நீரிழிவு நோயா? இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

உடலில் இரத்த ஓட்டம், உடலின் கன அளவு (body volume), இரத்த அழுத்தம் இவற்றை சீராக வைத்துக்கொள்ளவும், இரத்த அணுக்கள் உற்பத்தியிலும், அசுத்தங்களை நீக்கவும் சிறுநீரகம் உதவுகிறது.

மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இவை அத்தனையும் நடைபெற வேண்டும். சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் தங்கள் சிறுநீரகங்கள்மேல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இன்சுலின் உற்பத்தி

நீரிழிவின் வகைகள் கணையம் இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாத நிலையில் இருக்கும், வகை 1 நீரிழிவு பாதிப்புள்ளோரில் 30 சதவீதத்தினரும், வகை 2 என்ற, போதுமான அளவு இன்சுலின் சுரக்காத நீரிழிவு பாதிப்புள்ளோரில் 10 முதல் 40 சதவீதத்தினரும் சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப்படுகிறார்கள்.

சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள்

சிறுநீரக கோளாறு ஏற்படுமாயின் உடல் எடை கூடும்; கணுக்கால் வீக்கம் ஏற்படும். இரவில் அதிகமுறை சிறுநீர் கழிக்க நேரிடும். இரத்த அழுத்தம் அதிகமாக உயரும். உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருந்தால் ஆண்டுக்கு ஒருமுறையாவது இரத்தம், சிறுநீர் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். அதன்மூலமாக நோயை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்த முடியும்.

ரத்த சர்க்கரை கட்டுப்பாடு

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் சிறுநீரக கோளாறு தீவிரமடைவதை தடுக்க முடியும். சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களின் சிறுநீரில் அல்புமின் என்ற புரதபொருள் அதிகமாக காணப்பட்டால் அது சிறுநீரக கோளாறின் அறிகுறியாகும். சிறுநீரக கோளாறுக்கான பரிசோதனை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வருவதற்கு பலநாள்களுக்கு முன்பே இது சிறுநீரில் அதிகமாக வெளியேறும். ஆகவே, நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்.

அபாய அறிகுறி

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவர், தனக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு நாளுக்கு நாள் திடீரென குறைந்து வருவதை கண்டால், அது சிறுநீரக கோளாறின் அறிகுறியாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கையடைய வேண்டும். நீரிழிவு பாதிப்புள்ளோருக்கு மீண்டும் மீண்டும் வரக்கூடிய ஹைபோகிளைசீமியா என்னும் இந்த நிலையை கவனிக்காமல் இருந்துவிடக்கூடிய அபாயம் உள்ளது. ஆகவே, சிறுநீரக செயல்பாடு குறித்த பரிசோதனையை குறிப்பிட்ட இடைவெளியில் செய்துகொள்ள வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

ஆரம்ப கட்ட அறிகுறிகளை கவனித்தால், இரத்தத்தில் குறைந்திடும் சர்க்கரையின் அளவை சரியான விதத்தில் கையாள முடியும். சர்க்கரை சரியான அளவை எட்டுவதற்கு குளூக்கோஸ் மாத்திரைகள் சாப்பிடுவது உள்ளிட்ட குறுகிய கால தீர்வுகளை கையாளலாம். நீரிழிவு ஹைபோகிளைசீமியாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் வலிப்பு, நினைவிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் நேர்ந்தது, அவசரகால சிகிச்சை தேவைப்படும் அபாயக் கட்டம் ஏற்படக்கூடும்.

Sharing is caring!