பாபா என்றதும் ஏன் கண்ணீர் பெருகுகிறது தெரியுமா?

மகான்களைப் பற்றி பேசினால் நேரம் போவதே தெரியாது. காரணம் அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையுமே நொடிவிடாமல் அவர்களைப் பற்றிய சிந்தனைகளை நமக்கு தருகிறது. புராணக் காலங்களிலும், ரிஷிகளும் வாழ்ந்த இந்த புண்ணிய பூமியில்  கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகானை அனைவரும் அறிந்திருப்பதிலும் பக்தியில் பெருமைப்படுவதிலும் ஆச்சரியமில்லை.

ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று எந்த பாகுபாடுமின்றி அனைவரும் அந்த மகானுக்கு சமமானவர்கள் தான். பக்கிரியாக இருந்தாலும் பலருடைய மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்த அந்த மகானை எவ்விதம் உயர்வாக சொல்லி புரிய வைக்க முடியும்.   யாரென்று யூகிக்க நொடிகள் கூட தேவைப்படாது. அவர்தான் சாய்பாபா. அவர்தம் பாதம் பட்டதால் ஷீரடி நகரமே புண்ணியம் பெற்றுவிட்டது. அதில் வாழ்ந்த வாழும் வாழக்கூடிய மக்கள் அனைவருமே புண்ணியம் செய்தவர்கள். அப்படி என்ன பாபா செய்துவிட்டார்?

சிறப்புமிக்க ஆலயங்களில் இறைவனைத் தரிசிக்க இலவச தரிசன வழி, சிறப்புக் கட்டணம் என்று பிரிவுகளில் நுழைந்து இறைவனைக் கண்களால் தரிசிக்க தவம் கிடைக்கிறோம். இறைவனிடம் இருக்கும் அர்ச்சகர்கள் இடைத்தரகர்களாய் நமக்கும் இறைவனுக்கும் இடையில் நிற்கிறார்கள். ஆனால் எவ்வித இடையூறுகளும் பாகுபாடுமின்றி வரிசையில் நின்று மனம் முழுக்க பக்தி நிரப்பியபடி பாபாவின் அருகில் சென்று அவர் பாதம் பிடித்து வணங்குகிறோம். அந்த நொடி ஒன்று போதும் இப்பிறவி பயனை தீர்த்துக்கொள்ள. அவ்வளவு பேரானந்தத்தை எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்கமுடியாது என்பதை பக்தர்களே மெய்சிலிர்த்து சொல்கிறார்கள்.

 இறைவனது சந்நிதியில் எனக்கு என்ன வேண்டும் என்று பட்டியலிடுபவர்களால் பாபாவின் சந்நிதியில் கேட்க இயலாமல் போகிறது. மனம் முழுக்க நிறைந்திருக்கும் அன்பு … பாபாவுக்கு எல்லாம் தெரியும் அவரே நடக்கும் அனைத்துக்கும் காரணகர்த்தா. பிரச்னைகளை உண்டாக்க தெரிந்தவனுக்கு தீர்வு தர தெரியாதா என்று நினைக்க வைக்கிறது. பக்தர்களுக்கு வேண்டுவன எல்லாம் வேண்டாமலேயே கிடைக்கும் இடம் பாபாவின் இருப்பிடம் தான். நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தில் காட்சி தரும்  பாபாவின்  அருகாமையை  பக்தர்களால் எளிதில் உணர்ந்துகொள்ள முடியும். தாங்கொணா துயரமாக இருந்தாலும் அதிலிருந்து மீட்சி தர பாபா இருக்கும் போது அதை சமாளிக்கும் குணத்தையும் பக்குவத்தையும் பெற்றிருக்கும் பக்தர்கள்  பாபாவிடம் அதிகமுண்டு.

பாபா வாழ்ந்த பூமியில் தான் பாபாவின் ஆற்றல் நிறைந்திருக்கிறது. அங்கு தான் அவரது ஆசி கிடைக்கும். அந்த இடத்தில் கால்பதிப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று சொல்லும் பக்தர்கள் உண்டு. உண்மைதான். ஆனால் அத்தகைய இடத்துக்கு செல்லும் வாய்ப்பு கிட்டாதவர்கள் இதனால் மனம் தளர வேண்டாம். பாபாவின் வாக்கை நினைவுப்படுத்தி பாருங்கள். உலகின் எந்த மூலையில்  இருந்தாலும்  இக்கட்டான சூழலில் என்னை நினைத்தால் அடுத்த நொடி உங்கள் முன் இருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். இப்படி எத்தனையோ பக்தர்களின் துயரை துடைத்திருக்கிறார்.

என்னை காப்பாற்ற பாபா இருக்கிறார் என்னும் பக்தர்களின் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார். பாபா என்றதும் பக்தர்களின் கண்களில் இருந்து பெருகி வரும் கண்ணீர் முழுக்க முழுக்க அன்பினால் வருவது. தாய்க்கும் சேய்க்கும் இடையிலான அன்பை விட பேரன்பானது. தூய்மையானது. அத்தகைய அன்பை பெற உடல் தூய்மையை விட மனத்தூய்மை, பொறுமை, அன்பு,  நம்பிக்கை  மட்டுமே தேவை.

Sharing is caring!