பக்தியோடு வாழ்வியல் நெறிகளையும் எடுத்துக்கூறும் கோயில் சிற்பங்கள்

திருநெல்வேலி:
கோயில்கள் அமைத்த நம் முன்னோர்கள் அதில் பக்தியோடு வாழ்வியல் முறைகளையும், ஒழுக்கத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்கூறும் வகையில் அமைத்துள்ளனர்.

ஒரு கோயில் என்பது பக்தியை மட்டுமே சொல்லும் இடம் மட்டுமல்ல. அதனுள் வரலாறு, மரபு, கலாச்சாரம்,  புராணங்கள் என்று பல்வேறு  அடுக்குகளை ஒன்றுக்குள் ஒன்றாக வைத்து சிற்பங்களாக நிறைத்திருக்கின்றனர்.

நம் முன்னோர்கள் பக்தியோடு வாழ்வியல்  முறைகளையும் ஒழுக்கத்தையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு சொல்லியபடி அமைத்திருக்கின்றனர். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலுள்ள சிற்பம் ஒரு கிராமத்தில் சொல்லப்படும் கதை. அதாவது, அந்த காலகட்டத்தில் நாடகம், கூத்து போன்ற கலைகள் வழியே சொல்லப்படும் கதையே.

ஆனாலும், இந்தச் சிற்பத்தில் அல்லி, அர்ஜுனா கதையை மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரம்போல் அமைக்கவில்லை.
அல்லி என்கிற பெண்ணை கிராமத்துப் பெண்ணாக அந்தச் சிற்பி உருவாக்கவில்லை. அவளை  வடித்த சிற்பி அல்லியின் உடல் அமைப்பு, அவள் அணியும் ஆபரணங்கள், உடை போன்றவற்றை ஒரு ராணியைப்போல் வடித்திருக்கிறார்.

அவளுக்கு ஒரு உதவியாளர் என்று ஏகப்பட்ட முக்கியத்துவத்தை அளிக்கிறார். அர்ஜுனனுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை.  கதையின் நாயகன் என்றாலும் அல்லியை காட்டிலும் முக்கியத்துவம் இல்லை. அல்லியை காதல் திருமணம் செய்து மணமுடித்த அர்ஜுனன் ஒரு கட்டத்தில் அல்லியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணோடு சென்று  விடுகிறான்.

தொடர்ந்து ஒரு கட்டத்தில் அல்லியும் அர்ஜுனனும் சந்திக்கின்றனர், அர்ஜுனனோடு அந்தப் பெண்ணும் இருக்கின்றாள். அப்படிச்  சந்திக்கின்ற தருணத்தில் அர்ஜுனனைப் பார்த்து அல்லி ஒரு கேள்வி கேட்கிறாள். “என்னிடம் இல்லாத அழகு இவளிடம் என்ன  இருக்கிறது என்று இவளுடன் சென்றாய்” என்று.

அதற்கு அர்ஜுனன், “இவளிடம் உள்ள மூக்குதான் அழகு” என்று  சொல்ல, கோபத்தில் அல்லி அவளின் மூக்கை அறுத்து விட்டாள். அதைக் காண்பிக்கும் விதமாக அர்ஜுனன் கூடவே இருக்கும் அந்தப் பெண்ணின் முகத்தில் மூக்கு அறுபட்டதை காண்பித்துள்ளனர்.  அவளைவிட அல்லி எந்த விதத்திலும் குறைந்துவிட இல்லை என்பதை சொல்லும் விதமாக அல்லியின் சிற்பம் அப்படியொரு அழகு.

அல்லியே நேரில் வந்து பார்த்தால்கூட நான்  இவ்வளவு அழகா என்று கேட்கும் அளவிற்கு பார்த்துப் பார்த்து செதுக்கி உள்ளனர். அர்ஜுனன்  மற்றும் அவன் கூடவே இருக்கும் அந்தப் பெண்ணின் முகத்தில் அப்படியொரு திகைப்பு. அல்லியின் முகத்தில் உங்கள் மனதில் எழும்  குமுறல், கோபம், பழிவாங்கும் உணர்ச்சி அத்தனையையும் அல்லியின் முகத்தில் தெரியும்.

அல்லியின் முகத்தில் அர்ஜுனன் அவளை பிரிந்த சோகத்தை இலைமறை காயாக காட்டியுள்ளனர். அல்லியானவள், நான்தான்  கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேனோ அர்ஜுனன் செய்த தவறுக்கு அந்த பெண்ணை பழிவாங்கி விட்டேனோ என்கிற பரிதவிப்பும் இருக்கும்.

அல்லியின் முகத்தை அருகில் நேருக்கு நேராக நின்று பார்த்தால் கோபத்தை பார்க்க முடியும். சற்று தள்ளி இருந்து அர்ஜுனன்  சிலைக்கு அருகில் நின்று அவள் முகத்தை பார்த்தால் எதையோ பழிவாங்கி அர்ஜுனனுக்கு எச்சரிக்கை செய்யும் பாவனையையும் அவள்  மனதை அவளே சமாதானம் செய்துகொண்ட செய்கையும் காணலாம்.

ஒரே முகத்தில் பன்முகத்தன்மையாக மனித குணங்களை காட்டியுள்ள இச்சிற்பத்தை நாம் எத்தனை தடவை ரசித்தாலும் அலுக்கவே  அலுக்காது. ஒரு பெண்ணை காதலித்து அவளை ஏமாற்றி வேறொரு பெண்கூட செல்லும் ஆண்களுக்கு. அதேபோல் ஆண்களை ஏமாற்றும்  பெண்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பதை கோயிலின் உள்ளேயுள்ள சிற்பத்தின் மூலம் அழகாக வடித்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!