பல பிறவி எடுத்து தீர்க்க வேண்டிய பயனை ஒரே பிறவியில் தீர்த்தவன் யார் தெரியுமா?

அரிச்சந்திரன்…பெயரைக் கேட்டதுமே சொல்லிவிடுவோம் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவன் என்று. வாழ்வின் எத்தகைய நிலையிலும் துன்பமே வரும் என்றாலும் தன்னிலை மாறாமல் உண்மையை மட்டுமே பேசுபவனாக அரிச்சந்திரன் இருந்ததால் தான் யாராவது தான் சொன்னது உண்மை என்று சொன்னாலும் ‘நீர் என்ன அரிச்சந்திரனா?’ என்று கேட்பது வழக்கத்தில் வந்தது. உண்மைக்கு மறுபெயர் அரிச்சந்திரன் ஆனாலும் வாழ்வில் அரிச்சந்திரன் போல் துன்பம் அடைந்தவர்கள் யாருமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சத்தியத்துக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தவனுக்கு எதற்கு இத்தகைய துன்பம் என்று கேட்கலாம். ஆனால் அதற்கு காரணகர்த்தாவும் அவனே தான். அதைத் தெரிந்து கொள்ள அவனது முற்பிறவியைப் பற்றியும் கொஞ்சம் அறிந்துகொள்ள வேண்டும். காசிநகரை ஆண்ட காசிராஜன் தனது மகள் மதிவாணிக்கு சுயம்வர விழா நடத்துவதாக பிறநாட்டு அரசர்களுக்கு ஓலை அனுப்பினான்.

மகத நாட்டு மன்னன் திரிலோசனன் இந்த சுயம்வரத்தில் கலந்துகொண்டான். கூண்டில் இருக்கும் சிங்கத்தைஅடக்க வேண்டும் என்று காசிராஜா சொன்னபோதும் எல்லோரும் தயங்கிய போது அச்சமின்றி கூண்டுக்குள் முதலாவதாக சென்று சிங்கத்தை அடக்கி மதிவாணியை கைப்பிடித்தான். இவனது வீரத்தால் பொறாமை கொண்ட மன்னன் ஒருவன் இவன் தியானத்தில் இருந்த போது பின்புறமாக வந்து தலையை வெட்டி உயிரைப் பறித்தான். இதைக் கேள்விபட்ட மதிவாணியும் ஆற்றுக்குள் விழுந்து உயிரை விட துணிந்து கங்கையில் விழுந்தாள்.

கங்கையில் நீராட வந்த கெளதம முனிவர் அவளைக் காப்பாற்றி  “தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்” என்று ஆசிர்வதித்தார். நடந்ததைக் கேள்வியுற்ற அவர் “கவலைப்படாதே மகளே… அடுத்த ஜென்மத்தில் நீ பிறக்கும் போது மாங்கல்யத்துடன் பிறப்பாய். ஆனால் யார் கண்ணுக்கும் இது தெரியாது. சூரிய குளத்தில் பிறக்கும் உன் கணவன் திருமணக்காலத்தில் இதைக் கண்ணுற்று உன்னை மணம் புரிவான்” என்று கூறினார்.

அவரது ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்தபடி உயிர் துறந்தாள் மதிவாணி. அடுத்த ஜென்மத்தில் அவள் கணவன் அரிச்சந்திரனாகவும், இவள் சந்திரமதியாகவும் பிறந்து திருமணம் புரிந்து லோகிதாசன் என்னும் ஆண்மகனையும் பெற்றெடுத்தாள். குழந்தை சகிதம் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.

ஒருநாள் இந்திர சபையில் இந்திரன் பூலோக மன்னர்களில் சிறந்தவன் யார் என்று கேட்டான். வசிஷ்டர் என்னுடைய சீடன் அரிச்சந்திரன் தான் தலையே போனாலும் சத்தியம் தவறாதவன் என்பதால் சந்தேகம் வேண்டாம் என்று வாதிட்டார். குறுக்கே புகுந்த விஸ்வாமித்திரர்  சந்தர்ப்பங்கள் வந்தால் அரிச்சந்திரன் சத்தியத்தை மீறுவான் அதற்கான சந்தர்ப்பங்களை நான் உருவாக்குவேன் என்றார்.

விஸ்வாமித்திரர் கூற்றுப்படி நாட்டை இழந்தான். செல்வத்தை இழந்தான்.  குடும்பத்தை பிரிந்து மயானத்தில் பிணம் எரிக்கும் வேலையை செய்துவந்தான். ஆனால் ஒருபோதும்  சத்தியத்திலிருந்து தவறாமல் இருந்தான். இதற்கு காரணம் முற்பிறவியில் திரிலோசனாக இருக்கும் போது  விஸ்வாமித்திரரிடம் பிறவா நிலையை அடைய வேண்டும் என்ன செய்யலாம் என்று கேட்டான். ”உன்னுடைய வினைகள் உன்னை பின் தொடர்கின்றன. அதனால் இன்னும் நீ பல பிறவி எடுக்க நேரிடும்” என்றார்.

”இல்லை மொத்த வினையையும் அடுத்த பிறவியில் தீர்த்துக் கொள்ள ஆசைபடுகிறேன்” என்றான். ”அது மிகவும் கடினம். அவ்வளவு துன்பத்தையும் சகித்து வாழ்வது மிகுந்த துயரம். உன்னால் இயலுமா?”  என்றார். ”நிச்சயமாக” என்றான் திரிலோசனன். அதுபோலவே அரிச்சந்திர பிறவியிலேயே மொத்த பிறவி வினையையும் அனுபவித்து சத்தியம் தவறாமல் வாழ்ந்து பிறவா நிலையை அடைந்தான்.

இந்த ஒரு பிறவி போதும், மீண்டும் ஒரு பிறவி எடுக்காமல் இருக்க என்று சொல்லி அலுத்துக்கொள்கிறோம். ஆனால் பிறவி முழுக்க தீர்க்க வேண்டிய பயனை ஒரு பிறவியில் தீர்த்துக்கொள்ள முடியுமா?

Sharing is caring!