பக்தரின் மனதை அறிந்து பீடாவை வாங்கி ருசித்த சாய்பாபா!

சாய்பாபா  துவாரகா மயியில் தன் பக்தர்களோடு அமர்ந்திருந்தார்.  அப்போது அங்கே ஒரு குஷ்டரோகி வந்து கொண்டிருந்தான். அவன் சாய்பாபாவின் பக்தன். ஆகையால், சாய்பாபாவை தரிசித்து அவருடைய ஆசி பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்து கொண்டிருந்தான். ஆனால், அவனது உடல் முழுவதும் அழுகிப்போய் சீழ் வடிந்து துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது.  அவனைக் கண்ணுற்ற தாராபாய் மற்றும்  ஏனைய பக்தர்களும் மிகுந்த வெறுப்புடன் ஒதுங்கி நின்றனர். ஆனால், அன்பு பொங்கும் சாய்பாபா அந்தக் குஷ்டரோகியைப் பாசத்தோடு வரவேற்றார்.

அவன் மிகவும் மெதுவாக கஷ்டப்பட்டு மசூதியின் படிக்கட்டுகளில் ஏறி வந்து எல்லா பக்தர்களை போலவே அக்னி குண்டத்திலிருந்து ஊதியை எடுத்துக் கொண்டு சாய்பாபாவின் காலடியில் பணிவுடன் தலையை வைத்துப் பணிந்தான். அந்தக் குஷ்டரோகி சில பீடாக்களை சாய்பாபாவுக்காக கொண்டு வந்திருந்தான். ஆனால், சாய்பாபா அந்த பீடாக்களை காணிக்கையாகப் பெறுவாரா?, மற்றவர்கள் ஏதும் கூறுவார்களா? என்று தயங்கி அந்த பீடாக்களை திரும்பவும் எடுத்துச் சென்று கொண்டிருந்தான்.  நல்லவேளை அவன் போய்விட்டான் என்று எல்லோரும் சந்தோஷப்பட்டனர். சாய்பாபா தமது பக்தர்களின் எண்ணங்களையும், அந்த குஷ்டரோகியின் மன உணர்வையும் உணர்ந்தார்.

பக்கத்திலிருந்த அன்பர் ஓருவரை சாய்பாபா அழைத்தார். “எனக்கு அளிக்க வேண்டிய காணிக்கையை அளிக்காமல் மறந்து போய்க் கொண்டிருக்கிறார். போய் உடனே அவரை அழைத்து வாருங்கள்” என்றார் சாய்பாபா.
அவர் உடனே சென்று அந்த குஷ்டரோகியை அழைத்து வந்தார். அந்த குஷ்டரோகி மீண்டும் தட்டுத்தடுமாறி மசூதிப்படிகளில் ஏறி நடந்து வந்தான். சாய்பாபாவின் பாதங்களை வணங்கினான். சீழ் வடியும் அவன் கையில் ஒரு அழுக்குத் துணியில் எதையோ முடிந்து வைத்திருப்பதைப் பார்த்த சாய்பாபா, “அது என்ன?” என்று கேட்டார் சாய்பாபா.  தங்களுக்குத் காணிக்கையாக கொடுக்க நான் கொண்டு வந்த பிடாக்கள் தான் என்றார்.
உடனே சாய்பாபா, “ஏன் அதைக் கொடுக்காமல் சென்றாய்?   நான் ஏற்கமாட்டேன் என்று நினைத்தாயா? உன் உடலில்தான் ஊனம்.

உன் ஆத்மாவில் ஊனம் ஏதும் இல்லையே?  அன்போடு கொண்டுவந்த அந்த பீடாக்களை என்னிடம் கொடுத்துவிட்டுச் செல்” என்றார் சாய்பாபா. அதனைக் கேட்டு மிகுந்த பரவசமடைந்தான் அந்தக் குஷ்டரோகி. அவனிடமிருந்து பெற்ற கொண்ட பீடாக்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்ட  சாய்பாபா மற்றவற்றை தாராபாய்க்கும், மற்றவர்களுக்கும் கொடுத்தார். குஷ்டரோகியாக இருந்தாலும், இறைவன் படைப்பில் எல்லாம் ஒன்றுதான் அப்படியானால் அவனும் நமக்கு சமம் தான் என்றார் சாய்பாபா.

                          ஓம் ஸ்ரீ சாய்ராம்

Sharing is caring!