புத்தனாக இல்லயென்றாலும் மனிதனாக வாழலாம்…

ஆசையே துன்பத்துக்கு காரணம் என்ற உண்மையைப் புரிய வைத்தவர் புத்தபெருமான். இவரது போதனைகள் மனிதன் தன் வாழ்க்கையில் துன்பத்திலிருந்து விடுதலை பெற உதவும் வழிமுறைகளைக் கொண்டது. இவரது போதனைகள் சாதிமுறைக்கு எதிரானதாகவும், ஏழை பணக்காரன் என்ற பிரிவினைகள் இல்லாமல் அனைவரும் ஒன்று என்னும் கருத்தை வலியுறுத்தியதால் பெரும்பாலோனோர் புத்த மதத்தைப் பின் தொடர்ந்தார்கள்.

புத்தரின் இயற்பெயர் சித்தார்த்த கெளதமர். அபிலவஸ்து பேரரசுக்கு மகனாக நேபாளத்தில் உள்ள லும்பினி  என்னும் இடத்தில்  பிறந்தார். பிறக்கும் போதே அவரது உடலில் புனிதமான பிறவி அடையாளங்கள் இருந்தது. அவருடைய ஜாதகம் கணிக்கப்பட்டதில் உலகம் போற்றும் துறவியாக வருவார் என்று சொல்லப்பட்டது. அதனாலேயே  சிறு குறைபாடுகள் கூட அறியாமல் செல்வத்தாலும், மகிழ்ச்சியாலும் நிரம்பிய வாழ்க்கை கெளதமருக்கு அளிக்கப்பட்டது.

கெளதமர் வளர்ந்த பிறகு துறவறம் மேற்கொள்வாரோ என்று எண்ணிய அவரது தந்தை அவருக்கு 16 வயதாகும் போதே யசோதரா என்னும் பெண்ணை திருமணம் செய்துவைத்தார். இவர்களது வாழ்க்கைக்கு அடையாளமாக ராகுலா என்ற மகனும் பிறந்தான். அதுவரை  தந்தையின் கட்டளைப்படி அரண்மனை வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து வந்த கெளதமர் முதன்முறையாக அரண்மனையை விட்டு வெளியேறினார்.

வழியில் கண்ட வயோதிகர், இறப்பு ஊர்வலம் கண்டு மனிதனின் பிறப்பு, துன்பம் கண்டு துணுக்குற்றாலும் பிறகு வந்த துறவியைக் கண்டு மனம் மகிழ்ந்தார். யார் முகத்திலும் இல்லாத அமைதி  துறவி முகத்தில் கண்டார். பிறப்பு, முதுமை, நோய், இறப்பு போன்ற பிரச்னைகளுக்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் எண்ணம் அதிகரித்தது. உலகத்தில் பெற்ற அனைத்து உடமைகளையும் துறந்து மொட்டை அடித்தபடி அரண்மனையை விட்டு வெளியேறினார்.

மகதாவின் தலைநகர் ராஜ்க்ரஹா என்னும் இடம் நோக்கி முன்னேறினார். அங்கிருந்த மலைபகுதிகளில் துறவிகள் வாழும் இடத்தை நோக்கி வந்தார். அங்கிருந்த அலாமா கலாமோ என்ற துறவியிடம் தனக்கு வழிகாட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். ஆன்மிகப் பின் தொடர்தலுக்காக வேறு துறவியிடம் சென்றார். உள்ளார்ந்த பேரின்பம் அடைய உடலை வருத்திக்கொண்டார். உணவைத் துறந்தார். ஆனால் உண்மையான மகிழ்ச்சியை அடைய சுய சித்ரவதைகள் தேவையில்லை என்பதை அவர் இருந்த இடத்திலிருந்து கடந்தவர்களை வைத்து உணர்ந்து கொண்டார்.

உடலும் மனமும் துன்பமில்லாமல் சித்ரவதையில்லாமல் மகிழ்ச்சியால் இருந்தால் உள்ளார்ந்த அமைதியை பெற முடியும் என்று உணர்ந்த கெளதமர் பல்வேறு மடங்களை சென்று தேடினார். உண்மையை கண்டறிய தியானம் தான் வழி என்பதை உணர்ந்த புத்தர் பனாரஸ் அருகே உள்ள போத்கயா காட்டுக்கு சென்று ஆலமரத்தின் கீழ் அமர்ந்தார். உலக  மாயையால் பல்வேறு விதமான  இடையூறுகளைச் சந்தித்த போதும் தியானம் மேற்கொண்ட கெளதமருக்கு 49 நாட்கள் முடிவில் தியானத்தில் ஞானோதயம் கிடைத்தது.

ஞானோதயம் பெற்றதும் கெளதமர் மனிதன் சீரான வாழ்க்கையை வாழவும், உபதேசங்களையும் போதித்தார். சார்நாத்தில் உள்ள மான் பூங்காவில் இவரது உபதேசம் நடைபெற்றது. பொன்னான உபதேசங்களை அருளிய கெளதமர் கெளதம புத்தர் என்றும் புத்தர் என்றும் அழைக்கப்பட்டார். கெளதம சித்தார்த் பிறந்தது வைசாக நாள். அவருக்கு ஞானம் கிடைத்ததும் இன்றுதான். அவர் இவ்வுலக வாழ்வை துறந்ததும் இன்றுதான். இந்நாளே புத்த பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது.

பீகாரில் புத்தகயா, உத்திரபிரதேச  மாநிலத்திலுள்ள சாரநாத் இடங்களிலும் புத்தமதத்தை பின்பற்றும் இடங்களிலும் இன்றைய தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.  ஆசை தான் அனைத்து துன்பத்துக்கும் காரணம்.  இதைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் நாம் புத்தனாக இல்லையென்றாலும் மனிதனா கவாது வாழலாம்.

Sharing is caring!