மனைவியை தானமாக கொடுத்த நாயனார் யார் தெரியுமா?

சிவனடியார்களிடம் கேட்பதற்கு வரைமுறையெல்லாம் கிடையாது. அவர்களிடம் இருக்கும் அவர்களுக்குரிய எந்தப் பொருளை கேட்டாலும் மறுக்காமல் உள்ளன்போடு அளிக்க தயங்க மாட்டார்கள். அவர்களுடைய உயிரான மக்களையும் கூட கேட்கலாம். ஆனால் அவர்தம் இல்வாழ்க்கைத் துணையை கேட்டால் என்ன சொல்வார்கள். அதையும் உள்ளன்போடு செய்து மகிழ்ந்த நாயனார் தான் இயற்பகை நாயனார்.
பூம்புகாரில் வாழ்ந்தவரான இவர் வணிக மரபை சேர்ந்தவர். சிவபக்தியும் வள்ளல் குணமும் கொண்ட சிறந்த மனிதனாரான இவரது பக்தியை கடுமையாக சோதிக்க விரும்பினார் சிவபெருமான். சிவனடியார்களை வரவேற்று மகிழும் இயற்பகை நாயனாரிடம் சிவவேதியராக முதியவராக வந்து நின்றார். சிவன் என்பதை அறியாமல் சிவனடியார் என்று அறிந்த இயற்பகை நாயனார் முதியவரை வரவேற்றார்.

 விருந்தினர் உபசரிப்பு முடிந்ததும் வயோதிக சிவனடியாரிடம் ”தாங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டார் இயற்பகை நாயனார். ”சிவனடியார்கள் கேட்பதை எல்லாம் தாங்கள் மறுக்காமல் கொடுப்பீர்களாமே.. எனக்கு வேண்டியதையும் கொடுப்பீர்களா?” என்று கேட்டார்.  என்னிடம் இருப்பது எல்லாமே இறைவனுடையதுதான். அதை இறையடியார்களுக்கு கொடுப்பதைத்தான் செய்து வருகிறேன். அது என்பாக்கியம்” என்றார் இயற்பகை நாயனார். ”அப்படியானால் உன் அன்பு துணைவியாரை என்னுடன் அனுப்பிவிடு” என்றார் சிவவேதியர்.

இயற்பகை நாயனார் மகிழ்வுற்றார். ”என்னிடம் இல்லாததைக் கேட்டு என்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவீர்களோ என்று நினைத்தேன். மாறாக தாங்கள் என்னை காப்பாற்றிவிட்டீர்கள். இதோ உடனடியாக உங்களோடு என் மனைவியை அனுப்பி வைக்கிறேன்” என்றபடி தனது மனைவியிடம் சென்று நடந்ததைக் கூறினாள்.

இயற்பகை நாயனாரின் மனைவி பதிவிரதை. உத்தமி கணவனின் மறு பேச்சுக்கு பதில் சொல்லாமல் அடியாரின் அருகில் வந்து நின்றார். சிவவேதியர் அவரது கரம்பிடித்து அழைத்து சென்றார். சில அடியில்  தயங்கி நின்றார். அதைக் கண்டு ”வேறு ஏதேனும் தங்களுக்கு தேவையா?” என்றார். ”இந்த ஊர் முழுக்க உங்கள் இனத்தவர் அதிகமாக இருக்கிறார்கள் அதனால் உயர்ந்த மனத்துடன் நீ அவளை அனுப்பினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த ஊர் எல்லையைக் கடக்கும் வரை உன் உதவி எனக்குத் தேவை” என்றார். அவ்வளவுதானே என்றபடி வாளை எடுத்து வந்தார்.

 நடந்ததை அறிந்து அந்த ஊர் மக்களும் அவர் உறவினர்களும் இயற்பகையாரை ஏசினார்கள். இப்படி செய்யத்தகாத கேவலமான செயலை செய்யலாமா என்று கொந்தளித்தார்கள். எதற்கும் இயற்பகையார் அசைந்து கொடுக்காததால் அவரை எதிர்த்து சண்டையிட்டார்கள். ஆனால் வலிமைமிக்க இயற்பகையார் முன்னிலையில் யாராலும் நிற்க முடியவில்லை.

சண்டையிட திராணி இல்லாதவர்கள் இயர்பகை நாயனாரை நினைத்து அழுதார்கள். ஊர் எல்லை வரை சிவவேதியரையும் தமது மனைவியையும் விட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் திரும்பினார் இயற்பகை நாயனார். சிறிது தூரம் சென்றதும் சிவவேதியரின் ”காப்பாற்றுங்கள்…  காப்பாற்றுங்கள்” என்னும் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தார் இயற்பகை நாயனார்.

 ஆனால் அங்கே அவரது மனைவியார் மட்டுமே நின்றிருந்தார். இருவருக்கும் ஆச்சரியம் உண்டாயிற்று. வானில் இருந்து அசரீரி ஒலித்தது. ”இயற்பகையாரே. உம்மை சோதிக்கவே சிவனடியார் வேடத்தில் வந்தோம். ஊரார்  உம்மையும் என்னையும் வசைபாடினாலும் அதையெல்லாம் துணிந்து எதிர்த்து உமது கொள்கையில் மாறாமல் இருந்தீர். உமது ஈகை குணத்தை உணர்த்தவே நான் இப்படி செய்தேன்.

உங்களை வரவேற்க சிவலோகமே காத்திருக்கிறது” என்றார். இயற்பகையார் பக்தியில் சிலிர்த்தார். விண்ணவர் பூமாரி அவர்களை வாழ்த்தினார்கள். நடந்ததை அறிந்த மக்கள் இயற்பகையாரின் பக்தியைக் கண்டு மெச்சினர். தம் மனைவியருடன் இல்லற வாழ்க்கையில் இன்புற்று சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வாழ்ந்து மறைந்தார் இயற்பகை நாயனார்.

 எல்லா சிவாலயங்களிலும் மார்கழி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று இவருக்கு  குருபூஜை   கொண்டாடப்படுகிறது.

Sharing is caring!