புலனை அடக்கி ஆள முடியுமா?

மனதைப் பக்குவப்படுத்துவது சாதாரண விஷயமல்ல. அதையும் தாண்டி மனத்தை பக்குவப்படுத்தினாலும் அவை எந்நிலையிலும் அப்படியே தொடர்ந்து இருக்கும் என்பதும் நிலையல்ல. அதனால் தான் மனித மனம் அலைபாயும் என்று சொல்வார்கள். ஆனால் புலன்களை அடக்கி ஆளாத வரை மனம் அலை பாய்வதைத் தடுக்கவே முடியாது. குருகுலத்தில் உள்ள  மாணாக்கர்களுக்கு இதை உணர்த்தும் வகையில் இந்தக்கதையைக் கூறினார் முனிவர் ஒருவர்.

அரசர் ஒருவர் இருந்தார். செல்லப்பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வந்தார். விளக்கு இல்லாத காலம் அல்லவா அதனால் இரவு நேரங்களில் பூனையின் தலையில் விளக்கை வைத்து அரண்மனையை உலா வருவார். பூனையும் தலையை ஆட்டாமல் அசைக்காமல் பொறுமையாக அரசருடன் செல்லும். ஐந்தறிவு உள்ள சிறிய விலங்கு இவ்வளவு சாமார்த்தியமாக  வேலை செய்கிறது என்பதில் அரசருக்கு பெருமிதம் தாங்கவில்லை. அதனால் பூனையின் மீது மிகுந்த அன்பு அவருக்கு தன்னைப் பார்க்க வருபவர்களிடம் எல்லாம் இந்த பூனைக் குட்டியைக் காண்பித்து அது விளக்கு தூக்கும் அழகை வர்ணித்து எவ்வளவு மனக்கட்டுப்பாடோடு இருக்கிறது என்று புகழ்வார்.

ஒருமுறை அரசவைக்கு வந்த முனிவரிடமும் பேசும்போது மனிதர்களை விட நான் வளர்க்கும் பூனை விசுவாசம் மிக்கது. மனக்கட்டுப்பாடு மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் உரியது என்பதை என்னுடைய பூனை நிரூபித்து வருகிறது. இரவில் தலையில் விளக்கை வைத்ததும் ஆடாமல் அசையாமல் எனக்கு ஒளியூட்டுகிறது என்று சிலாகித்தார். முனிவர் எதுவும் பேசாமல் நான் இரண்டு நாட்கள் இங்கிருந்து பூனையின் மனோதிடத்தைப் பார்க்கிறேன் என்றார். அருகிலிருந்த பணியாளனை அழைத்து அவன் காதில் ஏதோ ஓதினார்.

அன்று இரவு  வழக்கம் போல் பூனையின் தலையில் விளக்கை வைத்து பூனையுடன் அரண்மனைக்குள் உலா வந்தார். அந்நேரம் பணியாளன் மறைந்திருந்து பூனையின் பார்வையில் படும்படி எலிகளை அவிழ்த்தான். எலிகள் அங்குமிங்கும் சிதறி ஓடியது. பூனையின் கண்களில் எலிகள் பட்டதுதான் தாமதம். அரசனைப் பற்றியும் கவலைப்படவில்லை. விளக்கைப் பற்றியும் கவலைப்படவில்லை. எலியைத் துரத்தியபடி அங்குமிங்கும் ஓடியது. அரசருக்கு சில நிமிடம் எதுவுமே புரியவில்லை. திகைத்தப்படி நின்றார். உடன் வந்த முனிவர்  கூறினார். ”பார்த்தீர்களா அரசே உங்கள்  பூனையின்  விசுவாசத்தைப் பார்த்தீர்களா?”

புலனை அடக்கி ஆள்வது மனிதர்களுக்கே மிகவும் கடினம். அதை விட கடினம் அப்பொருள் கைகளில் தானாக தவழும்போது அடக்க நிலையிலேயே இருப்பது. மனிதர்களுக்கே மிகவும் கடினமான இருக்கும் இது விலங்குகளுக்கு நிச்சயம் சாத்தியமில்லை என்பதை இப்போதாவது உணருங்கள். மனக்கட்டுப்பாடு பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளுங்கள்” என்றார். உண்மைதான் என்று அரசனும் ஒப்புக்கொண்டார்.

Sharing is caring!