புனர்பூச நட்சத்திரகாரர் செல்ல வேண்டிய திருத்தலம்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்நாளில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அல்லது பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று வேலூர் மாவட்டம் வாணியம்பாடியிலுள்ள பழைய வாணியம்பாடியில் அருள்பாலிக்கும் அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகும்.

காஷ்யப முனிவரின் தர்மபத்தினி அதிதி புனர்பூசம் நட்சத்திரம் தோறும்  விரதமிருந்து இத்தலத்துக்கு வந்து வழிபட்டு தேவர்களைப் பிள்ளைகளாக பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. ஸ்ரீ ராமர் பிறந்த நட்சத்திரம்  புனர்பூசம். புனர் பூசம் நட்சத்திரம் கொண்டவர்கள்  செல்ல வேண்டிய தலமாக  இத்தலம் விளங்குகிறது.

ஒருமுறை பிரம்மா சரஸ்வதியிடம் உலக உயிர்களைப் படைக்கும் நானே பெரியவன். அதனால்தான் எல்லோரும் பிரம்மா, விஷ்ணு,  சிவன் என்று என் னுடைய நாமத்தை முதலில் கூறுகிறார்கள் என்றார்.பிரம்மனின் அறியாமையை நினைத்து கலைவாணி சிரித்துவிட்டாள். கோபமடைந்த பிரம்மா பேச்சு இழக்கும் சக்தியைப் பெறுவாய் என்று சபித்துவிட்டார். பிறகு மனைவியின் பிரிவை தாங்காமல் தேவர்களைத் திருப்திபடுத்த யாகத்துக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் மனைவி இல்லாமல் செய்யும் யாகங்களை ஏற்கமாட்டோம் என்று உறுதியாக தேவர்கள் தெரிவித்துவிட்டார்கள். இறுதியாக வாணியை சிருங்கேரியில் கண்டு பிடித்தார் பிரம்மா. வாணியை சமாதானம் செய்து அவளை அழைத்துவரும்போது பாலாற்றின்  வடகரையில்  இருக்கும் சிவாலயங்களில் தங்கினார். அப்போது சிவனும் பார்வதியும் தரிசனம் தந்து “வாணி நீ பாடு” என்று  கூறினார்கள். வாணி பேசும் சக்தியைப் பெற்றாள்.

மேற்கு நோக்கி அமைந்திருக்கும் அதிதீஸ்வரர் கோயிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு பார்த்த கோயிலை வழிபட்ட பலன்கள் கிடைக்கும். மூலவர் அதிதீஸ்வரர் மேற்கு நோக்கி காட்சிதருகிறார். தாயார்  பிரஹன்நாயகி. அம்மன் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.  சரஸ்வதி கிழக்கு நோக்கி இருக்கிறாள்.

இங்கு நந்தியின் மீது மான், மழுஏந்தி யோக பட்டை சின்முத்திரையுடன் நந்திமீது அமர்ந்திருப்பது விசேஷமானது. புனர்பூசம் நட்சத்திரம் பிறந்தவர்கள்  தங்க ளுக்கு ஏற்படும் தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெற அதிதீஸ்வரரை வழிபடு கிறார்கள்.   வாணிக்கு பேச்சுத்திறனை  அளித்ததலம் என்பதால் திக்குவாய், ஊமை போன்ற குறைகளை உடையவர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி னால் குறைகள் தீரும் என்பது ஐதிகம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தலத்தில்  வீற்றிருக்கும் அதிதீஸ்வரர் உதவி புரிகிறார்.

Sharing is caring!