பூஜையில் மணியோசையின் பங்கு

பூஜையின் போது மணியோசை முக்கிய பங்கு வகுக்கிறது. பூஜை முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் அசுரர், அரக்கர்கள் போன்ற கொடியவர்களை விரட்டியடித்து தேவர்களையும், தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

பூஜையின்போது மணியை உபயோகப்படுத்துவதற்கு முன்பாக ‘ஆகமார்த்தம் து தேவாநாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம், கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்ச்சநம்’ என்ற மந்திரத்தைச் சொல்வார்கள். தீய சக்திகள் விலகி இறைசாந்நித்யம் இந்த இடத்தில் பெருகட்டும் என்பது இதன் பொருளாகும்.

இது மட்டுமல்லாது, தீபாராதனையின்போது மணி ஓசை எழுவதால் நாம் அநாவசிய பேச்சுகளை நிறுத்தி இறைவனின்பால் நமது சிந்தனையைச் செலுத்துகிறோம்.

மணிஓசை கேட்டதும் நம்மையும் அறியாமல் நமது கரங்கள் இறைவனைத் தொழுகின்றன. சிந்தனையை ஒருமுகப்படுத்துவதற்காகவே மணியடிக்கப்படுகிறது.

நைவேத்யம் செய்யும்போது கண்டிப்பாக மணிஓசையை எழுப்ப வேண்டும், ஏனெனில் மணி ஓசையைக் கேட்டதும் இறைவன் ஓடோடி வந்து நமது காணிக்கையை ஏற்றுக்கொள்கிறான்.

மேலும், சிரத்தையுடன் கூடிய பக்தியைத்தான் இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறான். நைவேத்யம், தீபாராதனை நேரங்கள் தவிர வெறுமனே மணியை அடிப்பது தவறு என்று சாஸ்திரங்கள் விளக்கியுள்ளன.

Sharing is caring!