புத்தாண்டு பலன்கள் – மேஷம்

சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுபவர்களே!

ராசிக்கு 12-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், திடீர்ப் பயணங்களும், திடீர் செலவுகளும் அதிகரிக்கும். சிக்கனமாக இருக்க முயற்சி செய்யவும். வீண் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டியது அவசியம். குடும்பத்துடன் நீண்டநாள்களாகச் செல்ல நினைத்த கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம், குடும்ப விஷயங்களைப் பேசவேண்டாம்.

3.10.18 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே இருப்பதால், அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். கணவன் – மனைவிக்கிடையில் ஒற்றுமை அதிகரிக்கும். அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், பெரிதுபடுத்தாமல் பொறுமை காக்கவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். விலையுர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். ஆனால், 4.10.18 முதல் 12.3.19 வரை குரு ராசிக்கு 8-ல் மறைவதால், வீண் அலைச்சல், வதந்திகள், இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். 13.3.19 முதல் பிற்போக்கான நிலை மாறும். பல வகைகளிலும் வளர்ச்சியான போக்கைக் காணலாம். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் வெளிநாடு சென்று வருவீர்கள்.

30.4.18 முதல் 27.10.18 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 10-ம் வீட்டில் அமர்வதால், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆனால், கேதுவுடன் சேர்ந்திருப்பதால், சொத்துப் பிரச்னைகளை சுமுகமாகப் பேசி முடித்துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும்.

ஆண்டின் தொடக்கம் முதல் 12.2.19 வரை கேது 10-லும் ராகு 4-லும் இருப்பதால், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் மகனுக்கு வெளிநாட்டில் வேலை அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்களில் அவசரம் வேண்டாம். 13.2.19 முதல் கேது 9-ல் அமர்வதால், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் பிரச்னை ஏற்பட்டு நீங்கும். ஆனால், 3-ல் ராகு அமர்வதால், தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புது வீடு மாறுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள்.

2.8.18 முதல் 30.8.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. விலையுயர்ந்த ஆபரணங்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.

வருடம் முழுவதும் சனிபகவான் 9-ல் நிற்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் சுமைகளிலிருந்து ஓரளவு விடுபடுவீர்கள். பிற மொழியினரால் சில உதவிகள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகளை நழுவவிட்டுவிட்டதாக அடிக்கடி நினைத்து வருத்தப்படுவீர்கள்.

வியாபாரத்தில் அனுபவ அறிவைப் பயன்படுத்தி கூடுதல் லாபம் அடைவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஆனாலும், பெரிய அளவில் முதலிடு செய்வதைத் தவிர்க்கவும். சந்தை நிலவரத்தை அறிந்து செயல்படுவது அவசியம். வாடிக்கையாளர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளுங்கள். கடையை வசதியான இடத்துக்கு மாற்றுவீர்கள். ஆனி, ஆவணி, தை, மாசி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். ஸ்டேஷனரி, உணவு, ஏற்றுமதி – இறக்குமதி, கெமிக்கல், மருந்து வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். வேலையாள்களை அனுசரித்துச் செல்லவும்.

உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்கவேண்டி வரும். அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளவேண்டாம். சக பணியாளர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டவேண்டாம். உங்கள் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகத்தான் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் சட்ட நிபுணரின் ஆலோசனை அவசியம். தை, மாசி மாதங்களில் பதவிஉயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

இந்த வருடம் ஒருபக்கம் அலைச்சலைத் தந்தாலும், மற்றொரு பக்கம் உங்கள் திறமையையும் செல்வாக்கையும் அதிகரிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புத்தூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஶ்ரீசுப்பிரமணியரை, சஷ்டி திதி நாளில் தரிசித்து வழிபட, சுபிட்சம் உண்டாகும்.

Sharing is caring!