பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா?

பித்ரு கடன்  செலுத்துவது, ஹிந்துக்களுக்கு முக்கிய கடமையாக கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் இல்லாமல் இறப்பவர்களுக்கு யார் தர்ப்பணம், திதி கொடுப்பார்கள்?

மேலும், பலருக்கு தங்களின் முன்னோரின் இறந்த திதி தெரியாது. இவர்கள், எப்படி திதி  கொடுப்பது?
தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு எப்படி திதி  கொடுப்பது? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையாக இருக்கிறார், லட்சுமி நாராயண பெருமாள்.

செங்கல்பட்டு அருகே, நென்மேலி எனும் கிராமத்தில் அமைந்து உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில், சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட தலமாகப் போற்றப்படுகிறது. செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த திருக்கோவில்.

இந்தக் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி, சிரார்த்த ஸம்ரட்சண நாராயணர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.  இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம், அர்க்ய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் அழைக்கப்படுகிறது.  காசி மற்றும் கயாவுக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது.

ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்த ஸ்ரீயாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்த யக்ஞ நாராயண சர்மா – சரஸ வாணி தம்பதி, இந்தக்  ஆலயத்தின்  பெருமாளின் மீது, அதீத  பக்தி கொண்டிருந்தனர். இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தை, இந்த ஆலயத்தின் பணிகளுக்கு  செலவு செய்து விட்டனர்.

இதனால், அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  அரச தண்டனையை ஏற்க விரும்பாமல், திருவிடந்தை ஆலய  திருக்குளத்தில் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். எனினும், தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மன வருத்தத்துடன்  இறந்தனர். ஆனால், அவர்களின் மனவருத்தத்தை தீர்க்கும் வகையில், இந்த  ஆலயத்தின் பெருமாளே, தம்பதிக்கு ஈமகடன்கடன்ளை செய்ததாக, கோவிலின் தல வரலாறு  கூறுகிறது.

Sharing is caring!