பக்தனுக்காய் உருகிய இறைவன்

இறைவன் காட்சி தரமாட்டானா என்று தவம் புரிபவருக்கு மத்தியில் பக்தன் ஒருவன் துன்பத்தைக் காண சகியாமல் இறைவனே நேரில் வந்தார். ஆனாலும் சுற்றியிருந்தவர்களால் இறைவனைத் தரிசிக்கும் பேறை பெறமுடியவில்லை.  கோபத்தோடு உக்கிரமாக வெளிவந்த இறைவனைக்  கண்சிமிட்டும் வினாடியில் கூட தரிசிக்க முடியாத நிலைமை நரசிம்மன் தூணிலிருந்து வெளிவரும் சமயம் நேர்ந்தது.

பக்தபிரகலாதனைக் காப்பாற்ற தூணிலிருந்து வெளிப்பட்டார் நரசிம்மர்… மனித உடலும் சிங்கமுகமும் கொண்டு அதிபயங்கரமான உருவத்தில் வெளிவந்த நரசிம்மரை அங்கிருந்தவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கையிலிருந்த ஆயுதத்தையெல்லாம் கீழே வீசியபடி அங்குமிங்கும் சிதறி ஓடினார்கள்.  சுற்றி லும் யாருமின்றி  நடுநடுங்கிய பிரகலாதனின்  தந்தையான இரண்ய கசிபுவை தூக்கி மடியில் கிடத்தினார் நரசிம்மர். அவனை மடியில் தூக்கி அவனது குடலை உருவி மாலையாக்கினார். நரசிம்மர் சற்றும் சாந்தமடையாமல் கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.

நரசிம்மரின் ஆவேசத்தைக் கண்ட தேவர்கள் அவரை சாந்தப்படுத்த முயன்றனர். அவர்களாலும் இயலாத போது மஹாலஷ்மியைத் தஞ்சம் அடைந் தார்கள். ”என்னுடைய கணவரைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. யாரையாவது சமாதானம் செய்ய சொல்லுங்கள். இல்லையென்றால் அவரது சாந்தம் தணியும் வரை பொறுத்திருங்கள்” என்று உறுதியாக கூறிவிட்டாள்.

இவ்வளவு நடந்தும் பிரகலாதன் அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. அவன் கண்கள் பரவசத்தோடு அச்சமின்றி  நரசிம்மனை விட்டு அகலவில்லை. தேவர்கள் நரசிம்மனை சாந்தப்படுத்தும்படி பிரகலாதனிடமே   தஞ்சமடைந் தனர். சிறிதும் அச்சமின்றி நரசிம்மனின் அருகில் சென்ற பிரகலாதனை அள்ளி அணைத்து அமர்த்திக்கொண்டார் நரசிம்மன்.

”என்னை மன்னித்துவிடு பிரகலாதா.. சிறு குழந்தையான உனக்கு என் மீதிருந்த பக்தியின் உறுதியை சோதிப்பதாக நினைத்து  நிறைய கொடுமைகளைத் தந்து விட்டேன். நீ முதலில் அழைத்தபோதே நான் வந்திருக்க வேண்டும்” என்றார்.  ”உன் சிறிய குழந்தையிடன் இத்தகைய பெரிய வார்த்தைகளைத் தாங்கள் சொல்லலாமா இறைவா?” என்றான் பிரகலாதன்.

”உனக்கு என்ன வேண்டுமோ கேள்.. நான் மகிழ்ந்து உனக்களிக்கிறேன்” என்று  சினம் தணிந்தவாறு நரசிம்மன்  கேட்டார்… சிறு வயதிலேயே இறைவனது  அருளைப் பெற்று பக்குவமடைந்து விட்டதாலோ  என்னவோ… பிரகலாதன்  ”என் மனதில் ஆசைகள் என்ற ஒன்று எப்போதும் தோன்றக்கூடாது” என்று கேட்டான்.. இறைவனது வற்புறுத்தலுக்கு இணங்க.. ”என் தந்தை தவறு செய்தாலும் அவரை நிந்தித்து விடாமல் வைகுண்ட பதவி அளியுங்கள்” என்று  கேட்டான். ”நல்ல பிள்ளையைப் பெற்ற பெற்றோர்கள் தவறே செய்தாலும் வைகுண்டப்பதவி அடைவார்கள்”  என்றார்.

பக்தன் இறைவனைக் கண்டு பெருமைப்படும் இத்தருணத்தில் இறைவன் பக்தனைக் கண்டு உருகி நின்றது இந்தத் தருணம் தான்…

Sharing is caring!