மனித மனங்களுக்குள் ஆசையை விதைத்தது யார்?

ஆசையே இல்லாத மனிதனுக்கு ஆசையைப் புகுத்தியவர்கள் தேவர்கள். மனிதர்களை உருவாக்கிய போது எல்லோருமே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பாக விட்டுக்கொடுத்து புரிதலோடு வாழ்ந்தார்கள். கிடைத்தவற்றை வைத்து திருப்திகொண்டு எவ்வித எதிர்பார்ப்புமின்றி வாழ்ந்தார்கள். இதனால் கடவுளுக்கு நன்றி சொல்வதோடு அவர்களது கடமை முடிந்தது..

வாழ்வில் ஆசைகள் இல்லாததால் எவ்வித யாகயக்ஞயங்களையும் செய்யவில்லை. யாகத்தின் போது தீயில் போடும் அமிஸ், அமிர்தமாகி தேவர்களுக்கு கிடைக்கும். அவர்களும் மனிதர்களுக்கு தேவையான மழையைக் கொடுத்தார்கள். இவர்களுக்குள் பரஸ்பர அன்பும், உதவியும் பரிமாறப்பட்டன. ஆனால் மனிதர்கள் யாகம் செய்யாததால் தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்காமலிருந்தது. இந்நிலை தொடர்ந்தால் என்ன செய்வது? தேவர்கள் பிரம்மனிடம் ஓடினார்கள்.

”எங்களுக்கு அமிர்தம் கிடைக்கவில்லையென்றால் மனிதர்களுக்கு எங்களால் எவ்வித உதவியும் செய்ய முடியாது. அதனால் மனிதர்களுக்கு வேண்டும் வேண்டும் என்னும் மனநிலையை கொடுங்கள். அவர்களுக்குள் ஆசையை உண்டாக்குங்கள்… படைப்பிலேயே விதைத்துவிடுங்கள்” என்று வேண்டினார்கள்…

”படைக்கும் தொழிலோடு என்னுடைய பொறுப்பு முடிந்துவிடுகிறது. மனிதர்களுக்கு உங்களால் எவ்வித உதவியும் தேவையில்லை போல…. அதனால்தான் உங்களை உரிய முறையில் வணங்குவதில்லை. நீங்கள் மகாலஷ்மியை அணுகுங்கள்..அம்பாள் நினைத்தால் உங்களுக்கு அனுக்கிரகம் கிடைக்கும்” என்றார். தேவர்கள் மகால்ஷ்மியிடம் ஓடினார்கள். தங்களது பிரச்னைகளை கூறினார்கள். மகாலஷ்மியை வழிபட்டு  ஸ்தோத்திரம் படித்தார்கள். மகிழ்ச்ந்த லஷ்மிதேவி ”இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்பவர்கள் செல்வந்தர்களாகவும், மற்றவர்கள் ஏழைகளாகவும் இருப்பார்கள்”  என்றாள்..மகிழ்ந்த தேவர்கள்  திரும்பினார்கள்.

சில காலம் கழித்து மீண்டும் லஷ்மி தேவியிடம் ஓடி வந்தார்கள். எந்த பலனும் எங்களுக்கு உண்டாகவில்லை. மனிதர்கள் ஆசைகளே இன்றி வாழ்கிறார்கள் என்றார்கள்…  ஆசை இருந்தால்தானே எங்களை நினைத்து அதை பெறவேண்டி யாகம் நடத்துவார்கள்.. என்றார்கள். அப்படியானால் மனிதர்களுக்கு ஆசையை உண்டாக்க வேண்டும் என்ற லஷ்மி காமன் என்னும் குழந்தையைக் கொடுத்து நல்லவிதமாக வளர்த்து வாருங்கள். இக்குழந்தை உங்களின் குறைதீர்க்கும் என்றாள்.

காமன் என்பது ஆசை, விருப்பத்தைக் குறிக்கும்.இந்தக்காமன் தான் மனிதர்களின் மனத்தில் நுழைந்து ஆசைகளை உண்டாக்கி இது வேண்டும், அது வேண்டும் என்று தூண்டி பூஜை, யாகம், யக்ஞம் போன்றவற்றைச் செய்யத்தூண்டினான். அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியில் தேவர்களும், ஆசையால் திருப்தியடையாத குணத்தை மனிதர்களும் பெற்றுவிட்டார்கள்..

அதனால்தான் ஆசை என்பது அளவாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.. ஆசைப்படுங்கள்.. அளவோடு…

Sharing is caring!