பட்டாணி… காளான்… கேழ்வரகு… உடலை வலுவாக்கும் புரத உணவுகள்!

அன்றாடம் நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உட்கொள்ளும் உணவில் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துகளில் ஒன்றாகப் புரதச்சத்துக் கருதப்படுகிறது. புரதச்சத்து என்றதும் அனைவரது பார்வையும் அசைவ உணவுகளின் பக்கமே திரும்பும்.

குறிப்பாக முட்டை, மீன் போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளதால், பெரும்பாலானோர் அவற்றைச் சாப்பிடச் சொல்வார்கள். ஆனால் சைவப்பிரியர்களுக்கு அவற்றைப் பார்த்தாலே வாந்தி எடுக்கும். நீங்கள் சைவப்பிரியராக இருந்தால், இதோ உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய புரதம் நிறைந்த சைவ உணவுப்பொருட்களை இங்கே பார்ப்போம்.

புரத உணவுகள்

1. பட்டாணி (Peas)

புரதம் நிறைந்த உணவுகளில் பட்டாணி மிக முக்கியமானது. இதில் புரதச்சத்து மட்டுமன்றி வைட்டமின் சத்தும் நிறைந்துள்ளது. பட்டாணியைக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தோ, சூப்பாகவோ செய்து சாப்பிடலாம்.

2. கீரை (Spinach)

புரதச்சத்து நிறைந்த உணவுகள் பட்டியலில் பட்டாணிக்கு அடுத்தபடியாக இருப்பது கீரை. நம் வீடுகளின் அருகில் எளிமையாகக் கிடைக்கும் ஒரு உணவு கீரை. கீரையில் பலவகை உண்டு. அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, வல்லாரைக்கீரை என இதன் பட்டியல் நீளும். இந்தக் கீரை வகைகளை வதக்கி நம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கீரையில் புரதச்சத்து மட்டுமின்றி வைட்டமின் போன்ற மற்ற சத்துக்களும் உள்ளன.

3. சோயா பீன்ஸ்

தாவர வகைகளில் சோயா பீன்ஸில்தான் அளவுக்கு அதிகமான புரதச்சத்து உள்ளது. உணவு வகைகளில் பொரியல், கூட்டுச் செய்யும்போதெல்லாம் சிறிது சோயாவை சேர்த்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு வடிவத்தில் சோயாவை வாரத்தில் 2 முறை நம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. சோயாவை நேரடியாக உபயோகிக்க விரும்பாதவர்கள், 1 கிலோ கோதுமை மாவுக்கு 100 கிராம் சோயா வீதம் சேர்த்து அரைத்து உபயோகிக்கலாம்.

4. புரோக்கோலி (Broccoli)

முட்டைகோஸ் குடும்பத்தைச் சேர்ந்த புரோக்கோலி, புரதச்சத்து நிறைந்தது. இதில் புரதச்சத்து மட்டுமன்றி வைட்டமின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இதை வேகவைத்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சூப்பில் சேர்த்தும் உண்ணலாம்.

5. முளை கட்டிய தானியங்கள் (Sprouts)

புரதச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும் என்றால் அனைவருக்கும் பரிந்துரைக்கும் அடுத்த ஒரு உணவுப்பொருள் இந்த முளை கட்டிய தானியங்கள். முதல்நாளில் கடலை, பயறு போன்றவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து, அடுத்த நாள் விதையில் முளைக்குருத்து வந்ததும் அதை எடுத்து சாப்பிட வேண்டும். இதை அப்படியே சாப்பிடலாம்; சமைக்கவேண்டிய தேவை இல்லை. இது புரதச்சத்து தருவதோடு உடல் எடையைப் பராமரிக்கவும் உதவக்கூடியது.

முளை கட்டிய தானியங்கள்

6. காளான் (Mushroom)

புரதச்சத்து நிறைந்த உணவுகள் வரிசையில் காளானும் உண்டு. காளானை வேகவைத்தோ, சூப்பாகச் செய்தோ சாப்பிடலாம். சுவை நிறைந்த காளானில் புரதச்சத்து மட்டுமன்றி உடலுக்குத் தேவையான பல ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன. அத்துடன் உடலில் கொழுப்பு சேரும் ஆபத்தையும் குறைக்கக்கூடியது.

7. சோளம் (Corn)

சோளம், புரதச்சத்து நிறைந்த ஒரு பொருள். மிகவும் சுவையான உணவுப்பொருளான இதை வேகவைத்து நேரடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். இதில் புரதம் மட்டுமன்றி நார்ச்சத்தும் மிகுந்துள்ளது.

8. நிலக்கடலை

முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் நிலக்கடலையில் உள்ளது. இது நமது உடலுக்குத் தேவையான அதிகமான சத்துகளைத் தரும்.. எலும்புகளுக்குப் பலம் தரக்கூடிய கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் நிலக்கடலையில் உள்ளன.

9. கேழ்வரகு

கேழ்வரகில் உள்ள புரதச்சத்துப் பாலில் உள்ள புரதச் சத்துக்குச் சமமாகும். ஆகவே பால் ஒத்துக்கொள்ளாதவர்கள் கேழ்வரகுக் கஞ்சி சாப்பிடலாம். கோதுமையில் உள்ள க்ளூட்டன் என்னும் பசை வகைப் புரதம் போலக் கேழ்வரகில் இல்லை. ஆகவே க்ளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கேழ்வரகை உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

10. உளுந்து

மிகவும் சத்தான பருப்பு உளுந்து. பூப்பெய்தும்போதும், பிரசவத்தின்போதும் பெண்களுக்கு உளுந்து அதிகமாகக் கொடுப்பார்கள். கர்ப்பப்பைக்குத் தேவையான புரதச்சத்து உளுந்தில் அதிகமாக இருப்பதே காரணமாகும்.

Sharing is caring!