நாயன்மார்கள் – கழற்றறிவார் நாயனார்

சேர நாட்டின் ஒப்பற்ற தலைநகரம் கொடுங்கோளூர். இது மாகோதை என்றும் அழைக்கப்படும். இவ்வூரில் திருவஞ்சைக் களம் என்னும் தலத்தில் அஞ்சை களத்தீஸ்வரர் எம்பெருமான் அருள்பாலித்தார். இந்நகர் செய்த நல்பயனாய் சேரர் குலம் தழைக்க பிறந்தவர் பெருமாக்கோதையார். அரச குமாரனாக பிறந்தாலும் போர் பயிற்சியைப் பெறாமல் சிவபெருமானின் பாதங்களைப் பற்றி அவர்பால் அன்பு கொண்டு  இருந்தார் கோதையார்.

உலகின் இயல்பும், அரச பதவியும் நிலையானதல்ல எம்பெருமானின் பாதகமலமே என்றும் உறுதியானது என்று சமய நூல்களைக் கற்றுவந்தார். அரண்மனை வாழ்க்கையும், அரசபதவியையும் வெறுத்து ஒதுக்கிய அவர் எம்பெருமானின் அருகில் இருக்கும் பேறு வேண்டும் என்று திருவஞ்சைக் களம் ஆலயம் அருகில் மாளிகை எழுப்பி குடியேறினார்.

அதிகாலையில் எழுந்து தூயநீராடி உடல் முழுவதும் வேதநெறியோடு விபூதி தரித்து நந்தவனத்தில் மலர்செடிகளுக்கு நீர் ஊற்றுவார். பிறகு நறுமணமிக்க மலர்களை வகையாக பிரித்து விதவிதமான மாலைகளாக்கி அஞ்சை களத்தீஸ்வரருக்கு எடுத்து செல்வார். ஆலயத்தைச் சுத்தம் செய்து பூமாலைகளை அணிவித்து பாமாலைகளால் போற்றுவார். பெருமானைப் பற்றுவதே தம்முடைய தலையாய பணி என்று தொடர்ந்து செய்துவந்தார். அச்சமயம் கொடுங்கோளூரை ஆட்சி செய்து வந்த செங்கோற்பொறையன் என்னும் மன்னன் அரசவாழ்வை துறக்க விரும்பினான். நாட்டை விட்டு வெளியேறி காடுகள் தாண்டி தவம் புரிய சென்றுவிட்டான்.

நாட்டைக் காப்பாற்ற பெருமாக்கோதையாரால் தான் இயலும் என்று ஆராய்ந்த அமைச்சர் பெருமக்கள் மங்கல வாத்தியங்கள் முழங்க சேனைப்படையோடு திருவஞ்சைக் களத்தை அடைந்து கோதையாரிடம் நடந்ததைத் தெரிவித்து நாட்டை காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். கோதையார் கலங்கினார். எம்பெருமானை வணங்கிடவே காலமில்லை என்று கருதும் இந்நேரத்தில் அரச பதவியை ஏற்றுக்கொண்டால் எப்படி வணங்க இயலும்.

அதோடு வழிபாட்டுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துமே என்று நினைத்தப்படி அமைச்சர்களிடம் நான் சிவத்தொண்டு புரியும் சேவகன். இச்சமயத்தில் ஆட்சியில் அமர்ந்தால் நான் சிவனுக்கு செய்யும் துரோகமாயிற்றே. செங்கோலை நான் பற்ற வேண்டுமென்றால் எம்பெருமானே திருவாய் மலர்ந்து ஒப்புவிக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே நான் ஆட்சி பொறுப்பை ஏற்பேன் என்றார். அமைச்சர்களும் சம்மதித்தனர்.

பெருமாக்கோதையார் சிவபெருமானை வணங்கி  தமது வேண்டுதலை முன் வைத்தார். ஆலயத்துள் பேரொளியும் அதைத் தொடர்ந்து எம்பெருமானின் அசரீரியும் கேட்டது. சேரர் கொழுந்தே நீ வருந்தாமல் ஆட்சியை ஏற்றுக்கொள். ஐந்தறிவு விலங்குகளின் மொழிகளையும் கேட்கும் பேறை உனக்கு அளித்தோம். அரசருக்கு வேண்டிய அனைத்தையும் உமக்கு குறையின்றி அளிக்கிறோம் என்றதும் பெருமா கோதையார் சம்மதித்து அரண்மனை திரும்பி நல்ல நாளில் அரசப்பதவியை ஏந்திக்கொண்டார்.

பதவியேற்றதும் களத்தீஸ்வரரின் பாதம் பணிந்து வணங்கி அரண்மனைக்குத் திரும்பினார். அப்போது வண்ணான் ஒருவன் உவர் மண் சுமந்து வந்துகொண்டிருந்தான். மழைபெய்தபடியால் அந்த மண் அவன் உடம்பில் பட்டு உலர்ந்து போனது காண்பதற்கு அவை விபூதி தரித்த சிவனடியார் போன்று இருந்தது. அதைக்கண்ட கோதையார் யானையிலிருந்து இறங்கி வண்ணானைத் தொழுதார்.

அரசர் தம்மை வணங்குவதா என்று அஞ்சிய வண்ணான் ”அரசே என்ன காரியம் செய்கிறீர்கள்? நான் சாதாரண வண்ணான்” என்றான் அவர் பாதம் பணிந்து வணங்கியபடி. ”நான் காண்பதற்கு விபூதி தரித்து சிவத்தொண்டு செய்பவன் போல் தெரிந்தீர்கள். அதனால் கவலைகொள்ளாது செல்வீர்கள்” என்று வழியனுப்பினான். அரசன் சிறு மக்களில் ஒருவரிடம் கொண்டிருந்த அன்பை கண்ட அமைச்சர்களும் மக்களும் அரசனின் அன்பில் மெய்சிலிர்த்தார்கள்.

சேரமான் பெருமாள் வாழ்க என்னும் மக்களின் கோஷத்தையும், அவர்கள் பூமாரி பொழிந்ததையும் ஏற்றுகொண்டு ஆட்சிகட்டிலில் அமர்ந்தார் கோதையார். இவருக்கு சிற்றரசர்கள் கப்பம் கட்டி வந்தார்கள். ஆனால் பகைமை இன்றி அற நெறிவழியில் ஆட்சியை நடத்தினார். இவருடன் பாண்டிய, சோழ மன்னர்கள் நட்பு பாராட்டினார்கள். சைவமும், பக்தியும் எங்கும் தழைத்தோங்கியது.  ஒருபுறம் மனு நீதி தவறாத ஆட்சி மறுபுறம் எம்பெருமானுக்கு சிவகாம முறையில் வழிபாடு என்று இருந்த கோதையாரின் பக்திக்கு வழிபாட்டின் போது எம்பெருமான் அளித்த இன்பத்தை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

Sharing is caring!