நாயன்மார் – அதிபத்தநாயனார்

சிவனுக்கு தொண்டு செய்த வாழ்ந்தவர்கள் நாயன்மார்கள் என்று அழைக் கப்படுகிறார்கள். நாயன் மார்கள் மொத்தம்  63. அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தொடர்ந்து பார்க்கலாம்.

பெயர் – அதிபத்த நாயனார்

குலம் -பரதவர்

பூசை நாள்- ஆவணி ஆயில்யம்

அவதாரத்தலம் – திருநாகை

முக்தித்தலம்- திருநாகை

சோழநாடான நாகப்பட்டினம் மாவட்டத்தில் நுழைப்பாடி என்னும் கிராமத்தில் மீனவர் குலத்தில் பிறந்தார் அதிபத்தர். சிறுவயது முதலே சிறந்த சிவபக்தனாக விளங்கினார். மீன்பிடிக்கும் தொழிலை பிரதானமாக கொண்டிருந்த குலத்தைச் சேர்ந்த இவர் வளர்ந்த பிறகு பரதவர் குலத்துக்கு தலைவராக விளங்கினார். மீன்பிடித் தொழிலில் மிகவும் வல்லவராக விளங்கினார்.

சிவபெருமானிடம் மிகுந்த பக்தியைக் கொண்டிருந்த அதிபத்தர் அன்றாடம் அகப்படும் மீனிலிருந்து ஒரு மீனை எடுத்து என் மனதை வென்ற எம்பெருமானாகிய சிவப்பெருமானுக்கு என்று மீண்டும் அன்போடு கடலில் விட்டுவிடுவார். இவரது அன்பில் கட்டுண்ட சிவப்பெருமான் உலகெங்கும் இவரது அன்பை பரவ செய்ய நினைத்தார்.

வழக்கம் போல்  மீன்பிடித்தொழிலை செய்து அன்போடு சிவனுக்கு விடுத்து வாழ்ந்த அதிபத்தருக்கு நாளடைவில் மீன் கிடைப்பதில் வறுமை உண்டானது. அன்றாடம் ஒரு மீன் சிவனுக்கு என்ற கொள்கையோடு வாழ்ந்த அதிபத்தருக்கு அன்றாடம் ஒரு மீன் மட்டுமே கிடைக்க  அருள் புரிந்தார் சிவபெருமான்.  நிலைதவறாமல் இருந்த அதிபத்தர் கிடைத்த ஒரு மீனையும் சிவனுக்கு அர்ப்பணித்து வந்தார். உணவின்றி வறுமையில் வாடிய நிலைமைக்கு  உண்டானார்.

நாட்கள் கடந்தது. தினமும்  ஒரு மீன் மட்டுமே அவருக்கு கிடைத்தது. சிவ பெருமான் மீது கொண்ட அன்பால் மனதையும் வயிறையும் நிறைத்து கிடைத்த மீனை சிவனுக்காக விட்டார். அவருடைய காத்திருப்பு வீண் போகவில்லை. ஒரு நாள் உடல் முழுக்க தங்கத்தால் கொண்டு நவரத்தினங்களால் ஆங்காங்கே செதில்களாய் கொண்ட தங்க மீன் அவருக்கு கிடைத்தது. அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள் இனி நம் குலத்துக்கே வறுமை தீர்ந்தது என்று பேசிக்கொண்டார்கள்.

அதிபத்தருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. சிவப்பெருமானுக்கு கொடுக்க தங்க மீன் கிடைத்துவிட்டதே என்று நினைத்தப்படி இந்த மீன் எம்மை ஆளும் அகிலாண்டேஸ்வரனுக்கு என்று கடலில் விட்டார். பற்றே இல்லாத அதிபத்தனை இனியும் சோதிக்க விரும்பவில்லை சிவபெருமான்.

ஆகாயத்தில் இடபாரூடராய் தோன்றினார் சிவபெருமான். அதைக் கண்டு ஆனந்தமடைந்த அதிபத்தனார் சிவனின் பாதத்தில் விழுந்து பரவசமடைந்தார். அதிபத்தரை தன்னுடைய அடியார்களின் உலகுக்கு அழைத்துச் சென்று அருள் புரிந்தார் சிவப்பெருமான். அறுபத்து மூவர் நாயன்மார்களில் இவரும் ஒருவராக  வணங்கப்பட்டார்.

Sharing is caring!