பாபாவே குரு…!!!

இன்பத்திலும் துன்பத்திலும் மனத்தை இயல்பாக வைத்திருக்கும் பக்குவத்தை பாபாவின் பக்தர்கள் இயல்பாகவே பெற்றிருப்பார்கள். கடல் அலைபோல் திரண்டு நம்மை மூழ்கடித்தாலும், வானம் இடிந்து உச்சி மீது விழும் நிலை வந்தாலும் பாபா என்னு இரண்டெழுத்துக்கள் செய்யும் மாயத்தை  விவரிக்க இயலாது… உணர முடியும்..

பாபாவின் பக்தன்  நானாவல்லி அவனுக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை இருந்தது.. பாபாவின் ஆசனத்தில் அமரவேண்டும் என்பது தான் அது… ஒருமுறை ஷீரடியில் பாபா மசூதியில் அமர்ந்திருக்கும் போது வந்தான்..  பாபாவைச் சுற்றி  அவருடைய பக்தர்கள் இருந்தார்கள்.. பாபாவின் முகம் அன்று வழக்கத்தை விடவும் புன்னகையால் நிரம்பியிருந்தது.. அட என்ன ஆச்சர்யமான தருணம் இது.. இன்று நம்முடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றபடி பாபாவின் காலில் வீழ்ந்து வணங்கினான்.

”சொல் நானாவல்லி என் ஆசனத்தில் அமரவேண்டும் என்னும் ஆசையை இன்று தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று வந்திருக்கிறாய் சரிதானே” என்றார் சாந்தமாக.. அவனுக்கு பெருமை தாங்கவில்லை. ”குருவே.. தங்களுக்கு எப்படித் தெரியும். நான் உங்கள் ஆசனத்தில் அமரவேண்டும் என்பதை சட்டென்று யூகித்து விட்டீர்களே.. ஆனால் நான்  உங்கள் இருக்கையில் சற்றுநேரம் அமர விரும்புகிறேன். அனுமதி கிடைக்குமா?”  என்று கேட்டான்..

பாபா தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தார்.  ”நீயே உட்கார் நானாவல்லி.. உன் ஆசையை நிறைவேற்றுவதில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்று எழுந்தார். கையோடு அவனைப் பிடித்து அமரவைத்தார். அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பாபா ஏதோ செய்கிறார் என்பதால் சுவாரஸ்யமாக நடப்பதைக் கவனித்தார்கள். பாபா நானாவை உட்கார வைத்து, சற்றுநேரம் நடந்தார்..

நானாவுக்கு பெருமை தாங்கவில்லை.. பின்னே பாபாவின் இருக்கையில் அமர்ந்து விட்டானே… இனி பக்தர்களின் பிரச்னையைத் தீர்க்கும் அளவுக்கு பக்குவம் வந்துவிடும் என்று மகிழ்ந்தான். கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்தான்…என்ன இது ஏதோ நெருடலாக இருக்கிறதே.. ஏதோ குத்துகிறதே என்று எழுந்து பார்த்தான். இருக்கையில் மெல்லிய துணி ஒன்று இருந்தது.. ஆனால் நேரம் ஆக ஆக அவனுக்கு முள் குத்தும் இருக்கையாக மாறி அவனை துன்புறுத்தியது..

மண்டைக்குள் குடைச்சல்.. இருக்கையில் முள் நெருடல்.. எப்படி இப்படி ஒரு அமைதி பாவத்துடன் பாபாவால் உட்கார முடிகிறது என்று இருக்கையில் அமரமுடியாமல் பாபாவிடம் ஓடிச்சென்று காலில் விழுந்தான். ”என்னால் முடியவில்லை பாபா.. எப்படி உங்களால் முள் மீது அமைதியாக இருக்க முடிகிறது…  பாபா பட்டென்று சொன்னார் பக்தர்களின் பிரச்னைகளை நான் ஏந்திக் கொள்ளும்போது வலி உண்டாவது இயல்புதானே …அவர்களை மகிழ்ச்சிபடுத்த நான் அந்த சுமையை ஏற்கிறேன் அவ்வளவே” என்றார்..

நான் அற்ப மானிடன் என்பதை உணரவைத்த மகான் நீங்கள்.. உங்களை குருவாக அடையும் பேறை எனக்கு தந்து என்னை உயர்த்திவிட்டீர்கள் என்றான் நானாவல்லி…

பாபா மஹாசமாதி அடைந்த 13 ஆம் நாள் இவன் இறைவனடி சேர்ந்தான்.. பாதுகாத்து பக்குவப்படுத்தும்  குணம் பாபாவுக்கு மட்டுமே உரியது… இதை வார்த்தைகளால்  புரிய வைக்க முடியாது. ஆனால் பக்தனாய் உணர முடியும்.

Sharing is caring!