போதும் என்னும் மனம் கொண்ட மனிதர்கள் குறைந்து வருகிறார்களா?

கயிலையில் பார்வதி தேவியும், சிவப்பெருமானும் பேசிக்கொண்டிருந்தார்கள். சிவபெருமான் அவ்வப்போது பக்தர்களின் குரலுக்கு செவிசாய்த்துக் கொண்டிருந்தார். பார்வதி தேவிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “எப்படி சுவாமி என்னிடமும் கவனமாக பேசுகிறீர்கள்.

உலகில் உள்ள ஜீவராசிகளையும் இயக்குகிறீர்கள். மேலும் பக்தர்களின் குரலுக்கும் செவிசாய்க்கிறீர்கள். உங்களால் மட்டும் எப்படி கவனம் சிதறாமல் இருக்க முடிகிறது” என்று கேட்டாள். “வழக்கமான பணிகள் தானே” என்றார். பார்வதி தேவி குறும்பாக சீண்டினாள் “ஆனாலும் என்ன பிரயோஜனம் வரும் அனைவருக்குமா அருள் புரிகிறீர்கள்?” என்றாள்.

சிவன் சினம் கொள்ளாமல் புன்னகைத்தார். “எண்ணம் போல்தான் வாழ்வு. என் மீது அன்பு கொண்டு என்னை சரணடைபவர்களுக்கு அவர்கள் வேண்டியது எல்லாமே கிடைக்கும். வா உனக்கு நேரில் காட்டுகிறேன்” என்று பூலோகம் அழைத்து வந்தார். கோவிலின் கருவறையின் அருகே வயோதிக தோற்றத்துடன்  இருவரும் அமர்ந்தார்கள்.

ஆலயத்தில் முதலில் பக்தன் ஒருவன் வந்தான். நெடுநேரம் கைகூப்பி தொழுதான். வயோதிக தோற்றத்தில் இருந்த சிவனும் பார்வதியும் அவனை அருகில் அழைத்து ”என்ன வேண்டிக் கொண்டாய்.  இங்கு வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றவே நாங்கள் இருக்கிறோம். அதற்காக செல்வமும் கையில் வைத்திருக்கிறோம்” என்றார்கள். ”வேறு  என்ன  இன்னும் ஒரு மாதத்திற்குள்  நான் செல்வந்தனாக வேண்டும் என்று வேண்டினேன்.

உங்களிடம் உள்ள செல்வத்தைக் கொடுங்கள்” என்று அதிகாரமாக கேட்டான். பையில் இருந்து  தங்கக் காசுகளை அள்ளி கொடுத்தார்கள். அதை வாங்கியபடி ”இது எப்படி போதும்” என்று முணுமுணுத்தப்படி சென்றான். இரண்டாவது பக்தன் ஒருவன் வந்தான். அவனும் மனம் உருக வேண்டி நின்றான்.  அவனையும் வயோதிக வேடத்தில் வந்த சிவதம்பதியர் அழைத்து என்ன வேண்டினாய் என்றார்கள். ”எனக்கு என்ன தேவை என்பதை இறைவனிடம் விட்டு விட்டேன்” என்றான்.

முதலாமவனிடம் சொன்னது  போலவே இவனிடம் சொன்னார்கள். ”நீங்களாக பார்த்து கொடுங்கள்” என்றான் பை நிறைய தங்க காசுகளை கொடுத்து அனுப்பினார்கள். அடுத்து வந்த பக்தன் இறைவன் முன்னிலையில் நின்றான். பெறுவதற்கரிய பேறை எனக்கு கொடுத்திருக்கிறாய். மன நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். உனக்கு நன்றி சொல்லவே வந்தேன் என்று வேண்டினான். அவனையும் அழைத்த சிவதம்பதியர் ”உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்கள்.

”எனக்கு தேவையானதை இறைவன் கொடுத்துவிட்டான். என் மீது அன்பு பொழிய அவன் இருக்கிறான். உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி” என்று கூறி சென்றான். அவனது பதிலில் திருப்தியுற்ற சிவதம்பதியர் அவனுக்கு தரிசனம் தந்து அருள் புரிந்தார்கள்.

”இப்போது சொல் பார்வதி தேவியே பக்தர்களின் மனதை பொறுத்தல்லவா நான் அருள் புரிய வேண்டியதாக இருக்கிறது” என்றார் சிவப்பெருமான். அதை ஆமோதித்தாள் பார்வதி தேவி. ஆனால் நடப்பது கலியுகம் அல்லவா. அதனால் போதும் என்னும் மனம் கொண்ட மனிதர்கள் குறைந்து வருகிறார்கள் என்பதே உண்மை.

Sharing is caring!