பெண்களின் கைப்பையில் இருக்கும் உடல் நலத்திற்குக் கேடான பொருட்கள் இவை தானம்..!!

கைக்கு அடக்கமான பைக்குள் அவசரத்திற்குத் தேவையான சில பொருட்களை பெண்கள் வைத்துக் கொள்வதற்காகத் தான் ஹேண்ட் பேக் என்ற கைப்பை தோன்றியது. அதில் மேக்கப் ஐட்டங்கள், பெண்கள் சமாச்சாரங்கள் முதல் மணிபர்ஸ், சாவிக் கொத்துக்கள் வரை வைத்துக் கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம்.இப்போது அது ஒரு நவநாகரீக அடையாளங்களில் ஒன்றாகி விட்டது. பல அளவுகளில், பல வண்ணங்களில், பலவிதமான ஸ்டைல்களில் கைப்பைகள் குறைவான விலைகளில் கிடைக்கின்றன. சில கடைத் தெருக்களில் அவற்றைக் கூவிக் கூவி விற்பதையும் காணலாம்.

இந்த அழகான கைப்பையில் அவசியமான சில பொருட்களை மட்டும் வைத்துக் கொண்டால் தான் அழகு. ஆனால் இப்போதெல்லாம் பல தேவையில்லாத கசடுகளும் அடைக்கப்பட்டுக் கொண்டு, பையை வீங்க வைத்துக் கொண்டுள்ளன. அதுபோன்ற சில தேவையில்லாத பொருட்கள் உங்கள் உடல் நலத்துக்கும் கெடுதல் என்று நீங்கள் அறிவீர்களா?தேவையில்லாமல் கைப்பையில் அடைபட்டுக் கிடக்கும் அத்தகைய 5 பொருட்களை நாம் இப்போது பார்க்கலாம். அவற்றை உடனே கடாசி விட்டால் தான் உங்களுக்கு நல்லது

தண்ணீர் பாட்டில்:அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்காக ஒருமுறை மட்டுமே உபயோகித்து எறிந்து விடக் கூடிய பாட்டில்களில் எல்லாம் தண்ணீரை நிரப்பிக் கொண்டு அதை கைப்பையில் வைத்துக் கொள்வது நல்லதல்ல. இதுப்போன்ற பாட்டில்களில் நாப்தலீன் என்ற வேதிப் பொருள் இருப்பதால் அது தண்ணீருடன் கலந்து விஷத் தண்ணீராக மாறி விடும். உஷார்! இதுபோன்ற பாட்டில்களைத் தூக்கி எறிந்து விட்டு, ஆரோக்கியமான அலுமினியம் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் செய்யப்பட்ட பாட்டில்களில் தண்ணீரை அடைத்து வைத்துக் கொள்வது நல்லது.

கைத்துண்டுகள்/டிஸ்யூ பேப்பர்கள்:பல பெண்கள் கைத்துண்டுகள் அல்லது டிஸ்யூ பேப்பர்களைக் கொண்டு மூக்கை நன்றாகச் சிந்தி விட்டு, அவற்றை மறுபடியும் கைப்பைக்குள்ளேயே ‘பத்திரப்படுத்தி’ வைத்துக் கொள்கிறார்கள். அது கைப்பைக்குள்ளேயே இருந்து கொண்டு எவ்வளவு வைரஸ்களைப் பரப்பும் தெரியுமா? இப்படியே அடிக்கடி அவற்றை எடுத்துப் பயன்படுத்துவதால் காய்ச்சலும் சளியும் வேகமாகத் தொற்றிக் கொள்கிறது. எனவே கைத்துண்டுகள் அல்லது டிஸ்யூ பேப்பர்களைப் பயன்படுத்தி விட்டு அவற்றை மீண்டும் கைப்பைக்குள் வைக்கும் பழக்கத்தை விடுங்கள்.

மேக்கப் பொருட்கள்:பெரும்பாலான பெண்களின் கைப்பைக்குள் நாள்பட்ட மேக்கப் சாமான்கள் குப்பையாக நிறைந்து கிடக்கும். காலாவதியான பொருட்களை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் கைப்பைக்குள் வைத்திருந்தால், அதில் பூஞ்சை பிடித்துக் கொண்டு, பாக்டீரியாக்களின் குடியிருப்பாகக் கைப்பை மாறிவிடும். இத்தகைய பொருட்கள் பெண்களின் அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் கெடுதலாகும். ஜாக்கிரதை!

மொபைல் போன்கள்:பெண்களே, உங்கள் பர்ஸுக்குள்ளோ, கைப்பைக்குள்ளோ மொபைல் போன் வைத்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். காலம் போகிற போக்கில், அனாவசிய அழைப்புகள் அடிக்கடி வந்து தொல்லை கொடுப்பதால், மனத்திற்கும், உடலுக்கும் நிறையக் கேடுகள் விளைகின்றன. நீண்ட நேரம் செல் போனைப் பயன்படுத்துவதும் ஆரோக்கியமற்ற செயல்தான்.

வெயிட்டான பொருட்கள்:இன்னும் சிலர் தங்கள் கைப்பைக்குள் தேவையில்லாத பொருட்களை எல்லாம் திணித்து, அதன் வயிற்றை வீங்க வைத்து விடுவார்கள். விளைவு, கைப்பையின் அடிப்பாகம் அல்லது பக்கவாட்டில் கிழிந்து தொங்கும்; கைப்பையின் பிடிகள் கிழிந்து விடும். மேலும் தேவையில்லாத பொருட்களை அடைத்து வைத்திருப்பதால், காற்றுப்புக வழியின்றி அவற்றில் நச்சுத்தன்மை உருவாகிவிடும் ஆபத்து உள்ளது. அளவுக்கு அதிகமான எடை காரணமாக, அவற்றைத் தூக்கும் போது கழுத்து வலி, முதுகு வலி ஏற்படலாம்; உங்கள் அழகான நடை கூட மாறக் கூடும்.

Sharing is caring!