பிறப்பால், குணத்தால், செல்வத்தால் நாம்தான் உயர்ந்தவர்கள் என்று செருக்கு கொண்டிருக்கிறீர்களா?

வசிஷ்ட மகரிஷி ஒரு முறை கயிலாயத்துக்கு சென்றிருந்த போது சிவபெருமான் அவருக்கு சிறப்பு வாய்ந்த ஆசனம் ஒன்றை கொடுத்திருந்தார். வசிஷ்டர் எங்கு சென்றாலும் அந்த ஆசனத்தில் அமர்ந்து நினைத்தாலே போதும் அந்த ஆசனம் அவரை அங்கு கொண்டு சேர்ந்துவிடும். இதனால் வசிஷ்டர் எங்கு சென்றாலும் அங்கு போய் அமர ஆசனமும் தேவைப்படவில்லை. அவர் செல்லும் இடத்தில் சென்று குறிப்பிட்ட இடத்தில் ஆசனம் பொருந்திக்கொள்ளும்.

வசிஷ்டர் எங்கு வந்தாலும் சிறப்பான ஆசனத்துடன் வருவதைக் கண்ட மற்ற ரிஷிகளுக்கு பொறாமை வந்தது. நாமும் தவத்தால் சிவனின் அருளைப் பெற்றவர்கள்தான். நமக்கு மட்டும் ஏன் சிவபெருமான் ஆசனம் கொடுக்கவில்லை. நாமும் போய் அவரிடம் கேட்போம் என்று எல்லா ரிஷிகளும் அவரிடம் சென்றார்கள். “சிவபெருமானே நாங்களும் உம் மனம் கவர்ந்தவர்கள் தான் எங்களுக்கும் வசிஷ்டர் போன்று ஆசனம் வேண்டும்” என்று கேட்டார்கள்.

“நிச்சயம் உங்களுக்கும் அந்த ஆசனத்தை அளித்திருக்க வேண்டும் தான். நீங்கள் கேட்டதும் சரிதான். ஆனால் அதற்கு முன் நீங்கள் எல்லோரும் உங்களில் உயர்ந்தவரைத் தேடி கண்டுபிடித்து அவருக்கு அதிதி பூஜை செய்து என்னிடம் அழைத்து வாருங்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொருவரை பூஜை செய்து அழைத்து வரவேண்டும். ஒரு மண்டலம் தான் உங்களுக்கான காலம் “ என்றார்.

“இதென்ன பெரிய விஷயம் மகாதேவா. உடனடியாக அழைத்துவருகிறோம்” என்று ஆளுக்கு ஒருபக்கம் ஓடினார்கள். சிவபெருமான் புன்னகையோடு நந்தி தேவரை அழைத்து வசிஷ்டரை அழைத்துவர சொன்னார். வசிஷ்டரும் வந்து சிவனை வணங்கி தாங்கள் அழைத்த காரணம் என்ன பிரபு என்றார்.

“வசிஷ்டரே இன்றிலிருந்து ஒரு மண்டலத்துக்குள் உங்களை விட தாழ்ந்தவர் ஒருவரைக் கண்டறிந்து அவருக்கு அதிதிபூஜை செய்து என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார். வசிஷ்டர் ஒன்றுமே பேசாமல் தலையாட்டியபடி சென்றார். ஒரு மண்டலம் கழிந்தது ஒவ்வொரு ரிஷிகளும் கயிலாயம் வந்து சிவனது தரிசனத்துக்காக காத்திருந்தார்கள். சிவபெருமான் அனைவரையும் ஒரு சுற்று சுற்றி பார்த்தார். ரிஷிகள் மட்டுமே வந்திருந்தார்கள் உடன் யாரையும் காணவில்லை. என்னவாயிற்று என்றார் சிவபெருமான்.

“மகாதேவா நாங்கள் எவ்வளவோ தேடிவிட்டோம். ஆனால் எங்களை விட உயர்ந்தவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன செய்வது என்று அவரிடமே” திரும்பி கேட்டார்கள். அதே நேரம் வசிஷ்டரும் உள்ளே நுழைந்தார். மெது வாக எட்டிப்பார்த்த சிவபெருமான் அவரை வரவேற்று “என்னவாயிற்று வசிஷ்டரே உங்களை விட தாழ்ந்தவர் யாருமே இல்லையா?” என்றார். “ஆமாம் பிரபு என் மனைவி எனக்கு அடங்கியவள் தான் ஆனால் அவளது பவித்திரத்துக்கு முன் நான் உயர்ந்தவனல்ல. அதனால் அவளுக்கு அதிதி பூஜை செய்யும் எண்ணத்தை கைவிட்டேன்” என்றார்.

சிவபெருமான் கூடியிருந்த ரிஷிகளைக் கண் டார். “மன்னித்துவிடுங்கள் மகாதேவா பூமியில் எங்களை விட மேலானவர்கள் யாரும் இல்லையே என்று செருக்குற்று கிடந்தோம். ஆனால் வசிஷ்டரோ தம்மை விட தாழ்ந்தவர் யாரும் இல்லை என்று அவரது பெருமையை உணர்த்தி விட்டார்” என்றார்கள்.

பிறப்பால், குணத்தால், செல்வத்தால் நாம்தான் உயர்ந்தவர்கள் என்னும் செருக்கு கொள்ளாமல் வாழக் கற்றுக்கொள்வதே மனிதனுக்கு அழகு.

Sharing is caring!