பேரீச்சம் பழத்தின் நன்மைகளும், தீமைகளும்!

பேரீச்சம் பழத்தில் அதிக‌ப்படியான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் பொட்டாசியம், காப்பர், நார்ச்சத்து, வைட்டமின் பி6, மாங்கனீசு, மக்னீசியம் போன்றவை உள்ளன.

கண் சம்மந்தமான பிரச்னைகளை சரி செய்யக்கூடிய வைட்டமின் ‘ஏ’ சத்துக்களை அதிகளவில் கொண்டுள்ளது பேரீச்சம்பழம். இதைதொடர்ந்து உட்கொண்டு வந்தால் மாலைக் கண் போன்ற பிரச்னையை கூட சரி செய்து விடும்.

மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளை சரி செய்ய கூடிய அற்புத மருந்தாக பேரீச்சம்பழம் அமைந்துள்ளது.

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி, நரம்பு தளர்ச்சி போன்ற கோளாறுகளை சரி செய்கிறது. மேலும் ஞாபக சக்தியை பெருக்க பேரீச்சம்பழத்துடன் பாதாம், பால் கலந்து சாப்பிட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால்,பிரசவத்திற்கு பின்னர் உண்டாகும் உடல் எடையை கட்டுப்படுத்த முடிவதுடன், தாய் -சேய் இருவருக்கும் தேவையான இரும்பு சத்தும் கிடைக்கும்.

இதய நோய்களை தடுக்க கூடிய ஆற்றல் கொண்டது பேரீச்சம் பழம். இதில் உள்ள மக்னீசியம், இதய தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தேவைப்படும் பொட்டாசியம், பேரீச்சம் பழத்தில் அதிக அளவில் இருப்பதால், இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர , இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

இரத்த சோகை பிரச்னை உள்ளோர் பேரீச்சம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த அணுக்களின் அளவை அதிகரித்து ரத்தசோகை சரியாகும்.

கால்சியம் சத்து குறைபாட்டால் எலும்பு பிரச்னைக்கு ஆளாகும் நபர்கள் தொடர்ந்து பேரீச்சம்பழம் சாப்பிட்டு வர எலும்பு தேய்மானம் விரைவில் குணமாகும்.

பேரீச்சம் பழத்தில் அனேக நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது..

தீமைகள்:

பேரீச்சம்பழத்தில் அதிகளவு பைபர் உள்ளது. நமது உடலுக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 35 சதவிகிதம் மட்டுமே தேவைப்படும். அதிகமாக பேரீச்சை சாப்பிட்டால் செரிமான கோளாறுகளை சந்திக்க நேரிடும்.

பேரீச்சம் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதனால் வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். உலர்பேரீச்சம் பழத்தில் இருக்கும் ஹிஸ்டமின் சிலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும்.

டைப் -2 வகை நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் பற்களை சொத்தையாகி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது,

மெழுகு போன்ற பொருட்களை தடவி விற்பனை செய்யப்படும் பேரிச்சம் பழத்தை வாங்கி உட்கொள்ளும் போது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.

நாள்பட்ட பேரீச்சம் பழத்தை சாப்பிடுவதால் குடலில் அடைப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

நார்ச்சத்து அதிகம் உள்ள பேரீச்சம் பழம், ஒருவயதிற்கும் குறைவான குழந்தைகளின் குடலை பாதிக்கும் அபாயம் உள்ளது.

Sharing is caring!