நாயன்மார்கள் – கணநாதர் நாயனார்

சோழநாட்டில் உள்ள சீர்காழியில் பிறந்தவர் கணநாதர். அந்தணர் குலத்தில் பிறந்த இவர் இல்லற வாழ்க்கையோடு சிவபெருமானுக்கு சிவத்தொண்டு புரிந்து வந்தார். சிவனடியார்களை மட்டுமல்லாது சிவனுக்கு சிறு தொண்டு செய்யும் அடியார்களுக்கும் தொண்டு செய்வதை அன்புடன் செய்துவந்தார்.

சிவன் மீது அதிக பற்றுக்கொண்டவரான கணநாதர் திருத்தோணியப்பருக்கு தொண்டு செய்வதையே பெரும் பேறாக நினைத்து வாழ்ந்தார். சிவனுக்கு திருத்தொண்டு புரிபவர்கள் மூவுலகமும் போற்றும் பாராட்டுக்குரியவர்கள். தாங்கள் செய்துவரும் திருத்தொண்டுக்கு இடையூறு நேர்ந்தால் சிவனுக்கு செய்ய முடியவில்லையே என்று உயிரை விடவும் தயங்கமாட்டார்கள். அடியார்களுக்கு இந்த உண்மையை உணர்த்தி வந்தார் கணநாதர்.

சிவாலயத்தில் உள்ள தோட்டத்தில் நறுமணமிக்க மலர்களை மலர செய்ய பணிகள் செய்வது, பராமரிப்பது, பொற்றாமரைக் குளத்தைச் சுத்தம் செய்வது போன்றவற்றைத் தன்னுடைய பணிகளில் ஒன்றாக செய்துவந்தார். இறை வழிபாட்டுக்கு இன்றியமையாத மலர்களைத் தரும் நந்தவனத்தை அமைத்து இறைவனுக்கு நறுமணமிக்க மலர்களை சாற்றி மகிழ்ந்துவந்தார்.

திருஞானசம்பந்தரிடமும் ஈடுபாடும் பக்தியும் கொண்டிருந்தார் கணநாதர். இவர் ஆலயத்தில் விளக்கேற்றுதல், கோயிலைச் சுத்தம் செய்தல், ஆலயத்தில் விளக்கேற்றுதல், திருமுறைகளை படித்தல் என்று பல்வேறு சிவத்தொண்டுகளையும் செய்து வந்தார். இவர் ஆலயப்பணி செய்யும் தொண்டர்கள், மலர் பறிப்பு பணிகள் செய்யும் தொண்டர்கள், ஐயனுக்கு மாலை கட்டிதரும் தொண்டர்கள் விரும்பும் பணியை அவர்களுக்கு கொடுத்துவந்தார்.

அவர்கள் செய்யும் பணியை இறைமனதோடு தூய்மையாக செய்யவும் பழக்கினார். திருத்தொண்டின் வழி நிற்பதே ஆலம் உண்ட இறைவனின் திருவடியை அடையும் வழி என்றார். அடியார்களிடம் திருத்தொண்டு செய்வதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தினார்.

இவரது வழிபாட்டின் சிறப்பும், சிவனடியார்கள் மீது வைத்த பக்தியும், சிவத் தொண்டும், சிவத்தொண்டு புரிய பக்தர்களை பழக்கியதும் சிவபெருமானுக்கு இவர் மீது அளவில்லாத அன்பை பெற்றுத்தந்தது. கணநாதர் செய்த புண்ணியங்களால் இவரும் 63 நாயன்மார்களுள் ஒருவராக பேறுபெற்றார். சிவனது அருளால் சிவகணங்களுக்குத் தலைமைதாங்கும் பதவியைப் பெற்று சிவனின் பொற்பாதங்களை அடைந்தார்.

எல்லா சிவாலயங்களிலும் பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கணநாதர் நாயனாரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது.

Sharing is caring!