மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்யும் நபரா நீங்கள்.. ?

மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை பார்த்தல் தான் மணி (பணம்) நிறைய கிடைக்கிறது இந்நாட்களில். இதனால் வீட்டில் செலவிடும் மணி (நேரம்) குறைந்துவிட்டது. மணி (பணம்) கிடைக்கிறது எனிலும், அதைவிட அதிகளவில் வலியும் கிடைக்கிறது. ஆம், நாற்காலியை விட்டு நகராமல் அமர்ந்தே நாள் முழுக்க வேலை செய்வதால், தலையில் தொடங்கி கால் வரை வலி நிறைய கிடைக்கிறது.

இன்று உட்கார்ந்தே வேலை செய்வது எவ்வளவு தவறு என்று பத்து ஆண்டுகள் கழித்து தெரியவரும். ஆனால், அப்போது நீங்கள் சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட என்ன காரணம் என்று சிந்திக்க கூட நேரமில்லாமல் மருத்துவமனையை நோக்கி ஓடிக் கொண்டிருப்பீர்கள்….

இதய பாதிப்புகள்

உடல் உழைப்பின்றி நாம் வேலை செய்வதால் பெரிதும் பாதிக்கப்படுவது நமது இதயம் தான். ஒரே இடத்தில் நாற்காலியை விட்டு நகராமல் நாம் வேலை செய்துக் கொண்டிருப்பதால், உடலில் சேரும் கொழுப்பு கரைவதில்லை. இதனால் இதயத்தை சுற்றி உருவாகும் கொழுப்பு அமிலங்கள் இதய நலனை சீர்குலைய செய்கிறது.

கணையத்தில் கோளாறு

நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்யும் முறையானது, உடலில் ஹார்மோன் சமநிலையை கெடுக்கிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. மேலும் இதே முறை நீண்ட நாட்கள் தொடரும் பட்சத்தில் உங்களுக்கு கணையத்தில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

பெருங்குடல் புற்றுநோய்

உட்கார்ந்தே வேலை செய்வதால் ஏற்படும் உடல்நல அபாயத்தில், பெருங்குடல் புற்றுநோயும் ஒன்று என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இதுமட்டுமின்றி, நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வது மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படவும் காரணியாக இருக்கிறது.

இடுப்பு வலி

ஓர்நாளில் நாற்காலியில் 6-7 மணிநேரம் உட்கார்ந்தே வேலை செய்வது உங்கள் இடுப்பு எலும்பை வலுவிழக்க செய்கிறது. இதுப் போல இடுப்பு வலி உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள், இல்லையேல் பின்னாட்களில் இது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

வயிறு பகுதி

சிலர் குண்டாக இருந்தாலும் தொந்தி கீழே தொங்காது. ஆனால், உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு சிறிய அளவு தொந்தி ஏற்பட்டாலும் தொந்தி தொங்க ஆரம்பித்துவிடும். இதற்கு காரணம் உடல் உழைப்பின்றி வேலை செய்வது தான். உட்கார்ந்தே வேலை செய்வது உங்கள் உடல் அமைப்பை மாற்றிவிடுகிறது.

கால்களில் பிரச்சனை

கால்களை தொங்கவிட்டபடி மணிக்கணக்கில் வேலை செய்வது உங்கள் கால் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக செல்லாமல் தடை செய்கிறது. இதனால், கால்களில் பிடிப்பு, வலி, அசௌகரியமாக உணர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

துல்லியமற்ற மூளை செயல்பாடு

உட்கார்ந்தே வேலை செய்வது உங்கள் மூளை செயல்திறனை மங்கிப்போக செய்கிறது. இது உங்கள் கவனத்தை குறைத்து, மூளையை துல்லையமற்று செயல்பட செய்கிறது.

கழுத்து வலி

நீங்களே இதை உணர்ந்திருக்கலாம், ஒரே இடத்தில் நாற்காலியை விட்டு நகராமல் வேலை செய்துக் கொண்டிருக்கும் போது திடீரென கழுத்தை திருப்ப கூட முடியாத அளவு கடினமான வலி ஏற்படும். இதனால் “Spondylosis” எனப்படும் குணப்படுத்த முடியாத பாதிப்பு ஏற்படலாம்.

தண்டுவடம்

பெரும்பாலும் மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் முதல் பாதிப்பு இந்த தண்டுவட வலி தான். இது தண்டுவட டிஸ்க் எலும்புகளை வலுவிழக்க செய்கிறது. இதிலிருந்து மீண்டுவர நீங்கள் அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

தோள்ப்பட்டை வலி

கணினியில் வேலை செய்யும் நபர்களுக்கு, கையை அசைக்காமல் ஒரே நிலையில், தட்டச்சுப் பலகையுடன் உறவாடும் போது இதுப் போன்ற தோள்ப்பட்டை வலி அதிகமாக ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

Sharing is caring!