பித்ருக்களின் ஆசியைப் பெறவும் விதியை வெல்லவும் அவசியம் இன்று ஏற்ற வேண்டிய யம தீபம்…!

தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. மரணபயம் நம்மைவிட்டு அகலவும் துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் நாம் அந்த யமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும். நமக்கு எல்லாமே நல்லதாய் நடக்கும். இறப்பை அமைதியாக தெளிவான குழப்பமில்லாத மனதுடன் எதிர்நோக்க முடியும். வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வரும் நிலையில் இன்று (25) வெள்ளிக்கிழமை பிரதோஷத்தன்று யம தீபம் ஏற்றும் நாளாகும்.

யம தீபம்: தீபாவளிக்கு முந்தைய தினத்தன்றும் மஹாளய பக்ஷத்தில் மஹா பரணியிலும் யம தீபம் ஏற்றுவது நம் மரபு. மரணபயம் நம்மைவிட்டு அகலவும் துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் யமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும். மஹாளய பட்ச நாட்களில் குறிப்பாக மஹாளய பட்ச அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.

சந்ததிகளை ஆசீர்வதிக்க வரும் முன்னோர்கள்: நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கின்ற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. பித்ருக்கள் பக்ஷமான ஆடி மாதத்தில் பித்ருக்கள் தங்களின் சந்ததிகளை ஆசீர்வதிக்க பூலோகத்திற்கு வருவதாகவும் பின் தீபாவளி அமாவாசையன்று பூவுலகை விட்டு மீண்டும் பித்ருலோகத்திற்கு புறப்பட்டு உத்தராயண புண்ய காலத்தில் தை அமாவாசையில் பித்ருலோகம் சென்றடைவதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றுதல் வேண்டுமாம். சாஸ்திரங்களும், தீபாவளிக்கு முதல் நாளான திரயோதசி திதி அன்று மாலை நேரத்தில் எம தீபம் ஏற்ற வேண்டும்!’ என்கின்றன. அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே.

இந்த வெளிச்சத்தில் அவர்கள் சுகமான பயணம் மேற்கொள்ளும்போது இப்படி அவர்களுக்கு வெளிச்சம் காட்டிய நம்மை ஆசீர்வதித்துச் செல்கின்றனர். அந்த ஆசீர்வாதம் நமக்கு பல நன்மைகளை வாரி வழங்கக்கூடியது. அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை நாம் பெற ‘இந்த யமதீபத்தை’ ஏற்றி வழிபட வேண்டும். எம தீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதி இல்லாதவர்கள். வழக்கமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றும்போது, தனியே ஓர் அகல் ஏற்றி வழிபடலாம். இதனால், முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவானாம். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது.

நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்! யம தீபமானது முக்கியமாக துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்னைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள். என்றாலும் எவரேனும் இறந்தால் மட்டுமே யம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது.

யம தீப வழிபாடாக, எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும், இல்லத்திலும், எட்டுத் திக்குகளிலும் வைத்து திரிகளை ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று, அந்தந்த திக்குகளை தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கிப் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் நின்று பூஜித்து, யம தீப தேவதா மூர்த்திகளை உலக ஜீவன்களுக்கு உள்ள எமபயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணைபுரிவீர்களாக என்று வேண்டிட வேண்டும்.

யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும். சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே அமையும். அத்தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும். இது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும். யம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.

ஜோதிடத்தில் யமனுக்கு உள்ள தொடர்பு:

சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சுவர்ச்சலாதேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள். அந்த பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டாள். பிறகு அவள் இனி நீ சூரியனுடன் குடும்பம் நடத்து என்று கூறி விட்டுத் தன் தந்தை வீட்டுக்குச் சென்று விட்டாள். இதையடுத்து சாயாதேவிக்கு சூரியன் மூலம் தபதீ என்ற மகளும் ச்ருதச்ரவசி, ச்ருதசர்மா என்ற 2 மகன்களும் பிறந்தனர்.

இவர்களில் ச்ருதசர்மா உன்னத பலன்கள் பெற்று சனிபகவான் என்ற அந்தஸ்தைப் பெற்றார். சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டமும் பெற்றார். ஒரு ஆத்மாவை உருவாக்குவதில், ஆத்மகாரகனான சூரியனும் அந்த ஆத்மாவின் ஆயுளைத் தீர்மானிப்பதில் சூரியனின் புத்திரர்கள் மற்றும் ஆயுள் காரகனான சனீஸ்வர பகவானும், அவருடைய அதிதேவதையான யமனும் தான் எனப் பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது.

சனீஸ்வர பகவான் ஜோதிட சாஸ்த்திரத்தில் ஆயுள் காரகன் என்ற அதி முக்கியமான பதவியில் இருப்பவர். சூரிய பகவானின் இரண்டாவது புதல்வர். காக்கையை வாகனமாக கொண்டவர். ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சனியும் ஒருவர். முதல் புத்திரர் யமன். பின்னவர் ஆயுளை வளர்த்தால், முன்னவர் ஆயுளை பறிக்கும் தொழிலை செய்பவர். சகோதரி யமுனை. சனி கர்ம வினை கிரகம். கலியுகத்தில் சகல தெய்வங்களின் தூதுவனாக நின்று நன்மையோ தீமையோ செய்கிறார். அதனால் எந்த ராசியில் நின்றாலும் தப்பு செய்தால் அவருக்கு பிடிக்காது.ஜோதிடத்தில் எட்டாம் வீட்டை ஆயுள் ஸ்தானம் என்றும் குறிப்பிடுவார்கள். எட்டாம் வீட்டில் சனைஸ்வரர் நின்றுவிட்டால் அந்த ஜாதகர் நீண்ட ஆயுளை பெற்றிடுவார். சனைஸ்வரர் மட்டுமே காரஹோபாவ நாஸ்தி எனும் தோஷத்திலிருந்து விளக்கு பெறுகிறார்.

யாரெல்லாம் யம தீபம் ஏற்றலாம்?

1. பரணி, மகம், சதையம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் யம தீபம் ஏற்றுவது சிறப்பு. நக்ஷத்திர ஸூக்தத்தில் பரணி நக்ஷத்திரத்திற்கு யமனையும் மகத்திற்கு பித்ருக்களை அதிதேவதையாகவும் கூறப்பட்டுள்ளது. வருஷாதி நூல்களில் சதயத்திற்கு யமனை அதிதேவதையாக கூறப்பட்டுள்ளது.

2. சனைச்சரனின் ஆதிக்கம் நிறைந்த நக்ஷத்திரங்களான பூசம், அனுஷம் மற்றும் உத்திரட்டாதி நக்ஷத்திரங்களை ஜென்ம நக்ஷத்திரங்களாக பெற்றவர்கள்.

3. யமனை அதிதேவதையாகக் கொண்ட சனைஸ்வர பகவான் ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்றவர்கள்.

4. ஆயுள் ஸ்தானத்தில் சனைஸ்வர பகவான் நீசம், வக்ரம் அல்லது பலமிழந்தவர்கள்.

5. சூரியனும் சனைஸ்வரரும் சேர்க்கை பெற்றவர்கள்.

6. ஆயுள் ஸ்தானாதிபதி ருத்ரனை அதிதேவதையாக கொண்ட திருவாதிரை அல்லது ருத்ரனை அதிதேவதையாகக் கொண்ட கேதுவின் நக்ஷத்திரங்களில் அஸ்வினி, மகம், மூலம் நக்ஷத்திர சாரங்களில் நிற்க பெற்றவர்கள்.

யம தீபம் எங்கு ஏற்றலாம்?

1. துவாபர யுகத்தில் தோன்றிய மார்க்கண்டேயனுக்குப் பதினாறு வயதில் ஆயுள் முடியும் என்று விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தருணத்தில் மார்க்கண்டேயன், திருக்கடவூர் இறைவனை கட்டித் தழுவியபடி இருந்தான். அவனது உயிரைப் பறிக்க வந்த எமன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால் கோபம் கொண்ட இறைவன், தன் காலால் எமனை எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தார். யமனையே சம்ஹாரம் செய்த ஸ்தலம் என்பதால் இதனை யம தண்டீஸ்வரர் என்றும் பிற்காலத்தில் தண்டீஸ்வரம் என்றும் மாறியதாக ஸ்தல புராணம் தெரிவிக்கின்றது.

சோமாசுரன் என்னும் அசுரன், நான்கு வேதங்களையும் பிரம்மாவிடமிருந்து பறித்துச்சென்றான். அதனை திருமால் மீட்டு வந்தார். அசுரனிடம் தாங்கள் இருந்த தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வேண்டி தவமிருந்தன. வேதங்களின் சிவ வழிபாட்டுக்கு இறங்கி காட்சி தந்த சிவபெருமான் வேதங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீக்கி அருளினார்.

வேதங்கள் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதால் “வேதச்சேரி’ என்றழைக்கப்பட்டு, பின்பு “வேளச்சேரி’ என்று மருவியது. வேதஸ்ரேணி என்பது இத்தலத்தின் புராணப்பெயராகும். அத்தகைய சிறப்பு பெற்ற சென்னை வேளச்சேரி யமதண்டீஸ்வரர் ஆலையத்தில் யம தீபம் ஏற்றினால் ஆயுள் கூடுவதோடு அகால மரணம் மற்றும் துர்மரணம் போன்றவைகளும் ஏற்படாது எனப் புராண செய்திகள் தெரிவிக்கின்றன.

2. தனி சன்னதிபெற்ற யமதர்மராஜன் சன்னதி மற்றும் சனைச்சர பகவானின் பூச நக்ஷத்திர பைரவரான ஆசன பைரவர் சன்னதிகளிலும் ஏற்றலாம்.

3. அனைத்து சனி பரிகார ஸ்தலங்களில்.

4. அனைத்து சிவாலய சனைஸ்வரர் சன்னதிகளில்

5. யமனின் சகோதரியான யமுனை நதிக்கரையில்

6. அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கி யம தீபம் ஏற்றலாம்

7. 8 யம தீபம் ஏற்றவேண்டிய காலம் இன்று 25/10/2019 வெள்ளிக்கிழமை மாலை 3.47 முதல் 7.47 வரை ஆயுள்காரகன் சனி ஹோரை, பின் தர்ம ஸ்தானதிபதி குரு ஹோரை தென் திசையின் அதிபதி செவ்வாய் ஹோரை மற்றும் பித்ரு காரகனான சூரிய ஹோரை காலத்தில் ஏற்றலாம்.

யமதீபம் ஏற்றும்போது கூறவேண்டிய ஸ்லோகம்

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச|
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச||
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே|
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:||

மற்றும்

ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்
உருவாருஹமிவ பந்தனாத் ம்ருத்யோர் முச்சீய மாம்ருதாத்

எனும், ம்ருத்யுஞ்சய மந்திரத்தையும் உச்சரித்தபடி விளக்கேற்றி அகால ம்ருத்யூ ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம் சர்வ பாப க்ஷயகரம் தம் நமாமி மகேஸ்வரம் எனக் கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும்!

Sharing is caring!