நாயன்மார் – அப்பூதியடிகள்

அப்பூதியடிகள்.. 63 நாயன்மார்களில் முக்கியமானவர்களும் முதன்மையானவர்களாகவும் கருதப்பட்டவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் நாயனார் காலத்தில் 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சைவ சமயத்தவர்களால் வணங்கப்படும் நாயன்மார்களில் அப்பூதியடிகளும் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோழநாட்டில் திருவையாறிலிருந்து 8 கிமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரில் பிறந்தார். மிகுந்த சிவபக்தியைக் கொண்டவர். அந்தணர் குலத்தைச் சேர்ந்தவரான இவர் திருநாவுக்கரசர் சைவ, சமய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள், அவருக்கு நேர்ந்த துன்பங்கள், இறைவனிடத்தில் அவர் கொண்டிருந்த அன்பு அனைத்தையும் கேள்விப்பட்டு அவரை பாராமலேயே அவர் மீது மிகுந்த பக்திக்கு உள்ளானார். அப்பூதியடிகள் வளர வளர அவரையே குருவாக ஏற்று அவரது பெயரில் பல தர்ம காரியங்களைச் செய்துவந்தார்.

ஒருமுறை திங்களூருக்கு வந்த திருநாவுக்கரசர் தன்னுடைய பெயரில் கல்வி சாலைகள், நீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். யார் இந்த பணியை செய்துவருவது என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டு அப்பூதியடிகளின் இல்லத்துக்கு வந்து சேர்ந்தார். திருநாவுக்கரசரை கண்ட அப்பூதியடிகள் அவர் பாதத்தில் வீழ்ந்து வணங்கினார். அவரை ஆசிர்வதித்து  ”உனது பெயரில்  தர்ம காரியங்களைச் செய்யாமல் வேறு ஒருவர் பெயரில் செய்து வருகிறாயே என்ன காரணம்?” என்று கேட்டார். அப்பூதியடிகளுக்கு மிகுந்த வருத்தமாயிற்று.

”சமணர்களும் மன்னனும் செய்த சூழ்ச்சியைத் தம் தொண்டினால் வென்று எனக்கு குருவாக ஆனவரைப் போய் வேறு என்கிறீரே?  எப்படி இப்படி சொன்னீர்கள். நீரும் சமணரா. அப்படியென்றால் நீவிர் யார்?” என்று கேட்டார். ”நான் ஒன்றும் பெரியவனல்ல ஐயா. அதிகைப்பெருமான் கொடுஞ்சூலையினால் ஆட் கொள்ளப்பட்டு சிவனருளை உணர்ந்த சிறியவன் நான்” என்றார் திருநாவுக்கரசர்.

இதைக் கேட்டு அளவில்லா ஆனந்தம் கொண்ட அப்பூதியடிகள்  நாவுக்கரசரை வீட்டிற்கு அழைத்துவந்து அவருக்கு பாதபூஜை செய்து மகிழ்ந்தார் தமது வீட்டில் அமுது உண்டு சிறப்பித்து செல்ல வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். அவரது அன்பை ஏற்று அமுது உண்ண திருநாவுக்கரசரும் சம்மதித்தார்.

அமுது தயாரானதும் அப்பூதியடிகள் மகன் திருநாவுக்கரசு நல்ல வாழை இலையைத் தேடி அறுக்கும்போது நாகம் தீண்டியது. அடிகளார் உணவருந்த நேரம் ஆகிவிட்டதே என்று பதறிய சிறுவன் தாயிடம் விரைந்து வந்து வாழை இலையைக் கொடுத்து மயங்கினான். அடிகளாருக்கு அமுதுண்ண நேரமானதால் மகனின் திருமேனி நீலநிறமாக மாறியதை பொருட்படுத்தாமல் அடிகளாரை கவனிக்க ஆயுத்தமானார்கள் அப்பூதியடிகளும் அவர்தம் துணைவியாரும். ஆனால் திருநாவுக்கரசர் விபூதி பூசி உடன் அமுதுண்ண அப்பூதியடிகளின் மகன் வரவேண்டும் என்று வலியுறுத்தவே வேறு வழியின்றி நடந்ததை கூறினார்கள்.

அப்பூதியடிகளின் அன்பில் உருகிய திருநாவுக்கரசர்  நாகம் தீண்டிய சிறுவனின் உடலை வைத்து ஒன்று கொலாம் என்னும் திருப்பதிகம் பாடி சிறுவனை உயிர்ப்பித்தார். அப்பூதியடிகளின் சிவனடியாருக்கு செய்த தொண்டு  அளவிடமுடியாதது.

Sharing is caring!