நாயன்மார்கள் – கழற்சிங்க நாயனார்

பல்லவ மன்னனின் குலவழி வந்தவர் கழற்சிங்கர். எத்தகைய பணியிலும் சிவபெருமான் வழிபாட்டை மட்டும்  தவறாமல் கடைப்பிடிக்கும் சிறந்த சிவபக்தர். சிவன் மீது கொண்டிருந்த பற்றினால் நீதி நெறி தவறாமல் ஆட்சி செய்துவந்தார். ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் இருந்து வந்த செல்வத்திலும் பிற நாட்டின் மீது போர் தொடுத்து ஈட்டிய பொருள்களிலும் எம்பெருமானுக்கும், சிவனடியார்களுக்கும் வழங்கி வந்தார். மணிகண்ட பெருமானை சேவித்தவருக்கு திருவாரூர் தியாகராச பெருமானை வழிபாடு செய்ய விரும்பினார்.

ஒருநாள் தன்னுடைய துணையை அழைத்துக்கொண்டு தன்னுடைய பரிவாரங்களுடன் திருவாரூருக்கு புறப்பட்டார். எம்பெருமான் கோவிலை அடைந்ததும் தியாகராசனைக் கண்டு மனம் உருகி பக்தி பரவசத்துடன் வணங்கினார். இறைவனின் திருமுகத்தைக் கண்டு பக்தியில் தன்நிலை மறந்து மூழ்கினார். கழற்சிங்க நாயனாரின் பட்டத்து அரசி திருக்கோவிலை வலம் வந்தார்.

பிரகாரத்தைச் சுற்றியபடி அங்கிருந்த மண்டபங்களை கண்டு வியப்புற்று இருந்தார். அத்தருணம் இறைவனுக்கு மலர்களை சாற்றவேண்டி நறுமணமிக்க மலர்களைக் கொண்டு மாலை தொடுத்துக்கொண்டிருந்த இடத்தின் அருகே வந்தார். நறுமணமிக்க மலர்கள், அழகிய வண்ணங்களில் குவியலாய் பூத்திருந்ததைக் கண்டதும் மனதில் ஆனந்தம் மேலிட  அப்பூக்குவியலிலிருந்து ஒரு மலரை எடுத்து முகர்ந்து பார்த்து மகிழ்ந்தார்.

பூத்தொடுத்திருந்த அடியார்களில் செருத்துணை நாயனார் ஒருவரும் இருந்தார். சிவபக்தியிலேயே மூழ்கியிருக்கும் இவர் அறிந்தும் அறியாமலும் செய்யும் தவறுகளைக் கண்டிப்பதோடு தண்டனையும் கொடுத்துவிடும் சினம் மிகுந்தவர். அரசியாரின் செய்கையைக் கண்டு மிகுந்த கோபத்தால் செருத்துணை நாயனார் எம்பெருமானுக்காக வைத்திருக்கும் மலர்களை போய் முகர்ந்து பார்க்கலாமா என்று தன்னிடமிருந்தவாளால் அரசியாரின் மூக்கை கொய்தார்.

மலரினும் மென்மையான பட்டத்து அரசி மயங்கிவிழுந்தாள். அரசியார் மயங்கியதைக் கேள்வியுற்ற மன்னன் உடனடியாக அரசியார் மயங்கிய இடத்துக்கு வந்தான். அரசியாரின் நிலையைக் கண்டு மனம் பொறுக்காத அரசர் “அரசி என்றும் பாராமல் இத்தகைய கொடிய செயலை செய்தது யார்?” என்று வினவினார். அச்சமின்றி இச்செயலை செய்தது நான் தான் என்றபடி முன்வந்தார் செருத்துணை நாயனார்.

சிவனடியாரின்  தோற்றத்தில் இருப்பவரைக் கண்டவுடன் மன்னன் திகைத்தான். என் மனைவி பிழை செய்யாமல் இவர் தண்டனை கொடுத்திருக்க மாட்டாரே. “என் மனைவி  தீங்கிழைக்காமல்  தாங்கள் தண்டித்திருக்கமாட்டீர்கள் அதனால் அவள் செய்த பிழையை கூறுவீர்களா?” என்றான்.

“அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்தார். அதனால் தான் அவரது மூக்கை வெட்டினேன்” என்றார். அரசன் உடனே “நீங்கள் தவறு செய்து விட்டீர்கள் ஐயா. உரிய தண்டனையை கொடுக்கவில்லை. கைகள் அல்லவா மலரை எடுத்தது அதனால் கைகளை அல்லவா வெட்டியிருக்க வேண்டும்” என்றபடி தன்னுடைய உடையவாளை எடுத்து அரசியின் கைகளை வெட்டினார். அரசனின் பக்தியைக் கண்டு மெச்சிய செருத்துணை நாயனார் மன்னருக்கு தலைவணங்கினார்.

சிவபெருமான் தாமதிக்காமல் இடப வாகனத்தில் உமா தேவியுடன் எழுந்தருளினார். அரசியின் துன்பங்களைப் போக்க அவரை விடுவித்தார். அரசரின் சிவபக்தியையும் பக்தியையும் மெச்சிய எம்பெருமான் அனைவருக்கும் ஆசி கூறி மறைந்தார். அரசனின் புகழ் திக்கெட்டும் பரவியது. மன்னர் அறநெறி தவறாமல் வாழ்ந்து இறுதியில் சிவலோகம் அடைந்து இன்புற்றார். வைகாசி மாதம் பரணி நட்சத்திரத் தன்று கழற்சிங்க நாயனாருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது.

Sharing is caring!