பொடுகை தடுத்து முடியை பாதுகாப்பது எப்படி ?

பொடுகு (dandruff) என்பது தலையில் உள்ள சருமத்தின் இறந்த செல்கள்  உதிர்தல் ஆகும். இது, இயற்கையாக நடக்கும் செயல் என்றாலும், அளவுக்கு அதிகமாக தலை சருமத்தில் உள்ள செல்கள் உதிர்வதனால் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடுவதுடன், முடி வளர்ச்சியையும் இது பாதிக்க கூடும் . இந்த தொந்தரவு பொதுவாக வயது வந்த ஆண், பெண் ஆகியோரை அதிகம் பாதிக்கிறது.  முறையான உணவு கட்டுப்பாடு இன்மை , மன அழுத்தம், சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் பொடுகு பிரச்னை ஏற்படக்கூடும். வெள்ளை நிற செதில்கள் அடிக்கடி உதிர்ந்த வண்ணம் இருக்கும் இந்த பொடுகு தொந்தரவு வராமல் தடுக்கும் சில வழி முறைகளை இங்கு பார்க்கலாம்.

முடியை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஷாம்புவில் கலந்துள்ள கெமிக்கல் இது போன்ற பொடுகு பிரச்னையை கொண்டு வரும் காரணிகளில் ஒன்று. எனவே தலையை சுத்தம் செய்ய கெமிக்கல் இல்லாத, மூலிகை ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும்.


தலையை அழகு படுத்த பயன்படுத்தும் ஹேர் ஜெல், ஹேர் ஸ்ப்ரே, முடிக்கு வண்ணம் தீட்ட பயன்படுத்தும் கலர், போன்றவை உங்களை அழகாக காண்பித்தாலும், உண்மை என்னவென்றால் இவை தலையின் சர்மத்தை வறண்டு போக செய்து பொடுகு தொந்தரவுகளை அதிகப்படுத்தும். அதற்கு பதிலாக இயற்கையாக தயாரிக்கப்படும் கூந்தல் வண்ணங்களான கென்னா போன்றவற்றை பயன்படுத்தலாம்.

மருத்துவரின் ஆலோசனைப்படி பொடுகை கட்டுப்படுத்தும் ஷாம்பு, எண்ணை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும், அதோடு சரியான உடற்பயிற்சியை மேற்கொண்டு ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க வேண்டும். 


உணவு கட்டுப்பாடு மிக முக்கியம். பி வைட்டமின் அதிகம் உள்ள உணவுகள் பொடுகு தொந்தரவை தடுக்கும் தன்மை கொண்டவை. சமச்சீர் உணவுகளை உட் கொள்ள வேண்டும். பச்சை காய்கள், பழங்கள் மற்றும் இயற்கை சல்ஃபர், முட்டைகோஸ், முட்டை, வெங்காயம், உள்ளிட்ட உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.


ஒவ்வொரு முறை குளியலுக்கு பிறகும் கண்டிஸ்னர் பயன்படுத்தலாம். இது உங்களின் முடி வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ளும். இதனால் தலையின் சருமம் காய்ந்து உதிர்தல் கட்டுப்படுத்தப்படும்.   

முறையான யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளவேண்டும்.மூச்சுப்பயிற்சி  உடல், மன  ஆரோக்யத்தை மேம்படுத்துவதற்கும், முடியின் ஆரோக்யத்தை உறுதி படுத்தவும் உதவுகிறது.

Sharing is caring!