பழங்களின் சத்துக்கள் முழுமையாக கிடைக்க இப்படித்தான் சாப்பிடணும்

பழங்கள் உடலுக்கு நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு பழத்திலும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களில் ஏதேனும் நான்கு சத்துக்களை கொண்டிருக்கிறது. ”நான் தினமும் பழம் சாப்பிடறேன். ஆனாலும் சத்து அதிகமான மாதிரி தெரியலியே” என்பவர்களிடம் ”எப்போது பழம் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால்.. அதற்கு தனியாக நேரமெல்லாம் ஒதுக்குவது கிடையாது. எப்ப தோணுதோ அப்பல்லாம் சாப்பிடுவேன், சத்து கிடைக்குமில்ல” என்று வெகுளியாக சொல்வார்கள். ஆனால் பழத்தில் சத்துக்கள் இருக்கலாம். சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்க சரியான நேரத்தில் சரியான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம்.

பெரும்பாலான குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் எல்லாம் பழத்துண்டுகள் தான் என்று பெருமைப்படகூறும் அம்மாக்களே கொஞ்சம் கவனியுங்க. பழத்தை  நன்றாக அலசி தோல் நீக்காமல் சாப்பிடக்கூடிய பழங்களை (ஆப்பிள், பேரிக்காய், கொய்யா, மாம்பழம்…) நறுக்கி அப்படியே சாப்பிட கொடுக்க வேண்டும். மாறாக நறுக்கிய பழங்களை டப்பாவில் அடைத்து இரண்டு மணிநேரம் கழித்து சாப்பிட்டால் சத்துக்கள் எப்படி உடலுக்கு சேரும். முதலில் பழங்களை எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

விரும்பிய நேரமெல்லாம் பழங்களைச் சாப்பிடக்கூடாது. சிலர் சாப்பிட்ட உடன் கப் நிறைய பழங்களோடு முடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இது உடலுக்கு நல்லதல்ல என்பதோடு பழங்களில் இருக்கும் சத்துக்களும் உடலில் சேராது. காலை, மதியம் இருவேளையும் உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு பழங்களோடு தொடங்கலாம். என்ன பழங்கள் என்றில்லாமல் ஏதேனும் ஒரு பழம் அல்லது பழக்கலவை ஒரு கப் எடுத்துக்கொள்ளலாம்.

பழங்கள் எளிதில் செரிமானமாகும் என்பதால் ஜீரண உறுப்புகள்  சீராக செயல்படும். உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடண்ட் முழுமையாக கிடைக்கும். அன்றைய நாள்முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்து சோர்விலிருந்து காப்பாற்றும். மலச்சிக்கல் பிரச்னைகளால் தவிப்பவர்கள் நார்ச்சத்து மிக்க பழங்களை எடுத்துக்கொண்டால் விரைவில் இதிலிருந்து நிவாரணம் பெறலாம்.

உணவுடன் பழங்கள் சாப்பிட்டால் பழங்களினால் கிடைக்கும் சத்துக்களும் முழுமையாக  கிடைக்காது. எளிதில் செரிமானம் ஆகாமல் மற்ற உணவுகளையும் சேர்த்து செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும். கூடவே உணவில் இருக்கும் சர்க்கரையும் பழத்தில் இருக்கும் சர்க்கரையும் சேர்ந்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். அப்படியே உணவுக்கு பிறகு பழங்களை எடுத்துக்கொள்வதாக இருந்தால்  ஒரு மணி நேரம் கழித்தே பழங்களைச் சாப்பிட வேண்டும்.

பழங்களை பழங்களாகவே சாப்பிடவேண்டும். பளீர் வைரமாய் மின்னும் சர்க்கரை சேர்த்த பழச்சாறுகள் உடலுக்கு கெடுதலை மட்டுமே தரும். இயன்றவரை பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது. கோடைக்காலங்களில் மட்டும் நீர்ச்சத்து தேவைக்கு பழச்சாறு அருந்தலாம். முலாம்பழம், வெள்ளரிப்பழங்களில் சுவைக்கு இனிப்பு சேர்ப்பதாக இருந்தால் நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தலாம். அந்தந்த பருவகாலத்து ஏற்ப கிடைக்கும் பழங்கள் அனைத்தையும் சாப்பிட வேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட சத்துக்கள் மட்டுமில்லாமல் அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.

பழங்கள் நம் உடலின் உறுப்புகளை சீராக இயங்க வைக்க உதவுகிறது. சருமத்தை பளபளக்க வைக்கிறது. உணவுக்கு பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் பழங்களை எடுத்துக்கொண்டால் இது  உடல் எடையை அதிகரிக்க செய்யாது என்பதோடு உடல் பருமனையும் குறைத்து விடும்..

விலை உயர்ந்த பழங்கள் தான் அதிக சத்துக்களைக் கொண்டுள்ளது என்று எண்ணம் சிலருக்கு உண்டு. ஆனால் கொய்யா, நெல்லிக்கு இணையான பழ வகை இல்லை என்றே சொல்லலாம்.  இனி பழங்களோடு  உங்கள் நாளை தொடங்குங்கள்..

Sharing is caring!