மலட்டுத்தன்மை நீங்க முருங்கை இலை

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்று இப்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும்  25 வருடங்களுக்கு முன்பு  கிராமங்களில் மட்டுமல்ல தற்போது நகரமாக உருமாறியிருக்கும் வீதிகளில்  ஒவ்வொரு வீட்டின் முன்பும் முருங்கை மரம் இருக்கும்.  மின்சாரப்பணியாளர்கள் அவ்வப்போது மின்சார இணைப்புகளைத் தாண்டுகிறது என்று முருங்கை மரக்கிளைகளை வெட்டி அழகுப்படுத்தி செல்வார்கள். வீதியெங்கும் முருங்கைக் கீரைகள் கேட்பாரற்று கிடக்கும். இலவசமாகக் கொடுத்தாலும்  எங்களிடமே இருக்கு என்று மறுத்த காலம் போய் விலை கொடுத்து வாங்கினாலும்  தேவையான போது  முருங்கைக் கீரை கிடைக்கவில்லை என்று  பெரும்பாலான இல்லத்தரசிகள் ஓய்ந்துவிடுகிறார்கள்.

காரணம் முருங்கைக் கீரையில் உள்ள சத்துக்கள் அப்படி…முருங்கை இலைகளை  உருவி  சற்றுத் தளிரான காம்புகளை நறுக்கி விட்டு, தண் ணீரில் அலசி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அந்தத் தண்ணீரில் ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால், உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அல்லது  முருங்கைக் காம்புகளை வேகவைத்து நன்றாக வெந்ததும் அதை கடைந்து வடிகட்டி  மிளகுத்தூள் உப்புதூள் சேர்த்து சூப் செய்து  குடிக்கலாம். நெஞ்சு சளி, நுரையீரலில் உள்ள  சளி களை நீக்கும் அற்புதமான  சத்துக்களைக் கொண்டது முருங்கைக் கீரை.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை  இருக்கின்றன.இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை  உள்ளவர்களின்  உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். கூந்தல் நீண்டு வளரும், நரை முடி குறையும். சரும வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக் கெல்லாம் முருங்கைக் கீரை கை கண்ட மருந்து. முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில்  இருமுறை முருங்கைக்காயை  உண்டு வந்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடை கின்றன. முருங்கை காய் சூப், காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

கர்ப்பப்பையின் குறைகளைப்  போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தைத் துரிதப்படுத்தும். முருங்கை இலை, தாய்ப் பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா,மார்பு சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கு முருங்கைக்  கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும் முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.   முருங்கைக்கீரையில் முருங்கை சாம்பார், முருங்கைக் காம்பை கொண்டு சூப்,ரசம், முருங்கைப் பொறியல், முருங்கை போண்டா, முருங்கை அடை என்று பலவகை உணவுகளைச் செய்து  அசத்தலாம். ஆரோக்யமும் அதிகரிக்கும்.

Sharing is caring!