பாபாவின் அருளால் சிறையிலிருந்து விடுதலை!

ஒரு சமயம் தத்யா பாட்டீல் என்பவர் சீரடியில் வசித்து வந்தார். இவர்  சாய்பாபாவின் நெருங்கிய பக்தர்களில் ஒருவராக விளங்கினார்.  தத்யாவைப் போலவே அவரது பெற்றோரும் சாய்பாபாவின் மீது மிகுந்த பக்தியும், விசுவாசமும் கொண்டிருந்தனர். அதுவே, தத்யா பாட்டீலுக்கு சாய்பாபா மீது மிகுந்த நம்பிக்கையும், பாசமும் ஏற்படக் காரணமாகவே  இருந்தது.

ஆனால், தத்யா  இயல்பாக முரடனாக இருந்தார்.  சண்டை சச்சரவுகள், அடிதடிகள் ஏராளம். அப்படி  இருந்தாலும் சாய்பாபாவின் மீது அவருக்கு அளவில்லாத அன்பு இருந்தது. ஆகவே, தத்யாவை முரட்டுப் பாதையில் இருந்து ஆன்மிகப் பாதைக்கு மாற்ற வேண்டும் என்று  சாய்பாபா விரும்பினார். அவரை  மிகுந்த அன்புடனும், ப்ரியத்துடனும்  நேசித்து  வந்தார். ஒரு குழந்தையைப் பராமரிப்பது போல தத்யாவிடம் நடந்து கொண்டார்.

ஒரு சமயம், தத்யா தனது  நண்பர்களுடன் சேர்ந்து  ஏதோ தவறு செய்து காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டார். நீதிமன்றமும் அவர்கள் செய்த தவறுக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.   தத்யா சிறைக்குள் தள்ளப்பட்டார்.  மேல்முறையீடு செய்து வெளியே வர விருப்பம் தத்யாவிற்கு. அதனைத் தனது வழக்கறிஞரிடம் கூறினார் தத்யா. ஆனால்,  அவரோ, அப்படிச் சாத்தியமில்லை என்றும், குற்றம் மிக ஆழமாக நிரூபிக்கப்பட்டு விட்டதால், தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று கூறி மேல்முறையீடு செய்வதில் இருந்து பின்வாங்கி விட்டார் வழக்கறிஞர். இது தத்யாவிற்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. சாய்பாபாவிடம் சென்று முறையிட்டார் தத்யா.

தன்னை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டார். அப்புறம் தான் அந்த அதிசய திருப்பங்கள் நிகழ்ந்தன.  மறுப்பு தெரிவித்து வந்த வழக்கறிஞர் மனம் மாறினார்.  தாமாகவே வலிய முன்வந்து மேல்முறையீடு செய்தார்.    நீதி மன்றமும் அந்த வழக்கை பரிவுடன் நோக்கியது. பிரதிவாதங்கள் செய்வதற்குக் கூட சந்தர்ப்பங்கள் அளிக்காமல் அந்த வழக்கில் தத்யாவிற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார் நீதிபதி. தத்யா விடுதலை செய்யப்பட்டார்.  இது நடந்த உண்மை. சாய்பாபா இப்பூவுலகில் நடத்திக் காண்பித்த அற்புதங்களில் இதுவும் ஒன்று.

ஆனால், தனது உண்மையான பக்தன் என்பதற்காக ஒரு குற்றவாளியை சாய்பாபா விடுதலை  செய்து விட்டார் என்று  பக்தர்கள் சிலர் வருத்தம் தெரிவித்தனர்.

Sharing is caring!