பூமியில் வாழும் வரை செல்வாக்குடன் இருக்க இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்…

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந:ப்ரசோதயாத்…

எல்லோருக்கும் தெரிந்த மந்திரமான  இது காயத்ரி மந்திரம் என்றழைக்கப்படும். காயத்ரி என்றால் தன்னை ஜபிப்பவர்களை காப்பாற்றுவது என்று பொருள். இதை இயற்றியவர் விஸ்வாமித்ரர். மாதங்களில் நான் மார்கழி என்பது போல் வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரி என்கிறார் பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர். காயத்ரி என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரத்தை இயற்றியதால் இது காயத்ரி மந்திரமாயிற்று. காயத்ரி மந்திரம் 24 அட்சரங்களைக் கொண்டது. எல்லா மந்திரங்களுக்கும் தாய் மந்திரம் காயத்ரி மந்திரம்.

இது சூரிய வழிபாட்டைக் குறிக்கும். தினமும் காலையில் கிழக்குப்பக்கம் பார்த்து கைகளை முகத்துக்கு நேராக கூப்பி மனதை அலைபாயவிடாமல் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். இதே போன்று நண்பகலில் ஜெபிப்பதாக இருந்தால் கிழக்கு பக்கம் அமர்ந்து  கைகளை மார்புக்கு எதிரே  கூப்பியும், மாலை நேரமாக இருந்தால் மேற்கு முகமாக  அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பியும் ஜெபிக்க வேண்டும்.

இது  சாவித்ரி மற்றும் சரஸ்வதி என்னும் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. காரணம் காலையில் காயத்ரி தேவிக்காகவும் நண்பகலில் சாவித்ரிக்காகவும் மாலை வேளையில் சரஸ்வதிக்காகவும் பாராயணம் செய்யப்படுகிறது. மந்திர வழிபாடுகள், மந்திர ஜெபங்கள் செய்வதற்கு முன்பு காயத்ரி மந்திரத்துக்குத்தான் முதல் இடம். மந்திரங்களில் கிரீடம் காயத்ரி மந்திரம் என்கிறார் விவேகானந்தர்.

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கவும், பூமியில் வாழும் வரை செல்வாக்குடனும், உள்ளம் தூய்மையடையவும், ஆபத்துகள் நெருங்காமல் இருக்கவும் தினமும் 1008 அல்லது 108 முறையாவது காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும். குறைந்தது 27 முறையாவது மனதை அலைபாயவிடாமல் மந்திரத்தில் ஒரு முகப்படுத்தி சொல்ல வேண்டும்.

காயத்ரி மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும் மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இம்மந்திரத்தை உச்சரிக்கும் போது  ஒரே மூச்சில் உச்சரிக்காமல் ஓம் என்று பிரணவத்தில் நிறுத்தி இரண்டாவது வியாஹ்ருதிகளான பூர்: புவ: ஸ்ஸூவ என்று நிறுத்தி மூன்றாவதாக தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்தில் நிறுத்தி பிறகு நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்று  இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவதாக தியோ யோந; ப்ரசோதயாத் என்று மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

அன்றாடம்  காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வந்தால் உள்ளம் தூய்மைப்பெறும். மனோதிடம் அதிகரிக்கும். ஆன்மிக சக்தி வலுப்பெறும். இந்த மந்திரத்துக்கு மேலான மந்திரம் எதுவும் கிடையாது என்று சொல்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள். குழந்தைகள், வயதான பெண்களும் இம்மந்திரத்தை ஜெபித்து ஆபத்திலிருந்து காத்துக்கொள்ளலாம். அஷ்ட லஷ்மிகளின் அருளையும் பெற்று நினைத்த காரியத்தை வெற்றி பெறலாம்.

நம் புத்தியை இயங்க செய்யும் பரமாத்மாவை வணங்குவோம் என்பதுதான் இம்மந்திரத்தின் சுருக்கமான பொருள். இம்மந்திரத்தை ஒருமுக மனத்துடன் உச்சரிக்கும் போது மிக அதிக சக்தியும் அதிர்வுகளும் ஆக்கப்பூர்வ சக்தியை நமக்குள் ஏற்படுத்துகிறது என்பதை விஞ்ஞானமும் வியந்து பார்க்கிறது. காயத்ரி மந்திரத்தின் மகிமையை உச்சரிக்க உச்சரிக்க புரிந்துகொள்வீர்கள்…

Sharing is caring!