நாம் வேண்டுவதை இறைவன் நிறைவேற்றுவாரா…?

இறைவன் செய்வாரா.. செய்ய மாட்டாரா என்னும் சந்தேகத்தோடு வேண்டும் வேண்டுதல்கள் எப்போதும் பலிக்காது. அதனால்தான் இறைவனை வழி படும்போது அன்பு,  பொறுமை, நம்பிக்கை அனைத்தும் முழுமையாக இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அர்ஜூனன் கிருஷ்ணன் மீது வைத்த நம்பிக்கையும் இப்படித்தான் இருந்தது…

ஒருமுறை கிருஷ்ணனும், அர்ஜூனனும்   காட்டுக்குள் நடந்து சென்றிருந்தார்கள்.  அவர்களது அசைவுகளை  அங்கிருந்த விலங்குகள் உணர்ந்து கொண் டன… அவர்கள் எதிரே  புதரிலிருந்து ஒரு அழகான மான்குட்டி அவர்களைத் தாண்டி சென்றது.

”அதோ பார்த்தாயா அர்ஜூனா? நம்மைக் கடந்து  சென்றது ஆடுதானே” என்று கேட்டார் கிருஷ்ணர்.. “ஆமாம் கிருஷ்ணா ஆடுதான் நம்மை கடந்து சென்றது.. நானும் பார்த்தேன்” என்றான் அர்ஜூனன். சிறிது தூரம் சென்றதும் ”எனக்கென்னவோ அது ஆடுதான் என்று தெரியவில்லை அர்ஜூனா..அது ஒநாய் மாதிரி அல்லவா இருந்தது..” என்று கேட்டார் கிருஷ்ணன்.. அர்ஜூனனும் தாமதிக்காமல் ”சரியாக சொன்னாய் கிருஷ்ணா.. அது  பார்க்க ஓநாய் போன்று தான் இருந்தது” என்றபடி கிருஷ்ணனோடு நடந்தான்.

கிருஷ்ணர் யோசனையிலேயே நடந்துவந்தார். சிறிது நேரம் கழித்து ”மறந்துவிட்டேன் அர்ஜூனா? அது ஓநாய்  போன்று கூட அல்ல… வளர்ந்த நரி போல இருந்ததல்லவா” என்றார்… ”ஆமாம்.. கிருஷ்ணா.. நீ சொல்வதும் சரிதான்.. அது பார்க்க வளர்ந்த நரி போலதான் இருந்தது” என்றான் அர்ஜூனன். ..

மரநிழலில் இளைப்பாறலாம் என்று இருவரும் அமர்ந்தார்கள்.மீண்டும் கிருஷ்ணர்  வழியில் நடந்ததைப் பற்றி பேசினார். ”எனக்கென்னவோ இதுவரை  எனது யூகங்கள் எல்லாமே தவறு போல தெரிகிறது அர்ஜூனா..     நாம் பார்த்தது அழ கிய  மான்குட்டிதான். நீ என்ன சொல்கிறாய் அர்ஜூனா”  என்றார்..

அர்ஜுனன் தாமதிக்காமல் ”ஆமாம் கிருஷ்ணா நீ சொல்வதும் சரிதான் நாம் பார்த்தது அழகான மான்குட்டிதான்” என்றார். இதுவரை அமைதியாக இருந்த  கிருஷ்ணருக்கு  இப்போது கோபம் வந்துவிட்டது. ”என்ன நீ .. நான் என்ன  சொன்னாலும் ஆமாம் என்கிறாய்.. வழியில் நாம் பார்த்தது சிங்கம் தான் என்றாலும் அப்போதும் ஆமாம் என்று சொல்வாயா?” என்று  சற்று கோபத்தோடு கேட்டார்?

”ஆமாம் கிருஷ்ணா.. என் கண்களையும் எனக்குத் தெரிந்த அறிவையும் விட உன் மீதான நம்பிக்கைதான் அதிகம் இருக்கிறது. நீ எதுவாக சொல்கிறாயோ அது வாகவே அவைகள் எல்லாம் மாறும் தன்மை உன் சக்தியில் இருக்கிறது என்னும் போது  நீ சொல்வதைச் சந்தேகப்படுவது தவறானதாயிற்றே. நான் உன்னை நம்புகிறேனா என்பதற்காகத்தானே நீ இதெல்லாம் கேட்டாய்… ஆனால்  உயிரினங்களை இயக்கும் உன்னை நம்பாமல் உன் மீது நம்பிக்கை வைக்காமல்  வேறு யார் மீது நம்பிக்கை வைக்க முடியும்? என்று கேட்டான் அர்ஜூனன். இப்போது தெரிகிறதா கிருஷ்ணன் அர்ஜூனனின் மீது ஏன் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என்று.

பகவானை பக்கத்தில் நிறுத்திவைக்க பக்தி தேவையில்லை. சந்தேகப்படாமல் முழு நம்பிக்கை வைத்தாலே போதும். உங்கள் கோரிக்கைகள் நியாயமாக இருந்தால் தடையின்றி நடக்கும்.

Sharing is caring!