொண்டே இருந்தான். ஓரிடத்தில் களைப்பு உண்டாகவே இங்கு இளைப்பாறலாம் என்று முடிவெடுத்தான். அர்த்த ஜாம நேரம் அது. ஊரே அமைதியாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் இருந்தது. ஒரு வீட்டை நோக்கி நடந்தான். அந்த வீட்டின் வெளியே திருடன் ஒருவன் துளை போட்டு பொருள்களைத் திருட முயற்சித்துக்கொண்டிருந்தான். இவன் மெதுவாக அவனிடம் சென்று “கள்வனே எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. சில நாட்கள் இந்த ஊரில் தங்கியிருக்க விரும்புகிறேன். எனக்கு ஏதேனும் தங்க இடம் கிடைக்குமா?” என்று கேட்டான்.

“ஒரு திருடன் வீட்டில் தங்க உங்களுக்கு ஏதும் ஆட்சேபணை இல்லையென்றால் என்னுடைய வீட்டிலேயே நீங்கள் தங்கிக்கொள்ளலாம் என்றான். அதனாலென்ன நான் முற்றும் துறந்தவன் வருகிறேன்” என்றபடி கள்வனின் வீட்டில் தங்கினார்.  இரவு நேரங்களில் அவன் தொழிலுக்கு சென்றான். திரும்பி வரும் போது  வெறுங்கையுடன் வந்தான். துறவியாக ஆசைப்பட்டவன் கள்வனைப் பார்த்து “ஏன் இன்று எதுவும் கிடைக்கவில்லையா?” என்று கேட்டான். ஆமாம் இன்று கிடைக்கவில்லை. நாளை மறுபடியும் முயற்சி செய்வேன் என்றான்.

இப்படியே தினமும் களவாட செல்பவன் வெறுங்கையுடன் திரும்புவதும் கேட்டால் நாளை முயற்சி செய்வேன் என்பதும் தொடர்கதையானது. ஆனாலும் அவன் முகத்தில் நம்பிக்கை சிறிதும் இழக்கவில்லை. அதைக் கண்டதும் துறவியானவக்கு வெட்கமாகிவிட்டது. கள்வனே நம்பிக்கை இழக்கவில்லை. ஆனால் நான் மனம் ஒருமுகப்பட வேண்டும் என்று நினைத்து அது நடக்கவில்லை என்றதும் சோர்ந்து போனேனே. விடா முயற்சியும், நம்பிக்கையும் இருந்தால் எல்லாமே சாத்தியம் என்பதை இந்தக் கள்வன் புரிய வைத்துவிட்டானே என்றவன் மீண்டும் காட்டுக்கு சென்று தவம் புரிந்தான். பிறகு என்ன  சிறந்த மகானாகவும் மாறி விட்டான்.

உங்கள் ஈகோக்களை ஒழித்து விட்டு நல்லதை யார் சொன்னாலும் கேளுங்கள்.  நல்ல வார்த்தைகள் நன்மையையே உண்டாக்கும்.

Sharing is caring!