புதன் உங்கள் ஜாதகத்தில் வலுவானதா? அப்ப அதிஸ்டசாலிதான்…

நமது முன்னோர்கள் சொன்ன பழமொழியை நினைவில் வைத்திருக்கும் நாம் அதற்கான விளக்கத்தையும் தெரிந்து கொள்வது அவசியம்தானே… மாறாக அந்த பழமொழிக்கு நாமே இட்டுகட்டி ஒரு விளக்கம் தருவது நல்ல கருத்தை அறியாமல் செய்துவிடும் என்பது தான் உண்மை. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது… என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். இதில் பொன் என்பது ஆடம்பர அணிகலனைக் குறிக்கவில்லை. பொன் என்பது பொன்னன் என்று அழைக்கப்படும் ஜூபிட்டர் (குரு) கிரகம் ஆகும். இதன் பொன்னிற நிறத்தால் இதற்கு இந்தப் பெயர் வந்தது. வியாழன் கிரகம் மிகப்பெரியது. சூரியனுக்கு அதிக தொலைவில் இது உள்ளது. பொன்னன் எனப்படும் வியாழன் கிரகம் சில மாதங்களில் முன்னிரவிலும், சில மாதங்களில் பின்னிரவிலும் நமது கண்களுக்கு பிரகாசத்தோடு புலனாகும். ஆனால் புதன் கிரகம் மிகவும் சிறியது. சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள புதன் கிரகத்தை பார்ப்பது மிகவும் அரிது. சூரியன் உதயமாவதற்கு சற்று முன்பு அல்லது பின்பு உதயமாகும் புதன் சூரியன் அஸ்தமிக்கும் போதும் சற்று முன்போ அல்லது பின்போ அஸ்தமிக்கிறது. எனவே சூரிய ஒளியில் பிரகாசம் குன்றி மங்கலாகத் தான் தெரியும். அதனால் தான் பொன்(னன்) கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொன்னார்கள் நமது முன்னோர்கள்.
புதன் கிடைப்பதும்,புதனால் பெரும் பாக்கியங்களும் சாதாரணமானதல்ல. நவக்கிரகங்களில் விவேகமும், பண்பும் நிறைந்தவர் புதன்.

ஜோதிடத்தில் புத்திகாரகனாக புதன் கிரஹத்தைக் குறிப்பிடுவார்கள். வித்யாகாரகன் என்னும் கல்விக்குரிய கோளாகவும் புதனை சொல்வதுண்டு. ஒருவருடைய ஜாதகத்தில் புதன் கல்வியறிவு, படிப்பறிவு மட்டும் தருவதில்லை. நுட்பமான அறிவு, அபரிமிதமான ஞானத்தை அளிக்கும் வள்ளலாக புதன் பகவான் இருக்கிறார். பொன் என்னும் செல்வத்தைத் தேடிவிடலாம். ஆனால் புதன் தரும் அறிவுச் செல்வம் எளிதில் கிடைத்துவிடாது. ஒருவன் இருக்கும் துறையில் புகழ்பெற்று கொடிகட்டு விளங்க அவனது ஜாதகத்தில் புதனின் அருள் நிச்சயம் இருக்க வேண்டும். புதனின் அருள் இல்லாத ஒருவனால் அவன் தகுதியானவனாக திறமையானவனாக இருந்தாலும் ,அவனது உழைப்பு வீணாகவே இருக்கும். அவனுக்கு நிறைய திறமை இருக்கு. ஆனா எதுலயுமே முன்னுக்கு வரமுடியல என்று சிலரைப் பற்றி பேசுவோம். காரணம் இதுதான் அவர்களது ஜாதகத்தில் புதனின் அருள் கடாட்சம் குறைந்திருக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் எதிர்மறையான எண்ணங்களும், துர்எண்ணங்களும் வலுவிழக்கும். சிறந்த மனிதனுக்கு தேவையான அறிவு, பண்பு, சகிப்புத்தன்மை என அனைத்தும் பெருகும். செல்லுமிடமெல்லாம் சிறந்த நற்பெயரை பெறுவான். புதன் வலுவிலக்கும் போது அவனது புத்தி மந்தமடைய தொடங்குகிறது. புதன் சுப கிரகஹணம், இது பாவ கிரகணத்துடன் இணையும் போது மந்தநிலையை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. வாழ்க்கையில் அனைத்து வளமும் பெற முக்கிய தேவையாக இருப்பது கூர்மையான அறிவுத்திறமைதான். அதை வழங்கும் புதன் பகவானை வணங்குவதன் மூலம் நம்மை மேலும் உயர்த்திக்கொள்ளலாம். புதனுக்கு பிடித்த இயற்கையில் விளைந்த பொருள்களை படைக்கலாம். புதன்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று மனதார வழிபட்டு துளசி பிரசாதத்தை சாப்பிடலாம். எளிமையான பூஜை முறையாலேயே புதன் அருளை பெற முடியும். அவ்வாறு புதனை வழிபட இயலவில்லையென்றாலும் புதன் பகவானுக்குரிய மூலமந்திரத்தையும் ஸ்லோகத்தையும் சொல்லலாம். புதனின் அருள் நிச்சயம் கிட்டும்.
இப்போது தெரிகிறதா பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதற்கான  அர்த்தம்…

Sharing is caring!