நீங்கள் பக்குவமிக்க மனிதரா?

ஐந்தறிவுகளிடம் இல்லாத  சிறப்பு ஆறறிவு கொண்ட மனிதனிடம் இருக்கிறது என்பதால் தான் மனிதபிறவி எடுத்தோர் பிறவா நிலையை அடைய இறைவனை வழிபடுகிறார்கள். இறைவனை நினைத்தப்படி வழிபடுவதற்கு மனம் பக்குவமடைய வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்ய பெருமக்கள். பக்குவம் என்பது எதுவரை என்று இந்தக் கதை உணர்த்துகிறது.

புத்தரின்  சீடர்களில் முக்கியமானவர் பூர்ணா. அவர் புத்தரின் அனுமதியோடு தர்மப் பிரசாரம் செய்வதற்கு  அனுமதி கேட்டார். எங்கே போய் தர்மப் பிரசாரம் செய்யப் போகிறாய் பூர்ணா என்று கேட்டார் புத்தர். பூர்ணா தான் செல்லவிருக்கும் இடத்தைப் பற்றி கூறினார். புத்தருக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கா போகிறாய் அங்கிருக்கும் மக்களுக்கு போதிய கல்வியறிவு இல்லையே… நீ என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்றார்.

அதனாலென்ன சுவாமி!  என்னுடைய பணியை நான் செய்ய போகிறேன் என்றார். அதைத்தான் நானும் சொல்கிறேன் பூர்ணா.. நீ என்ன சொன்னாலும் அதை இகழ்வார்கள் உன்னால் தாங்க இயலுமா என்றார். அதனாலென்ன என்னை கையால் அடிக்கவில்லையே என்று சந்தோஷப்படுவேன் என்றார்.

உடனே புத்தர் அதெப்படி உறுதியாக சொல்லமுடியும். அவர்கள கையால் அடித்துவிட்டால் என்ன செய்வாய்? என்றார் அப்போதும் நான் துன்பப்படமாட்டேன் கைகளால் தானே தாக்கினார்கள். ஆயுதங்களால் தாக்கவில்லையே என்று மகிழ்வடைவேன். அப்போதும் என் அறிவுரைகளை நான் நிறுத்த மாட்டேன் என்றார்.

புத்தர் சிறிது நேரம் கழித்து மீண்டும் பேசினார். அப்படியும் சொல்ல முடியாது.  சில நேரங்களில் உன் அறிவுரையைக கேட்காமல் ஆயுதங்களால் தாக்கவும் வாய்ப்புண்டு என்றார். அப்போதும் கவலைப்படமாட்டேன். என்னைக் கொல்ல வில்லையே அதனால் இறுதி வரை என் பணியை விடாது செய்வேன் என்றார் பூர்ணா. புத்தர் இறுதியாக சொன்னார். உறுதியாக உன்னைக் கொன்று விட்டால் என்ன செய்வாய் என்றார்.

பூர்ணா புத்தரின சீடராயிற்றே. உடனடியாக பதில் சொன்னார். மன நிம்மதி  அடைவேன். இவ்வளவு சீக்கிரம் இந்த மனித பந்தத்தில் இருந்து விடுதலை கிடைத்து விட்டதே. மனம் மகிழ்ச்சி்யடைவேன் என்றார் பூர்ணா. புத்தர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். பூர்ணா நீ மனிதனாக வாழ்வதற்கான தகுதியைப் பெற்று விட்டாய். பூர்ண பக்குவம் அடைந்துவிட்டாய். உன்னைக் கண்டு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

மனிதப்பிறவியானது சிறப்பு வாய்ந்தது. மனிதன் மனிதனாக ஆகும் தகுதியை முதலில் பெறவேண்டும். அதற்கு பக்குவமான மனதை பெற முயற்சிக்க வேண்டும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்னும் மனோபாவத்தை கொண் டிருக்க வேண்டும். எது நடந்தாலும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளும் பக்குவத்தை அடைந்துவிட்டால்  இறைவன் அருள் தேடி வரும்.

Sharing is caring!