பெற்றோர்களின் சுயநலத்தினால் மனநிலை பாதிக்கப்படும் குழந்தைகள்!

நாம் குழந்தையாக இருக்கும் பொழுது எப்படியிருந்தோமோ அவ்வாறு தான் இன்றைய குழந்தைகள் இருக்கின்றனரா? என்பதையும் இதற்கு பெற்றோர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

நாம் குழந்தையாக இருக்கும் பொழுது அண்டை வீடுகளில் இருக்கும் குழந்தைகளுடன், விளையாடுவது மட்டுமின்றி அதிகமான நண்பர்களை பெறுவதும், அவர்களிடமிருந்து பல நல்ல குணங்களைக் கற்றுக்கொண்டு வந்தோம்.

ஆனால் இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் வெளியில் சென்று விளையாடுவதில்லை. சில வீடுகளில் பெற்றோர்களே அதற்கு அனுமதிப்பதில்லை. காரணம் குழந்தை மண்ணில் விளையாடினால் அசுத்தம் என்றும், உடல்நிலை முடியாமல் ஆகிவிடும் என்று பல பெற்றோர்கள் தங்களது பெற்றோர்களை கூண்டுக்குள் அடைத்த பறவைகள் போன்று வீடுகளில் வைத்து வளர்த்து வருகின்றனர்.

ஆனால் இன்று பெரும்பாலான மருத்துவர்கள் கூறும் அறிவுரை என்னவென்றால், குழந்தைகளை வெயிலிலும், மண்ணிலும் விளையாட விடுங்கள் என்பது தான். அதுதான் நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதாகவும் கூறுகின்றனர். அவ்வாறு விளையாட அனுமதிக்காத குழந்தைகள் சிறு விடயத்திற்கு கூட பெரிய பாதிப்பினை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இன்று குழந்தைகள் அடிமையாகி இருப்பது செல்போன் மற்றும் தொலைக்காட்சி இவைகளுக்குத்தான். செல்பேனில் கேம் விளையாடவும், கார்ட்டூன் சேனல்களை அவதானித்துக்கொண்டும் இருக்கின்றனர்.

கார்ட்டூன், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்ட நிலையில் குழந்தைகளை, உணவு சாப்பிட வைக்கவும், பெற்றோர் அவர்கள் வேலைகளில் தொந்தரவின்றி செய்யவும், குழந்தைகளை கார்ட்டூன் பார்க்க அனுமதிக்கிறார்கள். ஆனால் கார்ட்டூன் பார்ப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை அவர்கள் அறிவதில்லை.

கார்ட்டூன் பார்ப்பது குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பெரிதாக பாதிப்பதாகவும், கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாகும் போது, குழந்தையின் கற்பனை திறன் பெரிதும் பாதிக்கப்படும்.

கார்ட்டூன்கள் முன் அதிக நேரம் செலவழிப்பது குழந்தைகளுக்கு தனிமை மனப்பான்மைக்கும், அலட்சிய மனப்பான்மைக்கும் வித்திடும். இதனால், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, அவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி குழந்தைகள் தூங்குவதற்கு முன்பு கார்ட்டூன்ஸ், திகில் காட்சிகள், மனநிலையை பாதிக்கும் படங்கள் போன்றவைகளை பார்க்க அனுமதிப்பதை தவிருங்கள். ஏனென்றால், அந்த பாதிப்புகள் அவர்களின் தூக்கத்தை பாதிக்கும். மேலும் குழந்தைகளின்நினைவாற்றல் குறைந்து மந்தமாக இருப்பதற்கு பெற்றோர்கள் காரணமாகிவிடக்கூடாது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு உதாரணமாக திகழ வேண்டுமே தவிர, குழந்தைகளின் தொல்லை இருக்கக்கூடாது என்பதற்கு தொலைக்காட்சியை போட்டுவிட்டு, ரிமோட்டை அவர்கள் கையில் கொடுத்துவிட்டு நமது வேலைகளை செய்வதற்கு செல்லாமல், அவர்களோடு அதிகமான நேரங்களை செலவழிப்பதற்கு கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும்.

Sharing is caring!