பிறர் துன்பம் உங்களுக்கு மகிழ்ச்சியா…?

முருகனை விட குறும்புத்தனம் மிக்கவர் தொந்திகணபதி. அவரது குறும்புகளை ரசித்து சிரிக்காதவர்கள் தேவலோகத்தில் யாரும் இல்லை. இருக்கும் இடத்தில் பொருந்தமாய் பொருந்திக்கொள்பவர் இவர் என்பதாலேயே, பூலோகவாசிகளுக்கும்  மிகவும் பிடித்த கடவுளாகிவிட்டார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்யும் அனைத்து காரியங்களிலும், முழு முதல் கடவுள் இவர் ஒருவரே.  இவரை  கேலி செய்து சீண்டினால், எதிரில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவரை ஒருவழி ஆக்கிவிடுவார்.

அப்படி ஒரு முறை  சந்திரன் மாட்டி கொண்டதால் தான், இன்று வளர்ந்தும் தேய்ந்தும் காட்சி அளிக்கிறார்.
ஒரு முறை, விருந்து ஒன்றில் கலந்து கொண்ட பிள்ளையார், அவருக்கு பிடித்த உணவுகளே அங்கு இருக்கவும் மேலும் ஒரு பிடி பிடித்துவிட்டார்.

உணவோடு  இனிப்புகளும், பழங்களும் வேறு,  வயிற்றுப்பகுதியை தாண்டி கழுத்தை நெருக்கிக் கொண்டிருந்தது. நிறைந்த வயிற்றுடன், இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டிருந்தார். ஆர்வகோளாறில், அதிகம் சாப்பிட்டேனே என்று தன்னையே நொந்துக் கொண்டபடி, இருக்கும் இடத்தையே சுற்றி சுற்றி வந்தார்.

பிள்ளையாரின் செய்கைகளைக் கண்டு, சுற்றியிருந்தவர்கள் ரசித்து கொண்டிருந் தார்கள். சுற்றிக்கொண்டே இருந்தால் எப்படி செரிமானம் ஆகும்  என்று நினைத்தார் போலும். தனது வாகனமான எலி மீதேறி ஒரு வலம் வரலாம் என்று சென்றார்.

போகும்போது வழியில் இருந்த பாம்பு ஒன்று, இவர்களைக் கடந்து செல்ல…பாம்பைக் கண்ட எலி அச்சத்தில் இங்கும் அங்கும் ஓடியது. அப்படி ஓடும்போது நிலைதடுமாறி  குப்புற விழுந்து விட்டார் தொந்தி பிள்ளையார்.

வயிறு தரையில் முட்ட,  ஏற்கனவே அடைக்கப்பட்டு இறுகியிருந்த வயிறு வெடித்து, உணவு பொருள்கள் வெளிவந்தன. பாம்பின் மேல் கோபமுற்ற பிள்ளையார், சமாளித்து எழுந்தார்.  ஓடிய பாம்பை பிடித்து தொப்பையைச் சுற்றி இறுக்க கட்டினார்.

பிறகு சுற்றும் முற்றும் பார்த்தபடி, அப்பாடா  யாரும் இல்லை என்று எலி வாகனத்தில் ஏறியபோது, சந்திரனின் சிரிப்பு சத்தம் கேட்டது. அதோடு சந்திரன் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் பிள்ளையாரின் சோகமான முகம் அவருக்கு உற்சாகமான மகிழ்ச்சியை வரவைழைத்துவிட்டது போன்று, அவரை சீண்டும் விதமாக ”இதற்குதான் தொந்தி பிள்ளையாரே அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிடக்கூடாது” என்று மேலும் சிரித்தபடி சீண்டினார்.

பிள்ளையாருக்கு கோபம் வந்துவிட்டது, தனது ஒரு தந்தத்தை உடைத்து, சந்திரன் மீது விட்டெறிந்தார்.
சந்திரன் இரண்டாக உடைந்துவிட்டான். என்னை கேலி செய்த உன்னை, பூலோகத்தில் யார் கண்டாலும்  அவர்களுக்கு கெட்டதே நடக்கும் என்று சாபம் இட்டார்.

சந்திரன் தன் தவறை உணர்ந்து, பிள்ளையாரிடம் மன்னிப்பு கோரினார். நான் கொடுத்த சாபத்தை நானே நீக்க முடியாது. வேண்டுமானால் அதற்கு பரி காரமாக, 15 நாட்கள் வளர்ந்தும் 15 நாட்கள் தேய்ந்தும் போவாய் என்று சாபத்தைக் குறைத்தார்.

ஆனால், பிள்ளையாரே  என்னைக் கண்டால் கெடுதல் உண்டாகும் என்று சொன்னீர்களே. அத்தகைய நிலைக்கு என்னை ஆளாக்காதீர்கள் என்று மீண்டும் சந்திரன் வேண்டினான். சரி அப்படியானால் சதுர்த்தசி அன்று  உன்னை பார்த்தால் மட்டுமே கெடுதல் நடக்கும் என்று சாபத்தின் வீரியத்தைக் குறைத்தார்.

யாருடைய துன்பத்திலும் மகிழ்ச்சி அடையக் கூடாது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணமாக வேறு என்ன இருக்க முடியும்…

Sharing is caring!