பாபாவின் தோற்றமும், செயல்பாடுகளும்!

பாபாவின் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். அவரது ஒவியத்தைக் கண்டு இன்புற்றிருக்கிறோம். ஆனாலும் அவரை நேரில் கண்டவர்களிடம் கேட்டு விசாரித்த விபரங்களை விரிவாக எழுதுவது தானே முறை?

நல்ல பொன்னிற மேனி கொண்ட பாபா, சுமார் ஐந்தரை அடி உயரம். நீலநிறம் உடைய கண்கள். அவர் தனது பற்களைத் துலக்கிப் பார்த்தவர்கள் எவருமே இல்லை. எனவே, மஞ்சள் கறைபடிந்து காணப்பட்டன. தேநீர் அருந்துவது  இல்லை. ஆனால் ஹூக்கா பிடிக்கும் பழக்கம் மட்டும  அவருக்கு இருந்தது. அந்தப் பழக்கத்தை எப்போது, எங்கே கற்றுக்கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம். ஹூக்கா பிடிப்பதற்கான குழாயும் களிமண்ணால் செய்யப்பட்டது தான். அவரது பக்தர்கள் விதவிதமான குழாய்களை அன்புடன் வாங்கிக் கொடுத்தும், அவற்றையெல்லாம் குழி ஒன்றினுள் போட்டு மூடி வைத்துவிடுவார். அவர் பயன்படுத்தி வரும் இந்த மண் குழாயும் அவ்வபோது உடைந்து விடும். என்றாலும் அதனை வீணடிக்க விரும்பாமல் பழுது பார்த்துவிட்டு, மீண்டும் உபயோகிப்பார்.

கர்சீப்பை விடவும் சற்றே பெரியதான துணியொன்றை தலையைச் சுற்றி கட்டும் பழக்கம் பாபாவிற்கு இருந்தது. அந்தத் துணியை சலவை செய்ததோ, துவைத்ததோ கிடையாது.  ஆனால், அவருக்கே திடீர் திடீரென்று அதனை மாற்ற வேண்டும் என்று தோன்றும் போலும். அப்போதெல்லாம் தையற்காரரை வரவழைத்து, வேறொரு துணி தைத்துத் தருமாறு கேட்டுக்கொள்வார். தைத்துக் கொடுத்ததும் அவருக்குத் தன் சட்டைப் பையிலிருந்து நாணயங்களை அள்ளிக் கொடுப்பார். அது தையற்காரரின் நியாயமான கூலியை விடவும் அதிகமாகவே இருக்கும் என்பது தான் வியப்பின் உச்சம்.

பெரும்பாலான வேளைகளில் கண்களை மூடி தியானத்தில் இருப்பதே அவரின் வழக்கம். பக்தர்கள் திரண்டிருப்பதைப் பற்றிக்கூட அவர் அதிகம்  அலட்டிக் கொள்வதில்லை. தன் கடமையே கண்ணாக தியானம் செய்வதிலேயே மூழ்கிவிடுவார். குழந்தைகள் மீது அதிக அளவு பாசமும், பற்றும் வைத்திருந்தார்; பாபா. அவர்களோடு ஓடியாடி விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. இரவு வேளையைத் தவிர்த்து, பகல் நேரங்களில் படுத்து உறங்கும் பழக்கம் பாபாவிற்குக் கிடையாது. கால் நீட்டி உட்கார்ந்திருந்தாலும், சுவரில் சாய்ந்தோ, நாற்காலியில் சாய்ந்தோ இருப்பதே இல்லை.

குறுந்தாடி வைத்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். திடீரென்று மொட்டையடித்துக் கொள்ளத் தோன்றும். முடிதிருத்துபவரை வரவழைத்து அப்படியே மொட்டையடித்துக் கொள்வார். அடிக்கடி இவ்வாறு செய்து கொள்ளும் பழக்கம் பாபாவிற்கு உண்டு கஃபனி  என்றழைக்கப்படும் நீண்ட கைகளை உடைய சட்டையைத் தான் பாபா அணிந்து வந்தார். உடைகள் மீது அத்தனை ஆர்வம் இல்லாத காரணத்தால், நைந்து, கிழிந்து போன ஒரே சட்டையைப் பல நாட்கள் அணிந்திருப்பார். எப்போதாவது அதனை துவைக்கும் பழக்கம் உண்டு. அதன் ஈரம் வேகமாகக் காய்வதற்காக, நெருப்பு குண்டத்தின் மேல் தூக்கிப்பிடிப்பார்.

Sharing is caring!