மதுரைக்கு சுந்தரேஸ்வரர் வந்த நாள்!

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு நட்சத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆவணிக்கு முக்கிய நட்சத்திரம் மூலம், அந்த ஆண்டின் சீதோஷ்ண நிலையையே நிர்ணயிக்கக் கூடியதாக இந்தநாள் உள்ளது.

காலையில் சூரியன் உதயமாகும் போது மிகுந்த ஒளியுடன் இருந்தால் அந்த ஆண்டு வெயில் கொளுத்தும், மேக மூட்டத்துடன் மறைந்து தோன்றினால் பருவம் தவறி மழை பெய்து வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தும், எப்படிப் பார்த்தாலும் அது அழிவைத் தருவதாகவே இருக்கிறது.

எனவேதான் சம்ஹாரமூர்த்தியான சிவனுக்கு அச்சமயம் விழா எடுத்து அவரைச் சரணடைந்து பிரார்த்திக்கும் நாளாக அக்கால கட்டத்தை அமைத்தார்கள். இதற்காகத்தான் மீனாட்சி கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களின் பெயர்களில் ஆவணி வீதிக்கு மட்டும் ஆவணி மூல வீதி என்று நட்சத்திரத்துடன் இணைத்துப் பெயர் சூட்டினர்.
மாணிக்கவாசகருக்காக சுந்தரேஸ்வரப் பெருமான் மதுரை மாநகருக்கு எழுந்தருளி அருள் பாலித்த தினம் இதுவாகும்.

மாணிக்கவாசகரை  பாண்டிய மன்னன், அவர் தமது கடமையில் இருந்தும், மன்னனின் கட்டளையில் இருந்தும் மீறியதற்காக, சிறையில் இட்டும், நெற்றியில் கல்லை வைத்து சூரியனை நோக்க வைத்தும் தண்டித்தார்.

சுவாமியவர்களை விடுவிப்பதற்காகச் சிவபெருமான் காட்டிலுள்ள நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு வந்து அவரைச் சிறையினின்றும் மீட்டது, ஆவணி மாத மூல நட்சத்திரத் தினமாகும்.

அன்னை சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலம். ஹனுமாரும் மூலம் நட்சத்திரம் தான். ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும். சனியின் தாக்கம் மிகவும் குறையும்.
ஆவணி மூலத்தன்று அனுமனை வழிபட்டு ஆசி பெறுவோமாக.

Sharing is caring!