நோய்களிலிருந்து தப்பிக்க இந்த 8 டிப்ஸ் உதவும்!

கார்த்திகை முடிந்தால் கடும்மழை இருக்காது என்பது பழமொழி. மழை விட்டுவிட்டாலும் தூறல் நிற்காது என்று ஒரு சொலவடையும் உண்டு. இப்படி மழை பற்றியும் பனி பற்றியும் சுவாரஸ்யமான விஷயங்கள் பல உண்டு. சிலர் விரும்பும் சிலர் வெறுக்கும் பனிக்காலம் இதோ வந்துவிட்டது.

மனதுக்கும் உடலுக்கும் இதம் தரும் சூடான தேனீர் அருந்துவது, உங்களுக்கு பிடித்த படம் பற்றி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசிச் சிரிப்பது, வாய்க்கு ருசியான உணவுகளை சாப்பிடுவது, வீட்டினருக்கு சமைக்கும் போது ஜன்னலூடே பனி விழுவதைப் பார்த்து ரசிப்பது என இந்தப் பருவத்தின் அழகியலை முழுவதும் உள்வாங்குங்கள். குளிர்காலத்தின் நினைவுகள் கூட உங்கள் இதயத்தை சூடேற்றி, உங்கள் செவிகளுக்கு இசையை கொண்டு வரட்டும்.

இப்படியொரு அழகியலை ரசிக்கவிடாமல் ஹச் ஹச் என்று தும்மல் வந்தால், உங்கள் உடலும் மனமும் எரிச்சல் அடையும். எனவே பனிக்காலத்தின் பருவநிலையை அனுபவித்து ரசிக்க முதலில் ஆரோக்கியமாக இருங்கள்.

பின்வரும் 8 குறிப்புக்களை பின்பற்றினால் குளிர் இரவை நன்றாக அனுபவித்து மகிழலாம்.

1. கைகளை அடிக்கடி கழுவுங்கள்

குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கான மிகவும் எளிமையான ஒரு வழிமுறை உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பதுதான். சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவினால், கிருமிகள் உங்கள் கைகளின் மூலம் பரவுவதைத் தடுக்கலாம். இப்படி கைகளை அடிக்கடி கழுவுவது கிருமிகளை அகற்றி, சுவாச நோய்த் தொற்றுகள் மற்றும் வைரஸ்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.

2. சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துங்கள்

உங்கள் கைகளை கழுவுவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச் சூழலையும் தூய்மையாக வைத்திருப்பது நல்லது. வீட்டை தினமும் துடைப்பது கிருமிகளைக் கொல்ல உதவும்.

3. உடல் ஆரோக்கியம் பேணுங்கள்

குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பது சளி அல்லது காய்ச்சலைத் தவிர்ப்பதை விட வேறொன்றும் மிக முக்கியம். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பத்திரமாகப் பாதுகாப்பதும்தான். அதிகாலை அல்லது இரவில் நீங்கள் வெளியில் செல்லும்போது, காதுத்துவாரங்களை நன்றாக மறைக்கக்கூடிய விதமான தொப்பி மற்றும் கைகளில் கையுறை அணிய மறக்காதீர்கள். மிகவும் குளிராக உணர்வீர்கள் எனில் ஸ்வெட்டர் அல்லது கோட் அணியுங்கள், தொப்பி போடுங்கள், கனமான பூட்ஸ் அணியவும், உங்கள் முகத்தைப் பாதுகாக்க ஸ்கார்ஃபைப் பயன்படுத்தவும். கையுறைகள் உங்கள் கை விரல்களை உறைபனியிலிருந்து பாதுகாக்கும் அதே சமயம், அவை உங்கள் உடலை வெப்பமாக வைத்திருக்கின்றன.

4. தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்

இந்தப் பருவத்தில் சிலருக்கு சளி மற்றும் காய்ச்சல் வரலாம். குறிப்பாக முதியவர்களுக்கு இருமல் மற்றும் தொண்டைப் புண் ஏற்படும். எனவே வரும் முன் பாதுகாத்துக் கொள்வது புத்திசாலித்தனம். தற்போது கிடைக்கும் மருத்துவ வசதிகளைப் பயன்படுத்தி, துறை நிபுணர்கள் மற்றும் மருத்துவரின் பரிந்துரையின்படி தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி காய்ச்சலுக்கு எதிராக போராட அல்லது காய்ச்சல் வந்துவிட்டால் அதிலிருந்து மீட்கும் திறனை அதிகரிக்கும். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு காய்ச்சலுக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடு மிகவும் முக்கியமானது.

5. சுறுசுறுப்பாக இருங்கள்

சுறுசுறுப்பாக இருப்பது எலும்பு மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், எடையைக் கட்டுப்படுத்துவதற்கும், தூக்கத்தை மேம்படுத்துவதற்கும் உதவும், இது குளிர்காலத்தில் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் ஒட்டுமொத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும். நீங்கள் எப்போதும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால், உங்களுடைய நோய் எதிர்ப்புத் திறனும் வலுவாக இருக்கும். சில சமயம் தவிர்க்க இயலாமல் நோய்வாய்ப்பட்டாலும், அதிலிருந்து விரைவாக மீண்டு விடலாம்.

6. ஓய்வாக இருப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்

இது முரண்பாடாகத் தெரிந்தாலும், சுறுசுறுப்பாக இருப்பதைப் போலவே, ஓய்வு நேரத்தையும் உருவாக்குவது முக்கியம். சரியான அளவு தூக்கத்தின் மூலம் உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைக்கும். உங்கள் உடல் (மற்றும் மனமும் கூட) தளர்வு நிலையில் இருந்தால்தான் (அதுவும் சரியான அளவு தூக்கத்தின் மூலம்) மீண்டும் தன்னைத் தானே ஒருங்கிணைத்துக் கொள்ளும். தூக்கமின்மை பலவிதமான உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். எனவே உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வைக் கொடுப்பதன் மூலம் அதனைப் பாதுகாத்துக் கொள்ள உதவுங்கள். இது உங்களுக்காக நீங்கள் மட்டுமே செய்யக் கூடிய விஷயம்.

7. ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்

இந்தப் பருவத்தில் உணவைத் தவிர்ப்பது சரியில்லை. உங்கள் உடலுக்கு ஊட்டச் சத்து மிகவும் முக்கியம். சில உணவுகள் உடலுக்கு மந்தத்தன்மையை ஏற்படுத்திவிடும். அதிக மசாலா மற்றும் காரத்தன்மை உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. கோழி சூப், பூண்டு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மஞ்சள், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் உள்ளிட்ட உணவுகளை சேர்த்துக் கொண்டால் உடலில் சமச்சீர் தன்மை நிலவும். ஆரோக்கியமான உணவு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, இது வைரஸ்கள் அல்லது தொற்றுநோய்களை எதிர்க்க உடலுக்கு உதவுகிறது.

8. உங்கள் மருத்துவரை சந்தியுங்கள்

பனிக்காலத்தில் நீங்கள் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே நோயின்றி இந்தப் பருவத்தை முழுமையாக நீங்கள் அனுபவிக்க முடியும் என்பதை மறக்க வேண்டாம்.

Sharing is caring!