பல்லியின் சத்தத்தை அறிந்துணர்ந்த சாய்பாபா

ஷீரடியில் உள்ள மசூதியில் ஒரு நாள் பக்தர்கள் சூழ சாய்பாபா அமர்ந்திருக்கிறார்.  அவர்கள்  ஒவ்வொருவரும் தங்கள்  குறைகளைக் கூறுகின்றனர். சாய்பாபாவைப் பற்றிய பாடல்களை நெஞ்சுருகி இசைக்கின்றனர். அப்போது,  மசூதி சுவற்றில் ஒரு பல்லி. அது ஒயாமல் கத்திக் கொண்டே இருந்தது.  அங்கிருந்தோர் அனைவரும் அந்தப் பல்லியையே கவனித்தனர். அந்த அளவிற்கு அதன் சப்தம் அவர்களைத் திரும்பிப் பார்க்கச் செய்தது.

அப்போது சாய்பாபாவும் அந்தப் பல்லியைப் பார்த்தார்.  அவர் மெல்லிதழ் பிரிந்து சிறிய புன்னகை உதித்தது.  இதனை அருகிலிருந்த பக்தர்கள் பார்த்தனர். சாய்பாபாவின் சிரிப்பிற்கு என்ன அர்த்தம்?  “பல்லி இப்படி ஒயாமல் கத்திக் கொண்டே இருக்கிறதே ! இதனால் நல்லது நடக்குமா? அல்லது தீயது ஏதாவது நடக்கக் கூடுமா?… அந்தப் பல்லியைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிந்தீர்களே , அதற்கான காரணத்தை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா ?” என்று சாய்பாபாவிடமே அவர்கள் கேட்டும் விட்டனர்.

அப்போது,  பல்லியையே பார்த்துக் கொண்டிருந்த சாய்பாபா, பக்தர்களுக்கு விளக்கமளித்தார். ” வேறொன்று மில்லை, இந்த பல்லியின் உடன்பிறப்பு சுமார் நானூறு மைல்களுக்கு அப்பால் இருந்து இன்று இங்கே வரப்போகிறது. தனது சகோதரியைக் காணப் போகிற சந்தோஷத்தில் இந்தப் பல்லி இப்படிக் கத்துக்கிறது என்றார் சர்வ சாதாரணமாக”.

பக்தர்களுக்குக் குழப்பம் இப்போது மேலும் அதிகரித்தது. நானூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் தன் சகோதரி இன்று இங்கு வரப்போவது இந்தப் பல்லிக்கு எப்படித் தெரியும் ? அங்கிருந்த அந்தப் பல்லியால் இங்கு எப்படி வரமுடியும் ? இந்த விவகாரம் சாய்பாபாவிற்கு எப்படித் தெரிய முடியும்? அனைவருமே இந்த விஷயத்தில் தலையைப் பிய்த்துக் கொண்டனர். ஆனால், எதுவுமே நடக்காதது போல அமைதி காத்த சாய்பாபா. தனது பணியைத் தொடர்ந்தார்.

இந்தச் சம்பவம் நடந்த சற்று நேரத்தில் சாய்பாபாவின் பக்தர் ஒருவர் குதிரை வண்டியொன்றில் “அவுரங்காபாத்தில்” இருந்து அங்கு வந்து சேர்ந்தார்.  மிகவும் களைத்துப்போய்க் காணப்பட்டார்.  ரொம்ப தூரம் பயணம் செய்ததால் அவரது குதிரையும் களைத்துப் போயிருந்தது  .
“கொள்ளு எங்கே கிடைக்கும்” என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்தார் .அதனை வாங்கி வருவதற்காக, வண்டியிலிருந்த கோணிப்பை ஒன்றை எடுத்து உதறினார்” .

அங்குதான் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அந்த கோணிப் பையில் இருந்து பல்லி ஒன்று துள்ளிக் குதித்து கீழே விழுந்தது. அப்புறம் கிடுகிடுவென அது வளைந்து வளைந்து ஓடியது.  அப்படியே வேகமாக மசூதி சுவற்றில் ஏறி , அங்கிருந்த பல்லியின் அருகில் போய் சிநேகமாக அமர்ந்து கொண்டது .
இந்தக் காட்சியைப் பார்த்த பக்தர்கள் அதிர்ந்து போனார்கள். இது எப்படி சாத்தியம்?  இப்படியெல்லாம் நடப்பது சாத்தியமா ? சாய்பாபாவின் வாக்கு இத்தனை சத்தியமாகப் பிரதிபலிக்கிறதே , இது எப்படி? எப்படி?

Sharing is caring!