பூண்டு….நன்மைகள் பல….கொலஸ்ட்ரோல், இரத்த அழுத்தம், புற்றுநோய் நிவாரணி

உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பூண்டு மிகவும் சிறந்த நிவாரணப் பொருளாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் பூண்டில் இருக்கும் ஏராளமான அளவிலான மாங்கனீசு, வைட்டமின் பி6, வைட்டமின் சி, செலினியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை தான்.

700-க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுகளில் முதிர்ந்த பூண்டின் சாற்றில், சாதாரண பூண்டுகளை விட அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சாதாரண பூண்டுகளை விட இந்த முதிர்ந்த பூண்டு சாறு சற்று வித்தியாசமானது மற்றும் துர்நாற்றமற்றது. எப்படியெனில் பச்சை பூண்டுகளை துண்டுகளாக்கி எத்தனாலில் 20 மாதங்களாக ஊற வைத்து, முதிர்ந்த பூண்டு சாறு தயாரிக்கப்படுகிறது.

இந்த செயல்முறையால் அந்த சாற்றில் சல்பர் நிலைப்படுத்தப்பட்டு, எளிதில் செரிமானமாகும் அளவில் மாற்றப்பட்டு, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவும் அதிகமாக இருக்கும்.

நன்மைகள்

இரத்த அழுத்தம் குறையும் முதிர்ந்த பூண்டு சாறு இரத்த அழுத்தத்தை சீராக பராமரித்து, இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆய்வுகளில் முதிர்ந்த பூண்டு சாறு சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை சுமார் 10 புள்ளிகள் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

முக்கியமாக இந்த சாறு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.

இதயத்திற்கு நல்லது

முதிர்ந்த பூண்டு சாறு இரத்த நாளங்களில் காரைப்படிந்த ப்ளேக்குகளின் கட்டமைப்பைக் குறைக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வரும் அபாயம் குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும். முதிர்ந்த பூண்டு சாறு இதய நோய் வரும் அபாயத்தை அதிகரிக்கும் அமினோ அமிலமான ஹோமோசிஸ்டைன் அளவைக் குறைக்கும்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

முதிர்ந்த பூண்டு சாறு நோயெதிர்ப்பு செல்களின் அளவை அதிகரிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுவும் உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடும் செல்களின் வலிமையை அதிகரித்து, அடிக்கடி சளி பிடிப்பது மற்றும் இதர நோய்த்தொற்றுக்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும். இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்புப் பொருள், உடலில் காண்டிடா மற்றும் இதர பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்

தற்போது உயர் ஆக்ஸிஜனேற்ற அழுத்த நிலை தான் பல்வேறு புற்றுநோய்க்கு காரணமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உயர் ஆக்ஸிஜனேற்ற அழுத்தமானது உடலில் உள்ள டி.என்.ஏவைப் பாதித்து, நாளடைவில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கு காரணமாகிறது. ஆனால் முதிர்ந்த பூண்டு சாறு உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, புற்றுநோய் வருவதைத் தடுக்கும். எனவே புற்றுநோய் வராமல் இருக்க தினமும் முதிர்ந்த பூண்டு சாற்றினை எடுத்து வாருங்கள்.

இதர நன்மைகள்

முதிர்ந்த பூண்டு சாற்றில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள், மன அழுத்தம், உடல் வலி, சோர்வு போன்றவற்றை எதிர்க்கும். மேலும் இது உடல் எடையைக் குறைக்கவும் உதவும். மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஞாபக சக்தி மற்றும் நரம்புகளின் வளர்ச்சியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

எடுக்கும் முறை

இந்த முதிர்ந்த பூண்டு சாற்றினை உணவுடன் சேர்த்து உட்கொள்ளலாம் அல்லது இது கேப்ஸ்யூல் வடிவிலும் கிடைக்கும் என்பதால், தினமும் ஒரு கேப்ஸ்யூல் எடுப்பது மிகவும் நல்லது.

Sharing is caring!