மழைக்காலத்தில் உடல் நலனை பராமரிக்க என்ன செய்யணும்!!!

சென்னை:
பருவ மழைக்காலத்தில் நம் உடலை பராமரிக்கும் முறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

தொடங்கிவிட்டது வடகிழக்குப் பருவமழை. தமிழகத்துக்குப் போதுமான தண்ணீரை வழங்கும் மழையாக புகழப்படும் மழை இந்த ஆண்டில் சற்று கூடுதலாகவே இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள். டிசம்பர் வரையிலும் இம்மழைக்காலம் நீடிக்கும் என்பதும் தெரிந்ததுதான்.

மழைக்காலத்தில் காற்றின் ஈரப்பதம் கூடி, துணிகள் ஒன்றும் காயாது. பாதையெங்கும் தண்ணீர் தேங்குவதால் அங்கங்கே கால்களில் ஈரம் படவும் அதிக வாய்ப்புள்ளது. மழைக்காலம் என்றாலே பூஞ்சையால் ஏற்படும் படர்தாமரை நோய் அதிகம் உண்டாகும்.

ஏற்கனவே, இந்தியா முழுக்க படர்தாமரை பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் ஈர உடையை அணிபவர்களுக்கு எளிதாக படர்தாமரை பரவக்கூடும் அல்லது ஏற்கனவே படர்தாமரை பாதிக்கப்பட்டவர்கள் ஈர உடையை அணியும்போது படர்தாமரை பாதிப்பு குணமாக அதிக நாட்கள் பிடிக்கும்.

ஈரப்பதமான இடங்களில் பூஞ்சைகள் நன்கு வளர ஆரம்பிக்கும் என்பதால், பூஞ்சைத் தொற்று வராமல் இருக்க எப்போதுமே நம் உடலை ஈரம் இல்லாமல் நன்கு துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். உள்ளாடைகளை முடிந்தளவு எலாஸ்டிக் (Elastic) அதிகம் இல்லாததாக தேர்ந்தெடுக்க வேண்டும். எலாஸ்டிக் ஈரப்பதத்தை உறியாது.

வெளிர்நிறத்தில் தூய பருத்தியினால் செய்யப்பட்ட உள்ளாடைகளையும், அப்படியே எலாஸ்டிக் உள்ள உள்ளாடையாக இருந்தால், அந்த எலாஸ்டிக் இருக்கும் பகுதி துணியால் மூடியிருக்கும் உள்ளாடைகளைத் தேர்ந்தெடுத்து வாங்கி உபயோகிக்கலாம்.

இவ்வாறு செய்யும்போது வியர்வை நன்கு உறிஞ்சப்படும். அது மட்டுமில்லாமல், வெளிர் நிறம் உள்ளாடைகளில் கொஞ்சம் அழுக்கு இருந்தாலும் வெளியில் பளிச்சென தெரியும். அப்போதுதான் நாம் அதை நன்கு சுத்தப்படுத்துவோம். படர் தாமரையால் பாதிக்கப்பட்டிருக்கிற பலரை கவனித்துப் பார்த்தால் அவர்கள் அணிகிற ஆடைகளே முதல் காரணமாக இருப்பதை அறிய முடியும்.

இப்போது பல பெண்கள் ‘டைட்ஸ்’ அணிகிறார்கள். அவர்களில் சிலர் உள்ளாடைகளே அணியாமல் வெறும் ‘டைட்ஸ்’ அணிகின்றனர். அது மிகவும் தவறு. ‘டைட்ஸ்’ பொதுவாக நைலான் துணிகளால் செய்யப்படுவதால், அவை நன்கு விரிவடைகின்றன. காட்டன் அளவுக்கு நைலான் துணி ஈரத்தை உறியாது.

மழைக்காலம் மற்றும் குளிர்காலம்தான் டைட்ஸ் அணிய உகந்தது என்றாலும், உள்ளே ஈரம் இல்லாத பருத்தி உள்ளாடை அணிந்து மேலே டைட்ஸ் அணிய வேண்டும்.

இதேபோல் ஆண்களின் பேவரைட் ட்ரஸ் ‘ஜீன்ஸ்’. காரணம் ஜீன்ஸை துவைக்காமல் அப்படியே மாதக்கணக்கில் அணிந்து கொள்ளலாம் என்பதே. துவைக்காத ஜீன்ஸில் கிருமிகள் நிறைய இருக்கும். ஆகையால் படர் தாமரையால் பாதிக்கப்பட்டவர்கள் அது முற்றிலும் குணமாகும் வரை ஜீன்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும்.

அதிலும், ஈரம் இல்லாத ஜீன்ஸ் அணிவது முக்கியம்.
குடும்பத்தில் ஒருவருக்கு படர்தாமரை இருந்தால் கூட, அவர்களது துணியை தனியாக துவைக்க வேண்டும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!